தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!
அரசு கட்டிடம் கட்டும் நிகழ்வைத் தொடங்க முஸ்லீம் மத சடங்குகளை மட்டுமோ அல்லது கிறிஸ்துவ மத சடங்குகளை மட்டுமோ செய்திருந்தால் அதை ஏற்பார்களா? கலவரம் நடத்தி சூறையாடப்பட்ட ‘சக்தி’ இன்டர்நேஷனல் பள்ளி, ‘செயின்ட் ஜான்’ பள்ளியாக இருந்திருந்தால், ஒன்றிய அரசின் மகளிர் ஆணையம் அடுத்த சில மணி நேரத்திலே விசாரணைக்கு வந்திருக்கும்! பா.ஜ.க.வும் இந்து முன்னணியும் இப்போது மவுனம் காப்பதுபோல இருந்திருப்பார்களா? ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் புரோகிதர்களை மட்டும் வைத்து சடங்கு செய்தால் அது இயல்பானதாக கடந்து போய் விடுகிறார்கள். பொதுப் புததி அவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது.
அரசும் – மதமும் விலக்கி வைக்கப்பட வேண்டும். அதுவே மதச் சார்பின்மை என்று சொன்னால் மதத்தை விலக்குவது கூடாது; அனைத்து மதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்று பதில் கூறுகிறார்கள். அப்படித்தான் நடக்கிறதா?
1968இல் அண்ணா முதலமைச்சராக வந்தவுடன் தலைமைச் செயலாளராக இருந்த சி.ஏ. இராமகிருட்டிணன், அரசு அலுவலகங்களில் படிப்படியாகக் கடவுள் படங்களை அகற்றிட வேண்டும் என்று துறைத் தலைவர்களுக்கு அரசாணை பிறப்பித்தார். 1993 டிசம்பர் 13ஆம் தேதி நிர்வாக சீர்திருத்தத் துறை (ஞநசளடிnயேடந யனே ஹனஅinளைவசயவiஎந சுநகடிசஅள னுநயீயசவஅநவே) – அரசு நிகழ்ச்சிகளில் மதச் சடங்குகளை நடத்தக் கூடாது. அரசு வளாகங்களில் வழிபாட்டுத் தலங்களைக் கட்டக் கூடாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவைக் கட்டாயம் அமுல்படுத்த வேண்டும் என்று 2010இல் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அப்போது நடந்த ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நீதிமன்றத் தீர்ப்பையேற்று 1993ஆம் ஆண்டு உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டது. உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே இருநதன. நடைமுறையோ நேர் எதிராகவே இருந்தது. அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள், போக்குவரத்துக் கழகங்கள், இந்துப் பண்டிகைகளை விழாக்களாகவே கொண்டாடின. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் இதுதான் நிலை. பல அமைச்சர்கள் அரசு நிகழ்வுகளில் நடக்கும் சடங்குகளில் பங்கேற்கின்றனர்.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அரசுத் துறையில் எல்லைகளைக் கடந்து அனைத்து மதச் சடங்குகளிலும் பங்கேற்கிறார். சொல்லப் போனால் அறநிலையத் துறை இந்து மத சடங்குகளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று விளம்பரமே செய்கிறது.
காவிரி நீர் வரும் காலத்தில் ஆடிப் பெருக்கு விழாவை எப்படிக் கொண் டாட வேண்டும் என்று அறநிலையத்துறை சார்பில், அரசு முத்திரையோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் படத்தோடு தன்னுடைய படத்தையும் போட்டு இந்து தேவியின் படம் ஒன்று போட்டு ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு நீண்ட கதை அடங்கியிருக்கிறது.
குடும்ப உறவுகள் மிக நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால், மேட்டூர் அணை திறந்ததற்குப் பிறகு, காவிரி தண்ணீர் வந்ததற்குப் பிறகு அந்தக் காவிரியில் சுமங்கலிகள் பூஜை செய்து முழுக்குப் போட வேண்டும் என்று அந்தப் புராணக் கதை கூறுகிறது. செல்வத்திற்கு அதிபரான குபேரனின் மகள் தான் காவிரி. காவிரியின் ஆணவத்தை அடக்க அகத்தியர் காவிரியை தனது கமண்டலத்தில் பிடித்துக் கொண்டார். அதைக் காக்கை உருவில் வந்த விநாயகன், கமண்டலத்தைப் பிடுங்கி உருட்டிவிட்டார். தண்ணீர் எல்லா இடங்களிலும் பரவியது. அப்போது தண்ணீர் வருகிற இடத்தில் காவிரித் தாயை கர்ப்பமாகக் கருதி, கர்ப்பிணிகளுக்குப் பிடித்த உணவுகளான சாம்பார் சாதம், புளியோதரை, கற்கண்டு சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்ற சைவ உணவுகளை மட்டும் சுமங்கலிகள் அதாவது கணவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிற தாலியோடு இருக்கிற சுமங்கலிகள் கொண்டு வந்து காவிரியில் வைத்து குளிக்க வேண்டும். குளித்தப் பிறகு மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, பிள்ளையாருக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்து பிறகு சாப்பாடு, காதோலை, கடுகமணி மாலை, பூ பொட்டு, தாலிக் கயிறு, வாழைப்பழம் வைத்து பூசை செய்து தோத்திரம் பாடி, தூபதீபம் ஏற்றி பூசையை முடிக்க வேண்டும்.
இப்படி செய்தால் ஒவ்வொரு குடும்பத்தின் உறவுகளும் செழிப்பாக செழித்து வளரும் என்று இந்து அறநிலையத் துறை அரசு சார்பில் விளம்பரம் செய்து மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கிறது.
கோவிலையும், அதன் உடைமைகளையும் காப்பாற்ற வேண்டியதும், சடங்குகளை முறைப்படி நடத்த வேண்டியதும் அறநிலையத் துறை கடமை. அதை நாம் மறுக்கவில்லை. ஆனால் எல்லைகளைத் தாண்டி இத்தகைய பிரச்சாரங்களை செய்வது அறநிலையத் துறையின் வேலையா? அதிலும் அரசு சார்பில் இவைகள் நிகழ்த்தப்பட வேண்டுமா?
இந்த நிலையில் தர்மபுரியில் திமுக எம்.பி. செந்தில் குமார் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அங்கே அரசு விழா ஒன்றிற்காக இந்து மத சடங்கு படி பூமி பூஜை போட்ட போது அதை அவர் தட்டிக் கேட்டிருக்கிறார். ஏன் இந்து மதப்படி மட்டும் பூஜை செய்கிறீர்கள்? பிற மதத்தவர்களை, பகுத்தறிவாளர்களை ஏன் அழைக்க வில்லை? இங்கே நடப்பது இந்து மத ஆட்சி அல்ல. திராவிட மாடல் ஆட்சி! என்று அவர் சுட்டிக்காட்டி எதிர்ப்பைத் தெரிவித்தது உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
கொள்கை உணர்வாளர்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தட்டிக் கேட்பார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.
பெரியார் முழக்கம் 21072022 இதழ்