அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி குலக் கல்விப் போராட்ட வரலாறு என்ன? மு. செந்திலதிபன்
ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை காங்கிரசுக்குள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், செங்கல்வராயன், பத்திரிகையாளர் டி.எஸ். சொக்கலிங்கம் மற்றும் ஜி.டி. நாயுடு, ஜெ.சி. குமரப்பா எதிர்த்தனர். ‘கல்கி’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் ம.பொ.சி.யும் ஆதரித்தனர்.
கோவை காரமடையில் தேசியக் கல்வியை யும் குலக் கல்வியையும் ஒப்பிட்டும் குலக் கல்வி எதிர்ப்பு வரலாற்றை விளக்கியும் பொறியாளர் மு. செந்திலதிபன் ஆற்றிய உரை.
இராஜகோபாலாச்சாரி – தன்னிச்சையாகக் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த போராட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழலை விளக்கு கிறார்.
5ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் படிப்புக்குச் செல்ல வேண்டுமாம். 10 வயதில் தந்தை தொழிலை தானே கற்றுக் கொள்ள தள்ளப்படுவார்கள். அதற்கு அரசே குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். எப்போது? 10 வயதில் அப்பன் தொழிலை பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தையே புதிய கல்விக் கொள்கையில் நவீனப்படுத்தி புகுத்துகிறார்கள்.
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்ற மண் தமிழ் நாடு. தந்தை பெரியார் நடத்திய கிளர்ச்சிக் கான ராஜாஜி ஆட்சிப் பீடத்தை விட்டு வெளி யேற வேண்டிய நிலையை உருவாக்கியது.
வரலாற்றை நாம் சரியாக உள்வாங்க வேண்டும். அப்போதுதான் நாம் களத்தில் நின்று போராடி வெற்றி காண முடியும்.
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் அடித்து நொறுக்கப்பட்ட வரலாற்றை திரும்பத் திரும்ப நாம் மனக்கண் முன் நிறுத்த வேண்டும்.
1952 ஜூன் 24 ஆம் நாள், சென்னை மாநில முதலமைச்சர் ராஜாஜி, சென்னை திருவான் மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றார். அதில் பேசும் போது, “அவனவன் சாதி தொழிலை அவனவன் செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியது இல்லை. குலத் தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்தால் வேலை எங்கிருந்து கிடைக்கும்” என்று கூறினார்.
அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர் எம்.வி.கிருஷ்ணாராவ் 20.03.1953 இல் சென்னை சட்டமன்றத்தில், “தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் கால அளவை நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைப்பது என்றும், அந்நேரத்தில் குழந்தைகளின் பெற்றோர் செய்யும் தொழில் களைக் கற்றுக் கொள்ள வசதி செய்து கொடுக்கவும் சர்க்கார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது” என்று கூறினார். இன்னொன்றையும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
“பரம்பரைத் தொழில் செய்யாத குலத்தில் பிறந்த குழந்தைகள் வயல்களிலும், தொழிற் சாலைகளிலும் பிறர் செய்யும் தொழில் களைக் கவனிக்கச் செய்து கற்கச் செய்யவும் ஆலோசிக்கப்படுகிறது.
விவசாயத் தொழில்கள், கொட்டகை போடுதல், செங்கல் அறுப்பு வேலைகள், கிணறுகள் வெட்டுதல் போன்ற பல வேலை களில் பள்ளிச் சிறுவர் சிறுமியரை பழக்கப் படுத்துவது என்பதும் யோசிக்கப்பட்டு வருகிறது.”
பெரியாரின் போர்முரசு : விடுதலை ஏட்டில் 31.03.1953 “சிறுவர் கல்வியைப் பாழாக்கும் புதிய திட்டம்! உஷார்” என்று பெரியார் தலையங்கம் தீட்டினார்.
தந்தை பெரியார் எச்சரிக்கை செய்தபடி 1953-54 ஆம் கல்வியாண்டில் புதிய கல்வித் திட்டம் வருகிறது என்று ராஜாஜி அரசு அறிவித்தது.
இதனிடையில் காஞ்சிபுரத்தில் நடந்த சென்னை மாகாண யாதவ மாணவர் மாநாட் டில், ராஜாஜி அமைச்சரவையின் முடிவை ஆதரித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் சென்னகவுடா பேசும் போது, “யாதவர் சமூக இளைஞர்கள் நவீன பால்பண்ணை நடத்தி, பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை ஆதரிக்கிறேன்” என்று பேசினார்.
பம்பாயிலிருந்து வெளிவந்த ‘பிளிட்ஸ்’ ஏடு, “வருணாசிரம முறைக்கு உயிர் ஊட்டும் குலக்கல்வித் திட்டம்” என்று எழுதியது.
‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏடு, “துப்புரவு தொழிலாளியின் பிள்ளைகள் ஆசிரிய ராகவோ, மருத்துவராகவோ வருவதை ஏன் தடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியது.
களத்தில் குதித்து விட்டார் தந்தை பெரியார். திருச்சியில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் 1953 ஜூன் 3 ஆம் தேதி கூடியது. அதில் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தை அறிவிக்க தந்தை பெரியாருக்கு பொறுப்பு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1953 ஜூலை 11, 12 தேதிகளில் மன்னார் குடியில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மாநாடு தொடங் கியது. அந்த மாநாட்டில் ராஜகோபாலாச்சாரி ஆட்சியின் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய பெரியார், குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தை அறிவித்தார்.
