ரிக்வேதம் – வேதக் கணிதப் பெருமை: கருநாடக அரசின் மதவெறி பாடத் திட்டம்
மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும், இந்துத்துவா அடிப்படையில் பாடத்திட்டங்களை உருவாக்கவும் கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அண்மையில், மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு பற்றிய பாடங்களை நீக்கி விட்டு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான கே.பி. ஹெட்கேவார் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோர் பற்றிய பாடங்களை அது சேர்த்தது. இந்நிலையில்தான், கிரேக்கக் கணித வியலுக்குப் பதிலாக, இந்தியாவில் தோன்றிய வேதக்கணிதத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், நியூட்டன் மற்றும் பிதாகரஸ் ஆகியோரின் கண்டு பிடிப்புக்கள் என்று கூறப்படுபவை இந்தியாவில் வேதக் காலத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது என்றும் புதிய சர்ச்சை யை கர்நாடக பாஜக அரசு கிளப்பியுள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கர்நாடக மாநில பாஜக அரசு 26 கல்விக்கொள்கைக் குழுக்களை அமைத்தது. வாரணாசியில் உள்ள ஐஐடி-யின் பேராசிரியர் வி. ராமநாதன் தலைமையிலான இந்தக் குழுக்கள், தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களை ஆராய்ந்து, அதுதொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியிருக்கிறது. அதில், கூறப்பட்டிருப்ப தாவது:
ஐரோப்பாவில் தோன்றிய கணிதக் கருத்துக்களுக்கு மாறாக, பண்டைய ‘பாரதத்தில்’ இருந்து கணிதக் கருத்துகளை ஒருங்கிணைக்க வேண்டும். ‘வேகமான மனக் கணக்கீட்டிற்கு’ வேதக் கணிதத்தின் ‘சில சூத்திரங்களை’ அறிமுகப்படுத்த வேண்டும். பூதசாம்கியா என்பது சமஸ்கிருதத்தில் பொதுவான பெயர்ச் சொற்களைப் பயன்படுத்தி எண்களைப் பதிவு செய்யும் முறையாகும். எளிதில் நினைவுகூருவதற்கான எண் குறியீட்டைக் கொண்டது கடாபயாதி அமைப்பு ஆகும். அந்த வகையில், மனுஸ்மிருதி மற்றும் பூதசங்கியா, கடாபயாதி சங்கியா போன்ற புராதன எண் முறைகளை மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அறி முகப்படுத்த வேண்டும். கிரேக்க கணித வியலாளர்களான பிதாகரஸ் மற்றும் ஹெரான் ஆகியோரின் கண்டுபிடிப்பு தொடர்பான சித்தரிப்புகளை அகற்ற வேண்டும். கிரேக்கக் கணிதம் பற்றிய பிரிவுகள் குறைக்கப்பட வேண்டும், பிதாகரஸ் தேற்றம் மற்றும் ஆப்பிள் தலையில் விழுந்ததை வைத்து நியூட்டன்தான் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்று கூறப்படுபவை எல்லாம் தவறான தகவல் களாகும். இவையெல்லாம் வேத காலத்திலேயே உருவானதாகும்.
உலகின் பழமையான மற்றும் பழமை யான இலக்கியம் என்று உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ரிக்’ வேத காலத்திலிருந்தே நமது நாகரீகத்தில் ஆழ்ந்த விசாரணை மற்றும் பகுப்பாய்வு உணர்வு வேரூன்றியிருக்கிறது என்ற மறுக்க முடியாத உண்மையை நமது மாணவர்கள் அறிந்துகொள்ளவும், ஒருங்கிணைக்கவும், பாராட்டவும் கூடியதாக நமது பாடப்புத்தகங்கள் இருக்க வேண்டும். சமஸ்கிருதத்தை மூன்றாம் மொழியாக கட்டாயம் சேர்க்க வேண்டும். ஆயிரக்கணக் கான மொழிகள் உள்ள நாட்டில், குறைந்தது மூன்று மொழிகளாவது கற்பிக்கப்பட வேண்டும். அதாவது, மாநில மொழியுடன் ஆங்கிலம் மற்றும் மூன்றாவது பாரதிய மொழி கற்பிக்கப்பட வேண்டும். அந்த மூன்றாவது பாரதிய மொழியில், சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை தர வேண்டும். சமஸ்கிருதம் என்பது பெரும் பான்மையான இந்திய அறிவைக் கொண்டி ருக்கும் மொழியாகும். மேலும் சமஸ்கிரு தத்தின் அடிப்படை அறிவு வெளிநாட்டு மொழிகள் உட்பட வேறு எந்த மொழியையும் தேர்ந்தெ டுக்க மாணவர்களை தயார்ப்படுத்தும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கல்வியாளர் நிரஞ்சனாராதியா இந்த மாற்றங்களை அறிவியலற்றது மற்றும் பிற்போக்குத்தனமானது என்று விமர்சித்துள் ளார். “அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களில் பல பிற்போக்கு மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. புராணக் கதை களை அடிப்படையாகக் கொண்ட இந்த வாதங்கள் அறிவியலற்றவை என்று ஏற்கெனவே அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டு விட்டன” என்று நிரஞ்சனாராத்யா குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் முழக்கம் 14072022 இதழ்