பா.ஜ.க. வேட்பாளரை பா.ம.க. ஆதரிப்பது சமூக நீதியா?

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு திரௌபதி முர்மு என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண். இது சமூக நீதியின் வெளிப்பாடு என்று சிலர் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இந்த வாதத்தில் நேர்மை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. இதற்கு முன் குடியரசுத் தலைவராக நிறுத்தப்பட்டவரும் தலித் தான். ஆனால் அவர் குடியரசுத் தலைவராக இருந்து சமூக நீதியைக் காப்பாற்றினாரா? சொல்லப் போனால் கோவிலுக்குள் செல்லக்கூட அவரை சனாதானம் அனுமதிக்கவில்லை என்பது தான் சோகமான வரலாறு.

இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ள கருத்து மிகச் சரியானது, ஆழமானது.

இந்தியாவில் அரசியல் சட்டம் சீர்குலைக்கப்பட்டு, ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் படுகொலைக்குள்ளாக் கப்பட்டு, மதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிற நேரத்தில், இதை எதிர்த்து நான் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன், அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் இந்த தேர்தல் களத்திலும் நிற்கிறேன், வெற்றி  என்று வரலாம்; வராமலும் போகலாம். அது பற்றி கவலை இல்லை என்று மிகச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் சமூக நீதியின் பார்வையை முன்னிறுத்துவது பச்சை சந்தர்ப்பவாத அரசியல்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி சமூக நீதியில் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு கட்சியும், பாஜகவின் வேட்பாளரைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அவரது கட்சி வேண்டுமானால் ஆதரிக்கலாம் அது அவர்களது உரிமை.

ஆனால் சமூக நீதி பேசுகிற அத்தனைக் கட்சிகளும் என்று சொல்கிற போதுதான், நாம் பல கேள்விகளை எழுப்ப வேண்டி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை உறுதி செய்வது தான் இந்த நாட்டில் சமூக நீதியா ?

நாட்டில் மத வெறியைத் திணிப்பது, அரசியல் சட்டத்தை சீர் குலைப்பது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, இந்துராஷ்டிர ஆட்சியை நோக்கி நாட்டை இழுத்துச் செல்வது என்ற கொள்கைக் கொண்ட ஒருபட்சக் கட்சி பா.ஜ.க.

இந்த கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிற ஒரு வேட்பாளருக்கு ஆதரவுக் கரம் நீட்டி, அந்த ஆட்சிக்கு  வலிமை சேர்ப்பது தான்  சமூக நீதி என்று பாட்டாளி மக்கள் கட்சி சொல்ல வருகிறதா?

இது சமூக நீதிக்கான தேர்தல் அல்ல. அப்படி இத் தேர்தலுக்கு பெயர் சூட்டுவது மக்களை ஏமாற்றுவது!

பெரியார் முழக்கம் 07072022 இதழ்

 

You may also like...