அம்பலப்படுத்துகிறார், பேராசிரியர் கருணானந்தம் (4) ராகுல சாங்கிருத்தியாயனின் பார்ப்பனியம்
ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புதினம் ஆரியர்களை உயர்த்திப் பேசுகிறது. அதை வைத்து தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் கருணானந்தம். (சென்ற இதழ் தொடர்ச்சி)
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலில் பார்ப்பன கதாப்பாத்திரங்களின் வழியாக, இராகுல சாங்கிருத்தியாயன் கதைகளை கூறுகிறார். இந்த கதாபாத்திரங்களில் ஒருவர் கூட சூத்திரர் கிடையாது. கதாபாத்திரங்களில் ஒருவர்கூட இராட்சஷனோ, அசுரனோ கிடை யாது. அதாவது பார்ப்பனர்களை தலைவர் களாகக் கொண்டு நூலில் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். இன்னும் கூற வேண்டு மானால் 3ஆவது அத்தியாயத்தில் ‘அமிர்தாஷ்வன்’ என்ற ஒரு பார்ப்பனன் வழியாக கதையை கூறுகிறார். அவரும் சத்ரியர்கள் செய்வது தவறு என்று கூறுகிறார். நான்காவது அத்தியாயத்தில் ‘புரூகிதன்’, அய்ந்தாவது அத்தியாயத்தில் ‘பிரதானன்’, ஆறாவது கதையில் ‘அங்கீரா’ இவரை மிகவும் முக்கியமான வராக கூறுகிறார். இவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள். குரு ஏழாவது, எட்டாவது அத்தியாயத்தில் தான் மாறுபட்டு கருத்தைக் கூறுகிறார். ‘சுதர்ஷ்’ என்பவனும், ‘பிரவாகன்’ என்பவனும் பார்ப்பனர்கள் அல்ல சத்ரியர்கள். பிரவாகனை குறிப்பிடும்போது, மக்களை ஏமாற்று வதற்காக ‘பிரம்ம’ மதத்தைக் கொண்டு வருகிறார் என்று குறிப்பிடுகிறார். அனைத்தும் பிரம்மம் என்ற வேதாந்த தத்துவத்தை பிரவாகன் கொண்டு வருவதாக குறிப்பிடுகிறார். வேதாந்தங்களில் வரக்கூடிய அனைத்து பாசுரங்களும், ‘பார்ப்பனன் கடவுளைவிட மேலானவன். அவன் கடவுளையே கட்டுப்படுத்தக் கூடியவன். அவனுக்குத்தான் அனைத்து வழிபாடு உரிமை களும், தானங்களும் உரியது’ என்று கூறப்பட் டுள்ளது. பிரவாகன் உருவாக்கிய வேதாந்தத்தில், ‘இறைதன்மை பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே உண்டு’ என்று குறிப்பிடப் படுகிறது. ஆனால், பார்ப்பனன் மட்டும் தெய்வீகமானவர்கள் என்று குறிப்பிட்டதற்கு மாறாக அனைவரும் தெய்வீகமானவர்கள் என்று குறிப்பிட்டது எந்த வகையில் ஏமாற்று வேலையாகும்? அப்போது பார்ப்பனர்கள் மட்டும் தெய்வீகமான வர்கள் என்று குறிப்பிடுவது ஏமாற்று வேலை இல்லையா ? வேதாந்தங்களின் அடிப்படையில் வந்த ‘யக்ஞங்கள்’ ஏமாற்று வேலை இல்லையா ? இவற்றை ஏமாற்று வேலை என்று கூறாத இராகுல சாங்கிருத்தியாயனின் கதாபாத்திரங் கள், பிரவாகனின் வேதாந்தங்கள் மட்டும் மக்களை ஏமாற்றும் பணி என்று எப்படி கூற லாம்? சத்திரியர் கூற்று சாங்கிருத்தியாயனுக்கு தவறாகிறது; பிராமணன் கூற்று சரியாகி விடுகிறது. அப்போ ‘ளுநடநஉவiஎந உடிளேஉiடிரளநேளள’ சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு
பேசுவது.
இவ்வளவு நிகழ்வுகளை குறிப்பிட்ட இராகுல சாங்கிருத்தியாயன், புத்தர் காலத்தை பேசுகிறார், ஆனால் புத்தரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. புத்தரின் வாயிலாக அப்போதைய சமூக சூழலை குறிப்பிடவில்லை.
இவர் சாணக்கியனை நேரடியாக குறிப்பிட வில்லை. ஆனால், சாணக்கியனின் சிஷ்யன் தான் சந்திரகுப்த மௌரியர் என்று குறிப்பிடுகிறார். புராணக் கதைகளை உண்மை என்றே உறுதிப் படுத்தி வரலாறுகளைத் திணிக்கிறார் இராகுல சாங்கிருத்தி யாயன்.
நாகானந்தம், இரத்தினாவெளி, பிரியதன்சிகா என மூன்று நாடகங்களை எழுதியவர் ஹர்ஷவர்தன். ஆனால் பாணன் தான் அவற்றை எழுதியதாகவும் ஹர்ஷன் தனது பெயரை போட்டுக்கொண்டதாகவும் சாங்கிருத்தியாயன் குறிப்பிடுகிறார். இதற்கு எங்கு ஆதாரம் உள்ளது? சாணக்கியன் தான் சந்திரகுப்தரை உருவாக்கி யதாக எங்கே ஆதாரங்கள் உள்ளது ? இவர்கள் கூறும் புராணங்களைத் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் இவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறவர், ஹர்ஷனுக்கு மட்டும் விமர்சனப் பார்வையை வைக்கிறார். ஏனென்றால் பாணன் பார்ப்பனன். ஒரு கவியை அல்லது நாடகத்தை பார்ப்பனன் மட்டும் தான் இயற்றக கூடிய திறமை படைத்தவன் என்று கூற வருகிறீர்களா ? எந்தப் படைப்பும் பார்ப்பனன் தான் ஒழுங்காக படைக்க முடியும் என்ற சிந்தனையா? பார்ப்பனன் அல்லாதவர்கள் நாடகங்களை உருவாக்கவே முடியாதா ?
