‘வேலு’ம் ‘முருகனு’ம் ஓட்டுக்குத் துணை!
‘முருகன்’ தேர்தல் களத்துக்கு வந்து விட்டான்; ‘முருகன் வேல்’ இப்போது அரசியல் மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது; திருத்தணியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசிய மக்கள் கிராம சபையிலும் அவரது கட்சிக் காரர்கள் அவரிடம் ‘வேலை’ கொடுத்து விட்டார்கள். எல்லாம் ஓட்டு அரசியல் தான்; தி.மு.க.வையும் விட்டு வைக்கவில்லை.
ஸ்டாலின் ‘வேல்’ ஆயுதத்தை எடுத்த பிறகு பழனிச்சாமி அலறுகிறார்; பா.ஜ.க. முருகன் துடிக்கிறார்.
“ஸ்டாலின் வேல் தூக்கியிருப்பது பா.ஜ.க. வேல் யாத்திரைக்குக் கிடைத்த வெற்றி” என்கிறார் முருகன். முருகக் கடவுளின் வேல் பா.ஜ.க.வுக்கு மட்டுமே ‘பேட்டன்ட்ரைட்’ மற்ற கட்சிகள் பயன்படுத்தினால் அது பா.ஜ.க. தயவால் கிடைத்தது, என்கிறார். முருகக் கடவுள் ‘மிஸ்டு கால்’ வழியாக பா.ஜ.க. உறுப்பினராகி விட்டார் போலிருக்கிறது.
“யாரெல்லாம் கடவுளை இழிவாகப் பேசினார்களோ, அவர்கள் கையிலேயே முருகன் வேல் ஆயுதத்தைக் கொடுத்து காட்சி அளிக்க வைத்திருக்கிறார்” என்கிறார் முதல்வர் பழனிச்சாமி முருகப் பெருமான் சக்தியைப் பக்திப் பரவசத்தோடு பேசியிருக்கிறார். பேச்சு அத்துடன் நிற்க வில்லை. உண்மையிலேய முருகப் பெருமான் ஸ்டாலினிடம் ‘வேல்’ கொடுத்துவிட்டதாக வாக்காளர்கள் நம்பிவிடக் கூடாது அல்லவா?
அடுத்த வரியில், “உங்களுக்கு முருகன் ‘வேல்’ மட்டும் தான் தந்திருக்கிறான்; ஆனால் அ.இ.அ.தி.மு.க.வுக்கு முருகன் வரம் தந்து விட்டான்; வேல் தந்தால் எதிர்க்கட்சி வரிசைக்குப் போகலாம்; அதைத் தான் முருகன் ஸ்டாலினுக்கு உணர்த்தியிருக்கிறார்; எங்கள் கட்சி தான் தெய்வ குணாம்சம் கொண்டது” என்று பிரசங்கமே நடத்தி முடித்துள்ளார். நெற்றியில் விபூதி; குங்குமம்; கரங்களில் வண்ணக் கயிறுகள்; அதுபோதும் பக்திக்கு. மற்றபடி ஊழல்கள் செய்வதற்கும் முறைகேடுகளுக்கும் ‘பக்தி’க்கும் எந்தத் தொடர்பும் இல்லை..
முருகப் பெருமான், யார் ஆளும் கட்சி – யார் எதிர்க் கட்சி என்று முடிவு செய்து விட்ட பிறகு ஊர் ஊராகப் போய் எடப்பாடியில் எழுந்தருளியுள்ள இந்த பழனிச்சாமி ஏன் முழங்கிக் கொண் டிருக்கிறார்? ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணத்தை வாரி இறைத்து பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் விளம்பரங்களை செய்து கொண்டிருக் கிறார்? எதற்காக பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு பணிந்து குனிந்து பவ்யம் காட்டுகிறார்? பக்தி எல்லாம் வெறும் பேச்சுக்கு தானா? இப்படிக் கேட்டால் கடவுள் விரோதி என்று கூறி விடுவார்கள்.
‘வேல்’ ஆயுதத்தோடு இந்தப் பிரச்சாரங்கள் நிற்கப் போகிறதா? அல்லது அடுத்தக்கட்டமாக ‘வேல்’ ஆயுதத்தி லிருந்து ‘மொட்டை’ போடும் பிரார்த்தனைக்கு நகரப் போகிறதா என்பது நமக்குத் தெரியாது.
அரசியல் மேடைகளில் ‘வேல்’ தூக்கி நிற்கும் தலைவர்கள் அடுத்து ‘மொட்டை’த் தலையோடு வந்து நின்றால், எப்படி இருக்கும் என்று ‘கற்பனை’ செய்து பார்த்தாலே புல்லரிக்குது. போகிற போக்கில் ‘கடவுள் களை’யும் கூட்டணியில் சேர்த்து விடுவார்கள் போலிருக் கிறது. ‘சிவன்’ எந்தக் கூட்டணியில் சேரப் போகிறார்? ‘விஷ்ணு’வுடன் இரகசிய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முருகன் தனக்கு 10 இடங்களும் 5 கோடி பணமும் கேட்கிறார். ஸ்ரீரங்கத்தில் படுத்திருக்கும் பெருமாள், பிராமண சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து விட்டார். ‘கிருஷ்ணனை’ கூட்டணிக்கு இழுத்து வந்து விட்டால், பெண்கள் ஓட்டு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று வாக்காளர்களிடையே நடத்திய கணக்கெடுப்பு கூறுகிறது. விநாயகன் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று அடம் பிடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் ஆச்சரியமில்லை.
நடிகர் வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது. கோயிலுக்குள் முருகன் ‘வேலை’ திருடிக் கொண்டு வெளியே வரும்போது பக்தர்கள் கூட்டம் திரண்டு விடும். அதிர்ச்சி அடைந்த வடிவேலு, தன்னையே ‘கடவுள் முருகன்’ என்று கூறி “கோவில் அருகினில் கூடிய கூட்டம் கடலா? கடல் அலையா?” என்று உச்சக் கட்டையில் பாடத் தொடங்கி விடுவார். மக்கள் கூட்டமும் அதை நம்பி விடும்; தப்பி விடுவார். ‘முருக பக்தர்கள்’ எத்தகைய தலைசிறந்த அறிவாளிகள் என்பதை அற்புதமாக விளக்கும் காட்சி அது.
வடிவேலு, ‘வடிவேலன்’ வேலை அபகரித்த கதை அப்படி. கட்சிகள் ‘வேல் தூக்கி’ நிற்கும் கதை இப்படி.
உண்மையில் முருகன் என்று ஒருவன் கடவுளாக இருந்திருப்பானால், இந்த அரசியல் விளையாட் டுகளைத் துணிந்து இவர்கள் நடத்தியிருப்பார்களா?
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 28012021 இதழ்