தமிழ்ப் பண்டிதர்களுக்கு சில வார்த்தைகள்

தமிழ்ப் பண்டிதர்களுக்கும் தமிழபிமானிகளுக்கும் சில வார்த்தைகளை கூற விரும்புகிறோம்.

சுயமரியாதைத் தோழர்கள், தமிழ் மொழி வளர்ச்சி விஷயத்தில் எந்த வகையிலும் மற்ற பண்டிதர்களுக்கும் தமிழ் அபிமானிகளுக்கும் பிற்பட்டவர் அல்லர் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு சுயமரியாதைத் தோழர்கள் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டதும், தமிழ் வளர்ச்சிக்கான தீர்மானங்களிலும் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டதுமே உதாரணமாகும். உண்மையில் ஹிந்தி மொழியைக் கண்டிப்பதாக மாநாட்டில் மெஜாரிட்டியினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயமரியாதைத் தோழர்கள் இல்லாவிட்டால் தோற்றே போயிருக்கும். ஹிந்தி கண்டன தீர்மானத்தைச் சிலர் எதிர்த்த பொழுது, அவ்வெதிர்ப்புக்குச் சரியான பதில் கூறினர். ஹிந்தி கூடாது என்பதைப் பெரிய மெஜாரிட்டியாரை ஒப்புக்கொள்ளச் செய்தவர்கள் சுயமரியாதைத் தோழர்களே யாவார்கள் என்பதை நாம் கூற வேண்டியதில்லை.

ஆனால் மற்ற பண்டிதர்களில் மற்றவர்கள் விரும்புவது போல் புராணங்களை எழுதுவதும், அவைகளைப் பற்றி பேசுவதும், தேவார திருவாசங்களைப் பாடுவதும் தான் தமிழ் வளர்ச்சி என்று சுயமரியாதைத் தோழர்கள் கருதுவதில்லை.

மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும், அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதின் மூலம் மக்களுடைய அறிவையும் தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் வளர்ச்சி என்று கருதியிருப்பவர்கள் என்று கூறுகிறோம். இதுதான் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கான வழியுமாகும்.

– குடிஅரசு 14.08.1932

பெரியார் முழக்கம் 02122021 இதழ்

You may also like...