ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டு
- பயிற்சிக் காலத்தில் பயிற்சி அளிக்க வந்த ஆசிரியரை பார்ப்பனர்கள் தாக்கினர்.
- பணி நியமனமாகி ஓராண்டுக்குப் பிறகும் பல கோயில்களில் பூஜை செய்ய பார்ப்பனர்கள் அனுமதிப்பது இல்லை.
- அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்ட வயது வரம்பை 45ஆக உயர்த்தி ஆணையிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
- ஆகமக் கோயில் ஒன்றில் 2000 ஆண்டு வரலாற்றில் பார்பபனரல்லாத அர்ச்சகர் ஒருவர் முதன்முதலாகக் கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றியுள்ளார்.
அர்ச்சகர் பயிற்சியின் போதும் பணி நியமனத்துக்குப் பிறகும் பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் அவமதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவதை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் விவரித்தபோது கூட்டத்தினர் உணர்வு மயமாயினர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பார்ப்பனரல்லாத அனைத்து ‘இந்து’ அர்ச்சகர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று வா. ரங்கநாதன் நிகழ்த்திய உரை.
பார்ப்பன அர்ச்சகர்கள், பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களால் கோவில் கருவறையைத் தொட்டு வழிபடுவது மறுக்கப்பட்டு வருகிறது. 2000 ஆண்டு கருவறை இருள் அகற்றுவது என்றாலே வழக்கு ; ஆனால் 2000 ஆண்டு இருள் கடந்த ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் நாள், முத்தமிழறிஞர் கலைஞரின் மகன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அகற்றப்பட்டது. இது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள். இது நாம் கொண்டாட வேண்டிய நாள். இது நமக்கு சமூக நீதியில் ஒரு மைல் கல் தான். அதில், 24 அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கி ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது.
கோவிலில் கோபுர தரிசனம் ஒரு ஜாதிக்கு, அர்த்த மண்டபம் ஒரு ஜாதிக்கு, மகா மண்டபம் ஒரு ஜாதிக்கு என்று ஜாதி ஏற்றத்தாழ்வுகள் கோவில்களில் இருந்தது. அப்போது கோவிலில் வழிபடவோ, பார்க்கவோ கூட அனுமதி இல்லை. அப்போது தான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று, தந்தை பெரியார் 1969 ஆம் ஆண்டு கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்தார். ஏனென்றால், அனைத்து ஜாதியினரும் கடவுளைத் தொட்டு பூஜை செய்ய வேண்டும், தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக. அப்போதைய முதலமைச்சர் கலைஞர், இந்து அறநிலையத்துறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்” சட்டத்தை இயற்றினார். அதன்பிறகு அந்த சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதை தடுத்தனர். பிறகு 2006ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் ஆட்சி வந்தது. அப்போது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அவசர சட்டம் பிறப்பித்தார். அதில் 6 பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. திரு வண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி.
இந்த 6 பாடசாலைகளில் ஒரு பாட சாலைக்கு 40 பேர் என அனைத்து ஜாதியினரும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பயின்றோம். இதில் அனைத்து மந்திரங்களும், தேவாரம், திருவாசகம் போன்ற மந்திரங்களும் தமிழ் முறைப்படியும் சமஸ்கிருத முறைப்படி ருத்ரம், ஷமக்கம், ஸ்ரீசூக்தம் என்ற வேத மந்திரங்களும் அதே போன்று செய்முறைகளும், ஜோதிடம், கிரந்த எழுத்துக்கள், இவற்றையெல்லாம் படித்து ஆதீனங்கள் மூலமாக தீட்சையும் பெற்றிருக்கிறோம். இத்தனை பயிற்சி களையும் 2008 இல் முடித்து வெளியே வந்தோம். அதன்பிறகு எங்களுக்கு தேர்வு தள்ளி போனது, ஏன் தள்ளிப் போனது என்றால் உச்சநீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது அதனால் தள்ளிப் போகிறது என்றனர். எதற்காக வழக்கு என்றால் தெரியவில்லை.
அந்த காலகட்டத்தில் தான் அனைத்து அரசியல் கட்சிகளையும் நாங்கள் சந்திக்கிறோம். தங்களை இந்துக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொள்கிற பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி இராம கோபாலன் உள்ளிட்ட இவர்கள் அனைவரையும் 2009 இல் சந்திக்கிறோம்.
