சங்கிகளின் தேசபக்தி அரசியலை கிழித்தெறிந்த முதலமைச்சர்
தூத்துக்குடி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் (காணொளி), பிரதமர் மோடிக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு மிக மிக நுட்பமான, ஆழ்ந்த சிந்தனைக்கும், பரிசீலனைக்கும் உரியது என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அதற்கு முன்னால் சிறு விளக்கத்தை கூற விரும்புகிறோம்.
தேசம், தேசபக்தி என்ற சொல்லாடல்களை மதவாதத்திற்கு பாஜகவும், சங் பரிவாரங்களும் பயன்படுத்துகின்றன. இந்திய தேசபக்தியை இந்துவிலிருந்து பிரிக்க முடியாது. இந்துவாக இருப்பது தான் இந்தியன் என்பதற்கான அடையாளம். இந்து என்று தங்களை அடையாளபடுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவிற்கு அந்நியர்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் சித்தாந்தம், பாஜகவின் கொள்கை. அதனால் தான் அவர்கள் அகண்ட பாரதத்தை ஒரு காலத்தில் பேசினார்கள். இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா, ஆப்கானிஸ்தான், இலங்கை என்று அத்தனை நாடுகளைக் கொண்ட அகண்ட பாரதத்தை அமைக்க வேண்டும் என்று எல்லையை வரையறுத்து இந்து மதத்தை அவர்கள் எல்லைக்குள் திணித்தார்கள். இப்போது நாடுகள் பிரிந்த பிறகு அந்த முழக்கத்தை அப்படியே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் அவ்வளவு தான்.
ஆனால், தேச பக்தியையும், மதத்தையும் இணைத்துப் பார்க்கிற அவர்களுடைய சிந்தனை போக்கில் எந்த வித மாற்றமும் இல்லை. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஒரு கருத்தை வெளியிட்டார். தமிழ்நாட்டில் ஒரு காலத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்க முடியாது என்று இராகுல் காந்தி பேசினார். இதற்கு மோடி நாடாளுமன்றத்தில் என்ன பதிலை கூறினார்? அதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் பேச்சு இப்படி இருக்கிறது. அதை அப்படியே குறிப்பிடுகிறோம்: “எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று இராகுல் காந்தி கூறினார். இதற்கு பதிலளித்த மோடி தமிழ்நாட்டு மக்கள் தேசிய உணர்வு கொண்டவர்கள். மறைந்த முப்படை தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தியது தமிழ்நாடு என்று மோடி பதில் கூறியிருக்கிறார். இந்த பதிலின் வழியாக பாஜக வை விமர்சிப்பதையே இந்தியாவை விமர்சிப்பதாக அவர் வெளிப்படுத்துகிறார்” என்று மிக நுட்பமான பதிலை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். பா.ஜ.க. என்ற அரசியல் கட்சிகள் இந்தியாவின் தேசபக்தியோடு இணைந்திருக்கிறது. பா.ஜ.க.வை எதிர்ப்பது இந்தியாவையும் தேசப் பக்தியையும் எதிர்ப்பது என்ற பேட்டியின் மோசடி கருத்தை முதல்வர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
முதலமைச்சர் மேலும், “தேசம் என்று கூறியிருக்கிறார்களே, எது தேசம் ? என்பது தான் அவர்களுக்கும் நமக்குமான பிரச்சனை. வெறும் நிலப்பரப்பு தான் தேசம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லை இந்த மண்ணில் வாழும் மக்கள் தான் தேசம் என்று நாம் கூறுகிறோம். இந்த மண்ணையும், மக்களையும் புரிந்து கொள்ளாதவர்களாக, மதிக்காதவர்களாக, எதிராக செயல்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு இனமும், மொழியும், பண்பாடும் கொண்டது தான் இந்தியத் துணைக் கண்டம் என்கிறோம் நாம். இந்த நாட்டை பல்வேறு அழகிய மலர்களைக் கொண்ட பூங்கொத்தாக பார்க்கிறோம். ஆனால் அப்படி அவர்கள் பார்க்காமல், இந்த தேசத்தை வெறும் நிலத்தால் ஆன தேசம் என்று மட்டுமே பார்க்கிறார்கள்” என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மிக நுட்பமாக பாஜக பாசிச கருத்தியலை புரிந்து கொண்டு திராவிடர் இயக்கத்தின் பார்வையில், மண்ணின் ஒருமைப்பாடா ? மக்களின் ஒருமைப் பாடா ? மக்களின் ஒருமைப்பாட்டிற்குத்தான் மண்ணின் ஒருமைப்பாடு என்ற தத்துவத்தை மிக அழகாக விளக்கி இருக்கிறார் முதலமைச்சர்.
பெரியார் முழக்கம் 17022022 இதழ்