சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்கள் பலரும் ஆரியத்தைக் கொண்டாடியதாகவே வரலாறு கூறுகிறது. ‘பிராமணர்’களுக்கு ஊர்களும் கிராமங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. வேதப் பார்ப்பனர்ககளின் வேத அறிவே உலகத்தை வாழ்விக்கும் என்று மன்னர்கள் நம்பினார்கள். அதற்குப் பெயர் ‘சதுர்வேதிமங்கலம்’; தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் சங்க இலக்கிய சுவடிகளைத் தொகுத்த உ.வே.சாமிநாதய்யர், தனது பிறந்த ஊரான ‘உத்தமதானபுரம்’ பிராமணர்களுக்கு ‘தானமாக’ வழங்கப்பட்ட ஊர் என்பதை தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு அரசர், தனது வேதபண்டிதர் பரிவாரங்களுடன் தங்கள் கிராமத்தில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்து, உணவு உண்டு, வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டாராம். பிறகுதான்  அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்து அதிர்ந்து போனாராம். அமாவாசையில் வெற்றிலைப் பாக்கு போடுவது- தெய்வக் குற்றமாம். இந்தக் ‘குற்றத்துக்கு’ பரிகாரம் தேட, அருகிலிருந்த வேத பண்டிதர்கள் ஆலோசனைப்படி  அந்தப் பகுதியை வேத பண்டிதர்களுக்கு தானமாக்கி வீடுகளைக் கட்டித் தந்தாராம். அதுவே தான் பிறந்த உத்தமதானபுரம் வரலாறு என்று பதிவு செய்திருக்கிறார். அமாவாசையன்று வெற்றிலைப்பாக்கு போட்டக் குற்றத்துக்காக பார்ப்பனர்களுக்கு வீடுகளையும் ஊர்களையும் வழங்கியது ‘ஆரிய’ மாடல் ஆட்சி.

இதே குடந்தை அருகே உள்ள ‘மாதிரி மங்கலம்’ என்ற ஊரும் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டதுதான். பார்ப்பன ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து கருஞ்சட்டை வீரர் பெரியார் தொண்டர் என்.டி. சாமி, மாதிரி மங்கலத்தில் களமாடினர். தீண்டப்படாத மக்கள் சாவுக்கு சேதி சொல்ல மறுத்து, இழவு வீட்டுக்கு பறையடிக்க மறுத்து, பறைகளை நெருப்பில் போட்டுக் கொளுத்தினர். பார்ப்பனர் ஆதிக்க ஜாதியினர் நிறைந்த பகுதியில் தீண்டப்படாத மக்கள் குடியேற்றப்பட்டனர். ஆதிக்க ஜாதி நிறைந்த பகுதியில் ‘தலித்’ மக்களுக்கு தனது சொந்த முயற்சியில் தேனீர்க் கடையைத் திறந்தார். பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாhப்பனர் மற்றும் ஜாதி எதிர்ப்புப் புரட்சி, கொலை வரை நீண்டு வழக்குகள் நடந்தன. இது ஆர்யமாடலை எதிர்தது நடந்த களப் போராட்டம்.

வட இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘பிராமணர்களுக்கு’ தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலங்களை கட்டாயப்படுத்தி பறித்து தானமாக வழங்கப்பட்டது. நிலம் தர மறுத்தவர்கள் வன்முறையால் அடக்கப்பட்டனர் என்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை, தனது ‘தமிழக வரலாறு; மக்களும் பண்பாடும்’ ஆய்வு நூலில் பதிவு செய்துள்ளார். இதுதான் ஆரிய மாடல்.

திராவிட மாடல் இதை எதிர்த்துப் புரட்சி செய்தது. ‘அக்கிரகாரம் – ஊர்த் தெரு – சேரி’ என்று பிரிந்து கிடக்கும் நிலை, அவலம் இப்போதும் தொடருகிறது என்றால் வேத காலங்களில் இதன் கட்டமைப்பு எவ்வளவு வலிமையாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கலைஞர் முதல்வராக இருந்தபோது ‘சதுர்வேதிமங்கலங்களுக்கு’ எதிராக உருவாக்கியதுதான் ‘பெரியார் சமத்துவபுரம்’. அiன்த்து ஜாதியினருக்கும் ஒரே பகுதியில் வீடுகளைக் கட்டி, குடியேற்றி அதற்கு பெரியார் சமத்துவபுரம் என்று பெயர் சூட்டினார். இப்போது மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு இடையில் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்ட இத்திட்டத்துக்கு உயிர் கொடுக்க ரூ.100கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்; சமத்துவபுரங்களை மேலும் வளர்த்தெடுக்க முன் வந்துள்ளார்.

சதுர்வேதிமங்கலம் -ஆரிய மாடல்;

பெரியார் சமத்துவபுரம் – திராவிட மாடல்

– குடந்தை மண்டல மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரையிலிருந்து

 

பெரியார் முழக்கம் 26052022 இதழ்

You may also like...