அப்போதைய முதல்வர் கலைஞரையும் சந்திக்கிறோம் அப்போது கலைஞர், “ஆகமம் என்கிற தடை இருக்கிறது. அதனால் தான் தங்களுக்கு பணி வழங்க முடியவில்லை. நான் ஆட்சியில் இருந்து இறங்குவதற்கு முன் கண்டிப்பாக உங்களுக்கு பணி வழங்கிவிடுவேன்” என்று உறுதியளித்தார். அதை தற்போது அவரது மகன் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார். (பலத்த கைதட்டல்)
பணிக்காக அனைத்து கட்சிகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் போது, சிதம்பரம் நடராசர்கோவிலில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு ஆறுமுக சுவாமி என்பவருக்காக, மக்கள் உரிமைக் கழகம் வழக்கறிஞர் இராஜூ, வாஞ்சிநாதன் போன்றவர்கள் போராடினார்கள். அப்போது உச்சநீதி மன்றம் சென்றார்கள். அப்போது ‘தெஹல்கா’ என்ற பத்திரிக்கை வழக்கிற்கு முன் எங்களிடம் ஒரு பேட்டியை எடுத்தார்கள். ‘தேவாரம், திருவாசகம் பாட ஓதுவாரை நியமித்திருக்கிறீர்கள், அதேபோல பயிற்சி பெற்றவர்களையும் அர்ச்சகர் களாக நியமிக்கலாம்’ என்று பேட்டியை வெளியிட்டார்கள். அப்போது வழக்கில் என்ன கூறினார்கள் என்றால், “கோவில் கருவறைக்குள் அனைத்து ஜாதியினரும் வந்துவிட்டால், கோவில் கர்பக்கிரகம் தீட்டுப் பட்டுவிடும். கோவிலின் புனிதத் தன்மை கெட்டு விடும். கோவில் இடிந்தே விழுந்துவிடும்” என்று, நாங்கள் கூறவில்லை மக்கள் கூறுகிறார்கள் என்று மதுரை ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், தென்னிந்திய பிராமணர்கள் சங்கம் போன்ற பிராமணர்கள் சங்கம் உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடையை வாங்கி விட்டார்கள். எங்களுக்கு பணி வழங்குவதில் தான் தடையே தவிர பயிற்சி வழங்குவதில் தடையை அவர்களால் வழங்க முடியவில்லை. அப்போது தான் “அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்” என்று ஒரு சங்கம் உருவாக்கி நான் தலைவராக இருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கில் இணைந்தோம்.
மூன்று செய்திகளைப் பார்ப்போம். 1) பயிற்சிப் பள்ளியில் படிக்கும் போது எப்படி எங்களுக்கு எதிர்ப்பு வந்தது. 2) இந்து என்று சொல்லிக்கொள்கிற அமைப்புகள் என்ன செய்தார்கள்? 3) இந்தப் பணி ஆணைகள் வழங்கப்பட்ட பிறகு என்னென்ன பிரச்சனைகள் உள்ளன?
பயிற்சி பள்ளியில் படிக்கும் போது ஜாதி இழிவைத் தாங்கிக் கொண்டு தான் படித்தோம். நான் திருவண்ணாமலையில் படித்தேன். அப்போது சாமி தரிசனம் பார்க்கும் போது உள்ளே இருந்த பார்ப்பன அர்ச்சகர்கள் எங்களைப் பார்த்து ‘இதோ வந்துட்டான் பாரு தேவடியா பையன், இதோ சூத்திர பையன் வந்துட்டான் பாரு’ என்று பச்சையாகவே திட்டுவார்கள். காலால் எட்டி உதைப்பது என்று மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். அப்போதே தோன்றியது இப்படி அவமானங்களைச் சுமந்து சாமி தரிசனம் செய்ய வேண்டுமா ? என்று. அப்போது அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் துறையை நேரடியாக முதல்வர் கலைஞரே வைத்திருந்தார். இப்படியான பிரச்னைகளை அவரிடம் கூறிய பிறகு “யாருக்கும்தொந்தரவு செய்யக் கூடாது” என்று அரசாணையை கலைஞர் பிறப்பித்தார்.
பயிற்சிப் பள்ளியில் படிக்கும் போது பூஜைகளை கற்றுக் கொள்வதற்கு அரசு சிலைகளை ஏற்பாடு செய்தது. ஆனால் பார்ப்பன அர்ச்சகர்கள் எங்களுக்கு சிலைகளைக் கொடுக்க மறுத்துவிட்டனர். பின் பயிற்சி மாணவர்களாகிய நாங்களே சிலையை செய்து பூஜை முறைகளை கற்றுக் கொண்டோம். தொடர்ந்து, அனைத்துப் பாட சாலைகளிலும் சாப்பாடு சரியாக வழங்க விடாமல் செய்வது, ஜாதியைக் கூறி கிண்டல் செய்வது என்று தொடர்ந்து அவமானப்படுத்தினர்.
