உயர்கல்வி அமைச்சர் பொன்முடி- பாராட்டத்தக்க அறிவிப்பு ஆளுநர் பட்டமளிப்பு விழா – அரசு புறக்கணிப்பு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அரசியல் பரப்புரை செய்து வருகிறார். அவர் பாஜகவின் பிரச்சார செயலாளராகவே மாறிவிட்டார் போல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திரியைக் கொளுத்தி போடுகிறார். குறிப்பாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அவர் அரசியல் மேடையாக்கி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவது இல்லை என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் அறிவித்து இருக்கிறார்.
இந்த அறிவிப்பைப் பாராட்டி வரவேற் கிறோம். தமிழ்நாடு அரசு ஒரு முதுகெலும்புள்ள அரசு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது.
அண்மையில் ஆளுநர் கொளுத்திப் போட்டத் தீ, திராவிடம் என்பது பிரிட்டிஷார் கண்டுபிடித்த சொல் என்பதாகும். பிரிட்டிஷார் கண்டுபிடித்ததினாலேயே திராவிடம் என்பது கெட்ட சொல் ஆகிவிடுமா? அதற்கு ஒரு கோட்பாடு இல்லையா? பிரிட்டிஷார் கண்டுபிடித்தார் என்பதற்காக அவர் எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கியதே பிரிட்டிஷார் தான் இந்தியாவை கலைத்து விடலாமா? ஆளுநர் மாளிகை, ஆளுநர் பதவி இவைகளையும் பிரிட்டிஷ்காரர்கள் தான் உருவாக்கினார்கள். ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஊருக்குக் கிளம்ப தயாராக இருக்கிறாரா ஆர்.என். ரவி?
அரசியல் சட்டம் 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்டது. அந்த சட்டத்தின் பல கூறுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட் டிருக்கின்றன. அதற்காக அரசியல் சட்டத்தை வேண்டாம் என்று ஒதுக்கி விட முடியுமா ? பள்ளிக் கல்வி முறையை உருவாக்கியது பிரிட்டிஷ்காரர்கள், நாடாளுமன்றம், ஜன நாயகம் என்ற கோட்பாடுகளை உருவாக்கி யது பிரிட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் வந்த பின் தான் திராவிடம் என்ற சொல் வந்ததா ? அதுவும் உண்மையில்லை. மனுதர்மத்திலேயே திராவிடம் என்ற சொல் இருக்கிறது. திருஞானசம்மந்தரே ‘திராவிட சிசு’ என்று போற்றப்பட்டு இருக்கிறார்.
திராவிடம் நிலத்தைக் குறிப்பது என்கிறார் ஆளுநர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர், தங்களை ஆரியர் என்றும், உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வரும் அநாதியர்கள் என்றும், இது வரலாற்று ஆசிரியர்களுக்கே தெரியாது என்றும் கூறுகிறார். (ஆதாரம்: ‘சிந்தனைக் கொத்து’ நூல்)
இந்த வரலாறுகளையெல்லாம் தெரியாமல் வாய்க்கு வந்தபடி ஆளுநர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி உளறிக் கொட்டி தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிரான பாஜகவின் பரப்புரை செயலாளராக ஆளுநர் மாறி நிற்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்தப் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருப்பதை சுயமரியாதையுள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நிச்சயமாக வரவேற்பார்கள்.
பெரியார் முழக்கம் 14072022 இதழ்