நடிகர் மாதவனின் பஞ்சாங்க உளறலுக்கு விஞ்ஞானி பதிலடி
பொய்யான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்டு “ராக்கெட்ரி – நம்பி விளைவு” என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம், ஜூலை 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையொட்டி, சென்னையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய நடிகர் மாதவன், “அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலகோடி செலவழித்து செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கைக் கோளை அனுப்பி வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா 2014ஆம் ஆண்டு சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியது. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய களம் 32ஆவது முறையில்தான் வெற்றி பெற்றது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தவும், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைய வும் நமது முன்னோர்கள் உருவாக்கிய பஞ்சாங்கத்தின்படியான நட்சத்திர மற்றும் கோள்களின் வரைபடம்தான் (ஊநடநளவயைட ஆயயீ) இந்தியக் குழுவுக்கு உதவியது” என்று கூறியிருந்தார்.
இந்தத் தகவலை “விஞ்ஞானி நம்பி நாராயணனின் மருமகனும், விஞ்ஞானியு மான அருணன் – தம்மிடம் தெரிவித்தார்” என்றும் மாதவன் குறிப்பிட்டிருந்தார். நடிகர் மாதவனின் இந்தக் கருத்துதான் சமூகவலைதளங்களில் தற்போது விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட பஞ்சாங் கத்தை வைத்துக் கொண்டு தற்போது செவ்வாய்கிரகம் செல்வது முடியாத காரியம்” என தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் ‘சந்திரயான்’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கூறியிருக்கும் அவர், “பஞ்சாங்கம் ஆண்டாண்டு காலமாக பொருந்தி வரக் கூடியது அல்ல. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப் பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய்க் கிரகம் செல்வது என்பது முடியாத காரியம். ஏனென்றால், அந்தந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் இடங்களை கணித்து அதற்கேற்ப உலகளவில் பயன்படுத்தப்படும் அறிவியல் அட்டவணை இருக்கிறது. அதற்குப் பெயர் ‘அல்மனாக்’ என்ற அறிவியல் அட்டவணை தான் விஞ்ஞானி களுக்கு ‘பஞ்சாங்கம்’. அதை வைத்தே விண்வெளிக் கோள்களை அனுப்பும் நேரத்தைக் கணக்கிடுகிறோம். ஆனால் இவர்கள் சொல்லும் ‘இந்து’ பழம் பஞ்சாங் கத்தைப் பார்த்து நேரம் குறிப்பது கிடையாது” என்று பதிலடி தந்துள்ளார்.
பெரியார் முழக்கம் 30062022 இதழ்