தலையங்கம் மொழி – மதம் குறித்த முதல்வரின் தெளிவான பார்வை
நியூயார்க் நகரில் நிகழும் வடஅமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வழியாக நிகழ்த்திய உரை மிகவும் ஆழமானது; குறிப்பிடத் தக்கது. மொழி – மதம் குறித்து அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் உரை அது.
மொழி – உலகம் முழுதும் வாழும் தமிழர்களை இணைக்கும் ஒரே கருவி என்று கூறியுள்ள முதலமைச்சர், தமிழர்கள் ஒற்றுமையை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவதை ஏற்க முடியாது. அத்தகைய முயற்சிகள் தீவிரம் பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். மொழியின் பெருமை – இனப் பெருமை பேசுவது தவறு இல்லை. அத்தகைய வரலாறும் பெருமையும் நமக்கு இருக்கிறது. அந்த வரலாறு இல்லாதவர்களால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட இயக்கம் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது. திராவிட மாடல் ஒரு கருத்தியல் கோட்பாடாக நாம் வளர்த்தெடுக்கிறோம். இதை எதிர்க்கிறவர்கள், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்து வருவோர் தான்; அவர்கள் கற்பனைகளை வரலாறுகளாக எழுத முயலுகிறார்கள் என்றும் முதல்வர் எதிரிகளைத் துல்லியமாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் மொழியை பெரியார் அணுகிய பார்வையை கொள்கை எதிரிகள் மலினமாக்கி திசை திருப்பி வருவதை வழக்கமான தந்திரமாக்கிக் கொண்டுள்ளனர்.
பெரியார் சொன்னார்: “தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகவே இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பாய், இடது கைபோல பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டது தான்” என்றார். (‘மொழி எழுத்து’ நூல்)
தமிழில் மதத்தைப் புகுத்தி தமிழர்களைப் பிளவுபடுத்திய நிலையில் மொழியை மதப்பிடியிலிருந்து பிரித்தெடுக்கும் இலக்கியங்களையும் மதப் பிடியில் சிக்கிடாத தொன்மை இலக்கியப் பெருமைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சிகளில் தி.மு.க. தொடக்கக் காலத்திலிருந்தே முனைப்புடன் செயல்பட்டது. பெரியாரைப் பொறுத்தவரை தமிழை இலக்கியத்துக்காக அல்லாமல், தமிழர்களுக்காக தாங்கிய தலைவர் மதப்பிளவு, ஜாதிப் பிளவுகளுக்கு எதிராக தமிழரைத் தாங்கும் வலிமையான இணைப்பாக தமிழ் வளர வேண்டும் என்பதே பெரியாரின் இலட்சியம். அதற்கு வலிமை சேர்ப்பதாகவே முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை அமைந்திருக்கிறது.
பெரியார், தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கவலை கொண்டிருந்தார். இப்போது தமிழ் கணினியில் அறிவியலில் மொழி பெயர்ப்புகளில் அறிவியல் நோக்கி முன்னேறி வருவதை கண்கூடாகவே பார்க்கிறோம். தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட மத அடையாளம் ஜாதிகளாகப் பிளவுபடுத்தியது. மத அடையாளத்தை அகற்றி மொழி அடையாளத்தின் கீழ் சமுதாயம் ஒன்றிணைய வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். இதன் வழியாக தமிழை சமூகவியல் பார்வையில் அணுக முயல்கிறார். இது மிகச் சரியான பார்வை. அதேபோல் மொழி – சமூக நீதிக்கான கருவியாகவும் தமிழக அரசில் செயல்படத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழ்மொழி தெரியாத பிற மாநிலத்துக்காரர்கள் தமிழ்நாட்டு தமிழர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டிருந்த நிலையில் தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் வழியாக வேலை தேடுவோர் கட்டாயம் தமிழ்த் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சிறப்பான திட்டத்தை இப்போது தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மொழியை சமூகம் மற்றும் சமூக நீதிப் பார்வையில் அணுகுவது என்பதே பெரியாரின் கருத்துக்கும் மத நம்பிக்கைகள் குறித்தும் முதல்வர் பேசிய கருத்துகளையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆட்சி எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல. அவர்களின் நம்பிக்கைகளில் குறுக்கிடாது; அதே நேரத்தில் மதத்தின் அடிப்படையில் தமிழர்களை பிளவுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார்.
தமிழ் சமூகத்தைப் பிளவுபடுத்தும் முதன்மை காரணியாக ஜாதி இருக்கிறது என்பதையும் அழுத்தம் திருத்தமாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். ‘திராவிடம்’ நிலத்தை, மொழியை, பண்பாட்டை அடையாளப்படுத்தி வந்த சொல்லாக இருந்தது. இன்று ஒரு அரசியல் கோட்பாடாக பரிணமித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், அந்த சொல், இப்போது சமூகநீதி, சுயமரியாதை, சகோதரத்துவம், மானுடப்பற்று, மொழிப் பற்று, இன உரிமை, கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சிகள் உள்ளடக்கிய ‘திராவிட மாடல்’ என்ற கோட் பாட்டு வடிவம் பெற்று அதையே இந்த ஆட்சியின் கொள்கையாக செயல்படுத்தி வருகிறோம் என்று பறைசாற்றியிருக்கிறார்.
பெரியாரின் கடவுள் – மத எதிர்ப்புக்கு அடிநாதமே ஜாதி எதிர்ப்பு தான். அந்த நம்பிக்கையை தகர்க்காத வரை மக்களை ‘சூத்திர-பஞ்சம’ இழிவுகளிலிருந்து மீட்க முடியாது என்ற உறுதியான முடிவே அவரை கடவுள் எதிர்ப்பை நோக்கி நகர்த்தியது.
கடவுள், மத எதிர்ப்புப் பரப்புரை செய்து கொண்டே ஜாதியை எதிர்த்த மத நம்பிக்கையாளர்களை நட்பு சக்தியாகவே பெரியார் அரவணைத்தார். குன்றக்குடி அடிகளார், வள்ளலார் போன்றோரை சான்றாகக் குறிப்பிடலாம். சிருங்கேரி மட சங்கராச்சாரி சந்திக்க அழைத்தபோது, அவரது வைதீக வெறி கருதி சந்திக்கவே மறுத்தார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமைக்கான அழுத்தமான குரல் அவரின் இறுதி மூச்சு அடங்கும் வரை ஒலித்தது. எனவே ஜாதிகளற்ற தமிழர், ஜாதிகளற்ற மதம் என்பதே மொழி – மதம் குறித்த வெகு மக்களுக்கான அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
இந்துத்துவா என்ற பெயருக்குள் வெகு மக்களைப் பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல், அதற்குள் பதுங்கி நிற்கும் பார்ப்பனிய ‘வைதீகக்’ கோட்பாடு வெறிக்கு மாற்றாக மொழியையும், சமூக நீதியையும் தன்னாட்சி உரிமைகளையும் ஆயுதமாக தமிழகம் ஏந்தி நிற்கும் இதை ஆழமாக தெளிவுபடுத்தியிருக்கிறது, முதலமைச்சரின் உரை!
பெரியார் முழக்கம் 07072022 இதழ்