ஒரே நாள் இடைவெளியில் 1953 ஜூலை 14 ஆம் தேதி சட்டமன்றம் முன்பாக நாடாளு மன்ற உறுப்பினர் வ.வீராசாமி தலைமையில், குலக்கல்வித் திட்டத்தைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் மறியல் அறப் போராட்டம் நடைபெறும்.
ஜூலை 20 ஆம் தேதி கிராமங்களில் பள்ளிகள் முன்பு மறியல் நடக்கும் என்று தந்தை பெரியார் பிரகடனம் செய்தார்கள்.
சென்னை சட்டமன்றம் முன்பு நடக்க இருந்த மறியலுக்கு ராஜாஜி அரசு 144 தடை உத்தரவு போட்டது. கோட்டை முன்பாக மலபார் போலீஸ் ஆயிரக்கணக்கில் குவிக்கப் பட்டது. ஆனால் அதற்கெல்லாம் பயந்து ஓடுகின்ற படையா? கருஞ்சட்டைப் படை?
திட்டமிட்டவாறு ஜூலை 14 ஆம் தேதி மூன்று மூன்று பேராக மறியல் அணி கோட்டை நோக்கி புறப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் வ.வீராசாமி தலைமையில் முதல் அணி புறப்பட்டது. அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். அடுத்தடுத்து திருவாரூர் தங்கராசு, எம்.கே.டி. சுப்பிரமணியம், டி.எம்.சண்முகம், த.லோக நாதன் மனோரஞ்சிதம், லட்சுமிபாய் ஆகியோர் தலைமையில் மறியல் செய்ய அணிகள் சென்று கொண்டே இருந்தனர்.
சட்டமன்றத்திற்கு முன்பாக சென்ற இவர்களில் 80 தோழர்கள் கைது செய்யப் பட்டனர்.
அண்ணாவின் மும்முனைப் போராட்டம்: மேலும் மேலும் மக்கள் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி ஆயிரக் கணக்கில் திரண்டு வந்தவுடன், மலபார் போலீஸ் தடியடி நடத்தத் தொடங்கியது. குண்டாந்தடி தாக்குதலை தாங்கிக் கொண்டு, மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடிய நிலையிலும் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டவாறு தொண்டர்கள் முன்னேறிச் சென்றனர்.
ராஜாஜி அரசின் அடக்குமுறையைக் கண்டித் தும், குலக்கல்வியை எதிர்த்துப் போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, உழைப்பாளர் கட்சி, ஐக்கிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்தன. ஆனால் அதற்கு அவைத் தலைவர் மறுத்துவிட்டார். அந்த கட்சிகளைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்தச் சூழலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுக சார்பில் மும்முனைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். 1959 ஜூலை 14 ஆம் தேதி குலக்கல்வியை எதிர்த்து, ராஜாஜி வீட்டின் முன்பு மறியல். ஜூலை 15ஆம் தேதி தமிழர்களை ‘நான்சென்ஸ்’ என்று விமர்சனம் செய்த பிரதமர் நேருவைக் கண்டித்து ரயில் மறியல். மேலும் அதே நாளில் திருச்சி மாவட்டத்தில் டால்மியாபுரம் ஊர் பெயரானது கல்லக்குடி என மாற்றம் செய்யக் கோரியும் மும்முனைப் போராட்டம் அறிவிப்பு, தமிழ்நாடு எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் பேரறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நாவலர், என்.வி.நடராசன், கே.ஏ.மதியழகன் ஆகியோர் கட்சி அலுவல கத்தில் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஏடுகள் திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் கைது என்று செய்தி போட்டன. அதிலிருந்துதான் திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் என்று இவர்கள் கழகத் தோழர்களால் அழைக்கப்பட்டனர் என்பது கூடுதல் செய்தி ஆகும்.
ராஜாஜி வீட்டின் முன்பு மறியல் செய்த திமுக அணி சத்தியவாணிமுத்து அம்மையார் தலைமையில் சென்றபோது, 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதே நாளில் தூத்துக்குடியில் ரயில் மறியல் செய்த திமுக தொண்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 4 பேர் உயிரைப் பறித்தது ராஜாஜி சர்க்கார். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
டால்மியாபுரம் பெயரை கல்லக்குடி என்று மாற்றக் கோரி கல்லக்குடியில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய கலைஞர் கைது செய்யப் பட்டார். அந்தப் போராட்டக் களத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியானார்கள்.
தந்தை பெரியார் பிரகடனம் செய்தவாறு 20.7.1953 அன்று பள்ளிகள் முன்பு, குலக்கல்வியை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஊர்களில் நடந்த மறியல் போராட்டம் பெரு வெற்றி பெற்றது. பெரியாரின் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்தது.
நாடெங்கும் ராஜாஜிக்கு எதிர்ப்புக் கிளம்பியது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இது எதிரொலித்தது. சென்னை மாநில முன்னாள் முதல்வர் ஓ.பி.இராம சாமி ரெட்டியார், சென்னை மேயர் செங்கல்வராயன், பத்திரிகையாளர் டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற காங்கிரஸ் தலைவர்களும் ராஜாஜியின் குலக் கல்வியை திரும்பப் பெற வலியுறுத்தினார்கள்.
காந்திய அறிஞர் ஜே.சி.குமரப்பா, விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, டாக்டர் லட்சுமண சாமி முதலியார் போன்றோரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால் கல்கி கிருஷ்ணமூர்த்தி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்றவர்கள் ராஜாஜி அரசுக்கு ஆதரவாகப் பேசினார்கள்.
கட்டுரையாளர் :
ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர்
நன்றி: ‘சங்கொலி’
(அடுத்த இதழில் முடியும்)
பெரியார் முழக்கம் 23062022 இதழ்