அமெரிக்க அதிபர் ஆலோசனைக் குழுவிலிருந்து ‘ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நீக்கம்
மோடியும் டிரம்பும் மிகவும் நெருக்கமாகவே இருந்தார்கள். மோடியின் ‘இந்துத்துவா’ கொள்கையை தான் நேசிப்பதாக டிரம்ப் கூறினார். மோடி அமெரிக்கா போனார். அங்கே இந்தியாவிலிருந்து குடியேறி அமெரிக்க குடியுரிமை பெற்ற பார்ப்பன ‘தேச பக்தர்கள்’, ‘இந்துத்துவாவாதிகள்’ – டிரம்பின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டார்கள். இரண்டாம் முறையாக டிரம்ப் தான் அமெரிக்க அதிபர் என்று ஆதரவு திரட்டினார் மோடி.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் உலகம் முழுதும் ‘கொரானா’ எச்சரிக்கைகள் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி நடந்து கொண் டிருந்த காலத்தில் மோடி, டிரம்பை குஜராத்துக்கு அழைத்தார். ஒரு இலட்சம் மக்களைத் திரட்டி, ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற வரவேற்பு விழாவை நடத்தினார். அதனால்தான் டிரம்ப் பதவி விலகு வதற்கு சில நாட்களுக்கு முன்பாக மோடிக்கு உயரிய விருதை வழங்கி மகிழ்ந்தார். இந்த விருது, அமெரிக்காவில் சாதனைப் படைத்த இராணு வத்தினருக்கு அதிபர் வழங்குவது வழக்கமாம்.
இங்கே பார்ப்பன உயர்ஜாதியை மோடி எப்படி ஆதரித்து நிற்கிறாரோ அதுபோல டிரம்ப் வெள்ளை நிறவெறியர்களின் காவலராக இருந்தார் டிரம்ப். 50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோற்றார். ஜனநாயகத்தில் மக்கள் தந்த முடிவை டிரம்ப் ஏற்க மறுத்து அடம் பிடித்தார். வெற்றியை உறுதி செய்யும் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்பாக டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டு நாடாளுமன்றத்தைத் தாக்கினார்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
நீதிமன்றங்கள் டிரம்ப் மிரட்டலுக்கு பணிய வில்லை. அமெரிக்காவில் காலங் காலமாகப் பின்பற்றும் நாகரிகமான சம்பிரதாயம், பதவியிலிருந்த அதிபர் புதியதாக பதவி ஏற்கும் அதிபர் விழாவில் பங்கேற்பது என்பதாகும். அந்த சம்பிரதாயத்தையும் மதிக்காமல் விழாவைப் புறக்கணித்தார் டிரம்ப்.
டிரம்ப்பின் தோல்வியால் இந்தியாவில் பார்ப்பன மேட்டுக் குடிகள் துவண்டு போனார்கள். தங்களின் தோல்வியாகவே கருதினார்கள். டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் அது மோடிக்கு சூட்டிய மகுடமாக வெற்றிக் களியாட்டம் போட்டிருப்பார்கள்.
இப்போது பைடன் பதவிக்கு வந்தவுடன் என்ன நடந்திருக்கிறது? கருப்பர்கள் உரிமைகளை மதிப்போம் என்கிறார். மார்ட்டின் லூதரை தனது பதவி ஏற்பு விழாவில் நினைவு கூர்ந்தார். இந்திய வம்சாவளியில் வந்த கருப்பர் இன அடையாளமான கமலா ஹாரீஸ் இப்போது அந்நாட்டின் துணை ஜனாதிபதி.
இது தவிர மற்றொரு மாற்றமும் நிகழ்ந் துள்ளது. பைடன் ஆலோசனைக் குழுவிலிருந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவாளர்கள் நீக்கப்பட் டுள்ளார்கள். ஒபாமா அதிபராக இருந்தபோது அவரது முக்கிய ஆலோசகர்களாக இருந்த சோனல் ஷா மற்றும் அமீத் ஜானி இருவரும் பைடன் தேர்தல் பரப்புரைக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியர்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் உரிமை பறிப்பு போன்ற மோடி ஆட்சியின் செயல்பாடுகளை எதிர்த்துப் போராடிய 19 இந்தியர்களின் அமைப்புகள் இந்த ஆர்.எஸ்.எஸ். பேர் வழிகள், பைடன் ஆலோசனைக் குழுவில் இடம் பெறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் நீக்கப் பட்டுள்ளனர். ‘திடிரிப்யூன்’ அமெரிக்க நாளேடு (ஜன. 21, 2021) இந்த செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 28012021 இதழ்