எங்கள் தத்துவ பிதாமகன் பெரியார் காட்டிய வழியில் எங்களை தனிநாடு கேட்கத் தள்ளி விடாதீர்கள்! எச்சரிக்கிறார் ஆ. இராசா
திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு 03.07.2022 அன்று காலை தொடங்கி நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வில், கருத்தரங்கில் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ தலைப்பில் திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா பேச்சு.
தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் “மாநில சுயாட்சி” கொள்கைக்கு வந்து விட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருக்கக் கூடிய தந்தை பெரியார் சாகும் வரை தனித் தமிழ்நாடு கேட்டார். அவர் இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்னால், செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று ‘விடுதலை’யில் ஒரு அறிக்கை எழுதினார். அதில் கூறினார்:
“இந்தியாவில் இருக்கும் வரை இந்து மதம் என்னை சூத்திரனாக வைத்திருக்கும். இந்தியா வில் இருக்கும் வரை இந்து மதம் என்னை பஞ்சமனாக வைத்திருக்கும். அது மட்டுமில்லை இந்தியாவில் இருக்கும் வரை என்னுடைய தமிழனுக்கு பொருளாதார வளர்ச்சி வராது, உத்தியோகத்தில் பங்கு கிடைக்காது, எந்த ஏற்றமும் இருக்காது. எனவே நான் முடிவு செய்து விட்டேன். இன்றைக்கு கலைஞர் முதலமைச்சராக இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் இதை ஏற்றுக் கொள்ளாது. அவர்கள் தங்களை மாநில சுயாட்சி என்று சுருக்கிக் கொண்டார்கள்” அய்யா எழுதுகிறார்.
இறுதியாக சொல்கிறார், “திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை மாநில சுயாட்சி யோடு சுருக்கிக் கொண்டது, ஆனால் நான் சொல்கிறேன் பிரிவினை வேண்டும், தனித் தமிழ்நாடு வேண்டும், இளைஞர்களே முன் வாருங்கள், சுதந்திரத் தமிழ்நாடு தான் வேண்டும் என்று சட்டைப் பையில் பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள்” என்று பெரியார் கூறினார்.
பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜன நாயகத்திற்காக, இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டிற்காக சற்று விலகி, தந்தையையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று கூறினோம்; கூறிக் கொண்டும் இருக்கிறோம்.
நான் அமித்ஷாவிற்கும், பிரதமருக்கும் சொல்கிறேன், மெத்தப் பணிவன்போடு சொல்கிறேன், உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், இந்த மேடையிலே எங்களது தலைவரை வைத்துக் கொண்டு சொல்கிறேன், அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள்.
தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்.
(உரையின் பிற்பகுதிகள் உள்ளே)
பெரியார் முழக்கம் 07072022 இதழ்