திருவண்ணாமலையில் ஆகமங்களை கற்றுக் கொடுக்க ஒருவர் வந்தார். அவரை பார்ப்பன அர்ச்சகர்கள் ஆட்களை வைத்து அடித்தார்கள், அவர் அதன் பின் கற்றுக் கொடுக்க வரவில்லை. பின் மாணவர்கள் நாங்களெல்லாம் சென்று அவரை சமாதானப்படுத்தி வரவழைத்தோம். பயிற்சிப் பள்ளிகளிலே ஜாதி ஏற்றத்தாழ்வோடும் அவமானங்களோடும் தான் படித்தோம்.
இங்கே தங்களை இந்து என்று சொல்லிக் கொள்கிற அமைப்புகளான, பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகளுக்கு ஒரே ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். நாங்கள் உங்களை சந்திக்காமல் இல்லை. சந்தித்து கேட்ட போது எங்களுக்கு நீங்கள் கூறிய பதில் என்ன ? இராம கோபாலன், ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள ஆகமம் இல்லாத கோவில்களில் உங்களுக்கு பணி வழங்குகிறோம் என்று கூறினார். நாங்கள் படித்தது ஆகமக் கோவில்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றத்தான் என்று கூறினோம். நீங்கள் அதற்கு மறுத்துவிட்டீர்கள். ஆனால் இன்றும் பெரியாரிஸ்டுகளும் மார்க்சிஸ்டுகளும் தான் எங்களுக்காகப் போராடுகின்றனர்.
உச்சநீதி மன்றத்திலும், உயர் நீதி மன்றத்திலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்த்து நிறைய வழக்கு போடப்படுகிறது. யார் இந்த வழக்குகளைப் போடுவது ? பணி ஆணை கடந்த வருடம் ஆகஸ்டு 14 இல் வழங்கப்பட்டது. இந்த பணி ஆணை வழங்குவதற்கு முன், விளம்பரம் வருகிறது. அந்த விளம்பரத்தை எதிர்த்து 5 பேர் வழக்கு தொடுக்கிறார்கள். அதன் பின், கோவில் வழி பாட்டாளர் சங்கம் ரங்கராஜ நரசிம்மன், பார்ப்பன அர்ச்சகர்கள் ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், ஆர்.எஸ்.எஸ். ஸைச் சேர்ந்த நபர்கள் இப்படி 27-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளில் “அனைத்து ஜாதி அர்ச்சகர் மாணவர் சங்கம்” சார்பில் வாதாடு வதற்கு அனுமதி கேட்டு மனு போட்டோம். ஆனால், அதை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அந்த நீதிபதி தற்போது பணி ஓய்வு பெற்று சென்று விட்டார். பாஜவைச் சேர்ந்த முக்கியமான ஒரு நபர் டெல்லியிலிருந்து அழைக்கிறார்.
“இந்த வழக்குக்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். முடித்துக் கொள்ளலாம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்” என்கிறார். நான் கூறினேன், “நாங்கள் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுகிறோம். எங்களுக்கு திருவண்ணாமலை கோவிலிலோ, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலோ, பார்த்தசாரதி கோவிலிலோ எங்களில் ஒரு 10 மாணவர்களை முதல்வர் பணி ஆணை வழங்கிய பின் இந்தக் கோவில்களின் கருவறையில் பூஜை செய்ய வைக்க முடியுமா ? என்று கேட்டேன். பதில் இல்லை.”
இன்று திருச்சி நாகநாதர்சுவாமி கோவிலில் எங்களுடன் பயிற்சி செய்த நண்பர் வேல்முருகன், ஆகமக் கோவிலில் கொடி ஏற்றியிருக்கிறார். 2000 ஆண்டு தீண்டாமையை அகற்றியிருக்கிறார். (பலத்த கைதட்டல்)இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. இது பொதுமக்களின் கோவில். இதில் ஏன் அனைத்து ஜாதியினரும் பூஜை செய்ய வைக்க முடியவில்லை. எதற்கு இத்தனை வழக்குகள், 1972, 2015, 2022 இப்படி அத்தனை வழக்குகளிலும் ஆகமம், பழக்க, வழக்கம் இதைத் தான் குறிப்பிடுகிறார்கள். ஆகமம் என்றால், கோவில் கட்டுமான முறை, பூஜை முறை இவைகள் தான் ஆகமம். இதில் எங்காவது ஜாதி குறிப்பிடப்பட்டிருக்கிறதா ? பிறகு ஏன் நான் பூஜை செய்யக் கூடாது ? இன்று சட்டம் என்பது ஆதாரப்பூர்வமாக ஆவணமாக நம்மிடம் உள்ளது. ஆனால், மனு தர்மத்திற்கு ஏதாவது ஆவண
ஆதாரம் உண்டா? எங்காவது ஒரு கல்வெட்டு இருக்கிறதா?
