பேராசிரியர் ஜவாஹிருல்லா பேட்டி மனித நேய மக்கள் கட்சி – திராவிட முஸ்லிம் கட்சி
பீகார் சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கானாவைச் சேர்ந்த முஸ்லிம் மஜ்லிஸ்(எம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரித்ததால் அங்கு தேஜஸ்வி தலைமையிலான மகா கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்தது. பாஜக-நிதிஷ்குமார் கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஒவைசியின் கட்சி போட்டியிடக்கூடும் என்று ஊடகங்கள் மூலமாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் தமிழகத் தின் நிலைமை வடமாநிலங்களி லிருந்து முற்றாக வேறுபட்டது என்றும், தமிழகத்தில் முஸ்லிம்களை ஒன்றுதிரட்ட ஒவைசி என்ற வெளி மாநில நபர் தேவையில்லை என்றும் அப்படி ஒருவர் வந்துதான் தமிழகத் தில் முஸ்லிம்களின் உரிமைகளை மீட்டுத் தரவேண்டிய நிலைமை இல்லை என்றும் விவரிக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா. ஸ்க்ரால் இணைய இதழுக்கு பேராசிரியர் ஜவஹிருல்லா பேட்டி ஒன்றை அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் –
வட இந்திய மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்தில் மிக அதிகமான அளவில் மத ஒற்றுமை நிலவுகிறது. நீங்கள் எந்த ஒரு முஸ்லீம் வீட்டின் திருமணத்திற்கும் சென்று பாருங்கள். அங்கு எவ்வளவு இந்துக்கள் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர் என்பதை நீங்கள் பார்க்க முடியும். அதேபோல இந்துக்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் பரவலாக பங்கேற்பதை நீங்கள் காணமுடியும். கோவிட் பெருந் தொற்று காலத்தில் எங்களது இயக்க உறுப்பினர்கள் கோவிட் நோயால் உயிரிழந்த 1600க்கும்அதிகமான மக்களின் உடல்களை அடக்கம் செய்துள்ளனர். அனைத்து மதத்தவர் களின் உடல்களையும் மதவேறுபாடு இல்லாமல் நாங்கள் அடக்கம் செய்து உள்ளோம்.இதுபோன்ற ஒரு மத ஒற்றுமையை நீங்கள் வேறு எங்கு காண முடியும்?
இத்தகைய மத நல்லிணக்கம்தான் தமிழகத்தில் முஸ்லிம்கள் பொரு ளாதார ஏணியில் மேலே செல்வதற்கு உதவியது. நீதிக்கட்சியின் காலத்தி லிருந்தே தமிழக அரசியலில் முஸ்லிம்கள் முக்கியமான பங்கை ஆற்றி வருகிறார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.திமுக/அதிமுகவில் கூட பல புகழ்பெற்ற முஸ்லீம் தலைவர்கள் இருந்தனர். இன்னும் இருக்கின்றனர். தமிழகத்தின் அரசியலில் இத்தகைய ஒரு பாரம்பரிய பின்னணி முஸ்லிம்களுக்கு இருக்கின்ற சூழலில் அவர்களுடைய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான முனைப்புகள் இங்கு குறைவாக இருக்கின்றன என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பாஜக ஆளுகின்ற உத்தர பிரதேசம் அல்லது பீகாரில் முஸ்லிம் களின் நலன்கள் முற்றிலும் புறக்கணிக் கப்படுகின்றன. அத்தகைய சூழல் தமிழகத்தில் இல்லை.
ஆனால் அதே வேளையில், முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் எல்லாமே முற்றிலும் சரியாக உள்ளது என்றோ அல்லது அனைத்தும் கிடைத்து விட்டன என்றோ நான் சொல்லவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் உருது பேசுகின்ற இரு பிரிவு முஸ்லிம்கள் பிரச்சனை களுக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பப்படுகின்றது என்பதையே நான் அழுத்தமாக கூறுகிறேன். இத்தகைய நிலையில், தமிழகத்திற்கு வெளியே இருந்து ஒரு முஸ்லிம் கட்சி தமிழகத்துக்குள் வர வேண்டியதேவை உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கேரளாவிலும் அசாமிலும் ஏற்கனவே வலுவான முஸ்லிம் கட்சிகள் உள்ளதால் அங்கு போட்டியிடப் போவதில்லை என ஒவைசி கூறி யுள்ளார். தமிழகத்தின் சூழலும் அதிலிருந்து மாறுபடவில்லை. எங்களின் வலிமையை பிரதிபலிக்கும் இளம் முஸ்லிம்களை ஒவைசியின் செல்வாக்கு தன் பக்கம் ஈர்த்துவிடும் என்ற காரணத்தால் அவர் இங்கு வரக் கூடாது என்று நாங்கள் சொல்ல வில்லை. நாங்கள் அவ்வாறு பயப் படவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நீங்கள் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். எங்களுக்கு வாக்களிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல. திராவிட கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் பொழுது நாங்கள் முஸ்லிம்கள் அல்லாத வாக்குகளையும் பெறுகிறோம் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
பா.ஜ.க. இந்தியா முழுவதும் வியாபித்துள்ள சூழலில் முஸ்லிம் களிடையே செயல்படும் கட்சிகள் பல மாநிலங்களில் பிரிந்து கிடக்கும் சூழல் என்பது இருக்கக் கூடாது என ஒருவர் வாதிட முடியும். இந்த தேசத்துக்கு ஒரு தேசிய அளவிலான முஸ்லிம் கட்சி தேவை உள்ளது என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. இந்த நிலைப்பாட்டிலிருந்து நான் வேறுபடுகிறேன். இந்தியா மத ரீதியாக பன்மைத் தன்மை கொண் டது மட்டுமல்ல; ஒவ்வொரு மதத்திற்குள்ளேயும், அதேபோல இந்தியாவின் ஒவ்வொரு பிரதேச பகுதிகளுக்குள்ளேயும் கூட பன்மைத் தன்மைகள் உள்ளன. மனிதநேய மக்கள் கட்சி தமிழகத் திலுள்ள ஒரு திராவிட முஸ்லிம் கட்சியாகும். அந்த வகையில் திராவிட தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் ஒரு தனித்தன்மை கொண்ட இயக்கம் மனிதநேய மக்கள் கட்சி என்பதை நான் கூற விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெரியார் முழக்கம் 14012021 இதழ்