சமூக நீதிக்கு எதிராக தனியார் துறை ஆர்.எஸ்.எஸ். அதிகாரிகளை குறுக்கு வழியில் அரசு பதவியில் அமர்த்தும் ஆபத்து: ஸ்டாலின் கண்டனம்
“சமூகநீதியைச் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையி லிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, வங்கித் தேர்வுகள், யூபிஎஸ்சி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், தபால் தந்தி இலாகா உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளுக்கு நடைபெறும் பல்வேறு தேர்வுகள் ஆகியவற்றில், ஏற்கெனவே சமூகநீதிக்குச் சாவுமணி அடித்து, போதாக்குறைக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மின்னல் வேகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து, இந்நாட்டின் நிர்வாகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்க உரிமையில்லை என்று இந்திய அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்திய வரலாற்றில், சமூகநீதிக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் முற்றிலும் எதிரான இப்படியொரு அரசு இப்போது பாஜக தலைமையில் அமைந்திருக்கிறது என்பது, நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் கேடு. இதன் அடுத்த கட்டமாகவே, தற்போது இணைச் செயலாளர்கள், கூடுதல் செய லாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் இருந்து ஆட்களை, அதுவும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்களை மத்திய அரசின் துறைகளுக்கு அழைத்து வந்து, எஞ்சி யிருக்கும் சமூகநீதிக் கட்டமைப்பை யும் தகர்க்க, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
தனியார் துறையிலிருந்து நியமனம் செய்யப்படும் போது இடஒதுக்கீட்டுக் கொள்கை தூக்கி எறியப்படும். அப்படி நியமிக்கப்படுவோர் அவர்களின் சித்தாந்தத்தில் உள்ளவர்களை அரசுத் துறைகளில் சேர்த்து விடுவார்கள்.
பத்து சதவீத இடஒதுக்கீடு போதாது என்று இப்படிக் குறுக்கு வழியிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் சீரழிக்க நடக்கும் இந்த முயற்சிகளைத் திமுக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. இது கார்ப்பரேட் ஆட்சி என்பதால், பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பு என்று தொடங்கி, அது பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்ற நேரத் தில், மத்திய அரசின் துறைகளையும் தனியார்மயமாக்கும் இந்த முடிவு அரசியல் சட்டத்திற்கே விரோதமானது.
அதுமட்டுமின்றி, மத்திய அரசு அலுவலகங்களில் தப்பித் தவறி பணி யில் அமர்த்தப்பட்டுள்ள பிற்படுத் தப்பட்ட, பட்டியலின, பழங் குடியின அலுவலர்கள், அதிகாரிகள் ஆகி யோருக்கு உயர் பதவிகளை எட்டாக் கனியாக்கி, அனைத்திலும் முன்னேறிய வகுப்பினரும் கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டியவர்களும் ஆக்கிரமித்துக் கொள்வதற்கே வழி வகுக்கும்!
பெரியார் முழக்கம் 11022021 இதழ்