மாவட்ட ஆட்சியர், ஏன் குடியரசுத் தலைவராகக் கூட ஒரு தாழ்த்தப்பட்டவர் ஆகலாம். ஆனால் அதே குடியரசுத் தலைவராக இருப்பவர் அர்ச்சகர் பயிற்சி பெற்று மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகர் ஆக முடியுமா ? இந்திய ஒன்றியத்தின் மிக உயரிய அதிகாரியாகக் கூட ஆகலாம் ஆனால் அர்ச்சகர் ஆக முடியாது. இதற்குக் காரணம் பார்ப்பனராக பிறக்காததும், மனு தர்மமும் தான் காரணம். இதை நாம் தகர்க்க வேண்டும். ஆகமம் என்பது வெறும் கோவில் கட்டுமானம், பூஜை முறைகள் தான் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இப்படி அர்ச்சகர் பணி நியமன ஆணை வாங்கி, பணியில் பார்ப்பனர்களின் கொடுமையை தாங்க முடியாமல் தூக்கு மாட்டி இறக்கும் முடிவுக்கு 5 மாணவர்கள் போய் விட்டார்கள்.
யாருக்காவது தெரியுமா? மக்களுக்குத் தெரியுமா ? ஊடகங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நாளும் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலையை விட்டுப் போய்விடலாமா, அல்லது இறந்து விடலாமா என்ற நிலையில் தான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன ? இது கோபம் அல்ல எங்களின் உணர்வு. இரவு, பகலா இந்த பிரச்னையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். திருச்சி நாகநாதர் சுவாமி கோவிலில் தினமும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
வயலூர் முருகன் கோவில் இன்று வரை கருவறையில் பூஜை செய்ய முடியவில்லை. அரசின் பணி ஆணை இருக்கிறது. ஆனால், ஏன் பூஜை செய்ய விடவில்லை ?
அங்கே இருக்கிற பார்ப்பன அர்ச்சகர், “மோடி இருக்கிறார், அமித்ஷா இருக்கிறார்” என்று மிரட்டி காணொளியே பதிவிட்டிருக்கிறார்.
தமிழன் என்ற உரிமையை ஏன் நிலைநாட்ட முடியவில்லை ? தமிழர்களின் கோவில்கள் தானே? தேனி உத்தமபாளையம் கோவிலிலும் பூஜை செய்ய விடவில்லை. அண்ணன் கொளத்தூர் மணியிடம் கூறினேன்.
“பாஜக, ஆர்.எஸ்.எஸ்.யை சார்ந்தவர்கள் 10 பேர் வந்து அர்ச்சகரை பூஜை செய்யக் கூடாது என்று மிரட்டுகிறார்கள்’ என்று கூறினேன். அதன் பின் முதல்வர் பிரிவிலிருந்து தேனி ஆட்சியரிடம் கேட்கப்பட்டது. பிறகு தேனி ஆட்சியர் அழைத்து, அந்த கோவிலில் மாணவர் பூஜை செய்ய விடவில்லை யென்றால் அரசு யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் உத்தர விட்டிருக்கிறார்” என்று கூறியவுடன் அந்த மாணவரை பூஜை செய்ய அனுமதித்தனர். (கைதட்டல்)
24 அர்ச்சகர்களுக்கு பணி ஆணை வழங்கப் பட்டது. இவர்களில் யாருமே முதல் 6 மாதத்திற்கு கருவறையில் நுழைந்து பூஜை செய்யவில்லை. பணி ஆணை வழங்கப்பட்ட மறுநாள் மட்டும் தான் ஒரே ஒரு நாள் பூஜை செய்ய விட்டார்களே தவிர தொடர்ந்து விடவில்லை. அதன் பிறகு முதல்வரின் நேரடி கவனத்திற்குக் கொண்டு சென்றவுடன் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.
2020ஆம் ஆண்டு அதிமுக அரசு பயிற்சி பெற்ற மாணவர்களின் பணி நியமன வயதைக் குறைத்து விட்டார்கள். திமுக அரசு முன்பு இருந்த போது 18 லிருந்து 45 வயது வரை இருந்தது. இந்த வயது வரம்பை இப்படி பிரச்சனைகள் வந்தவுடன் அதிமுக 35 ஆக குறைத்துவிட்டது. இதனால் பல ஆண்டுகாலம் பயிற்சிக்குப் பிறகு தடை ஆணைகளால் பணி நியமனம் பெற முடியவில்லை.
அந்த வயது வரம்பை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 2 ஆம் தேதி 45 ஆக உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறார் என்பதை பெரியார் பிறந்த நாளன்று கூறி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்) மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போன்ற ஆகமக் கோவில்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் எங்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு இந்த நாளில் வேண்டுகோளாக வைக்கிறோம். ட
பெரியார் முழக்கம் 22092022 இதழ்