வரலாறுகளை குறிப்பிடும் இராகுல சாங்கிருத்தியாயன், ஹர்ஷவர்தன், யுவான் சுவாங்கை ‘பிரயாகை மாநாட்டில்’ பார்ப்பனர்கள் கொலை செய்ய முயலுவதை குறிப்பிடாமலேயே கதை எழுதியுள்ளார்! உள்ளூர் கன்னாசியிலும் யுவான் சுவாங்கை யும் ஹர்ஷவர்தனையும் பார்ப்பனர்களால் கொலை செய்ய முயற்சி நடக்கிறது. பந்தல் தீயிடப்படுகிறது. கத்தியுடன் ஹர்ஷவர்தனையும் யுவான் சுவாங்கையும் கொல்ல வருகிறார்கள். பிடிபட்டவர்கள் பார்ப்பனர்கள். இராகுல சாங்கிருத்தியாயன் கதைகளில் சுவாரஸ்யத் திற்காக பலவற்றை இணைத்திருப்பதைப் போல இந்த நிகழ்வையும் இணைத்திருந்தால் விறு விறுப்பாக இருந்திருக்கும். விறுவிறுப்பான கதைகளை உருவாக்கிய இராகுல சாங்கிருத்தி யாயன் பார்ப்பனர்கள் மன்னனை கொலை செய்ய முயற்சித்ததை ஏன் மறைக்கிறார் என்று புரியவில்லை. பெரிய இடதுசாரி, முற்போக்கு சிந்தனையாளராக இருந்தாலும்கூட அவருடைய பார்ப்பன உணர்வு சிலவற்றை மறைக்கத் தூண்டுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
‘அஷ்வ கோஷ்யரைப்’ பாராட்டுகிறார். எதற்காக பாராட்டுகிறார்? பிறவியில் பார்ப்பனன் என்பதற்காக பாராட்டுகிறார். பெருந்தன்மையோடு மஹாயான பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார் என்று குறிப்பிடுகிறார். ஆனால் உண்மை என்னவென்றால், மஹாயான பௌத்தமே பார்ப்பன ஊடுருவலால் திரிக்கப் பட்ட ஒன்று. வரலாறுகளைத் திரிப்பதில் பார்ப்பனர்கள் கைதேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுவதை விட்டுவிட்டு மஹாயான பௌத்தம் மிகவும் உயர்ந்தது என்றும், அதை உருவாக்கியதில் அஷ்வகோஷியருக்கு முக்கியமான பங்கும் உள்ளது என்று குறிப்பிடு கிறார். ஆனால், பவுத்தத்தை உருவாக்கிய கௌதம புத்தர், கனிஷ்கர் ஆகியோரை குறிப்பிடவில்லை. இராகுல சாங்கிருத்தியாயன் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் பார்ப்பனர் களாக இருக்கின்றனர். அவர்கள் தான் சீர்திருத் தக்காரர்கள், அடிமை முறையை மாற்ற வந்தவர்கள் போன்று கதைகளில் குறிப்பிடு கிறார். துர்முகன் என்ற கதாபாத்திரம் மூலம் ‘ஹர்ஷவர்தன் ஏன் இந்த அடிமை பெண்களை விடுவிக்க கூடாது’ என்று குறிப்பிடுகிறார். ஹர்ஷவர்தன் ஒரு பௌத்தர். அவனை கொலை செய்ய பல முயற்சிகள் நடந்தன. ஆனால் ஹர்ஷ்வர்தனை இறுதியான இந்து மன்னன் என்று குறிப்பிடுகிறார்கள். அதிலும் கூட குறையை பேசுகிறார். நாம் கூறுவது என்ன, ‘குறைநாடி குற்றமும் நாடி அதில் மிகைநாடி’ என்று கூறுகிறோம். அதை பின்பற்றுவதே இல்லை. எந்த கதைகளில் சத்ரியர்கள், பௌத்தர்கள் வருகிறார்களோ அங்கு குறை நாடுகிறார். பார்ப்பனர்கள் வரும் கதைகளில் நிறை நாடுகிறார். இது என்ன வரலாற்று அணுகுமுறை? இந்த கதைகளை வைத்துக் கொண்டு, அசுரர்களிடையே அடிமை வியாபாரம் இருந்தது, வேசித் தொழில் இருந்தது என்று கூறுவது உங்கள் சுயநலத்திற்காக அனுமானத்தின் அடிப்படையில் திரித்துக் கூறும் கற்பனைகள் அல்லவா ? வரலாறு என்பது உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அனுமானங்களின் அடிப்படையில் இருக்கக் கூடாது.
இராகுல சாங்கிருத்தியாயனை வரலாற்று ஆசிரியர் என்ற முறையில் பாராட்டுகிறேன். அதே சமயம் கதாசிரியர் என்ற முறையில் அவரை நான் பார்ப்பன உணர்வாளராக பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக கூற வேண்டு மானால், பிழைக்கத் தெரிந்த பார்ப்பன உணர்வாளராக பார்க்கிறேன். சோவியத் துடன் நட்புறவு உள்ளபோது வால்கா முதல் கங்கை வரை என்று தலைப்பை வைக்கிறீர்கள். இந்த தலைப்பே நீங்கள் அவ்வளவு நேர்மையானவர் இல்லை என்று கூறவில்லையா ? முதல் மூன்று கேள்விகளுக்கு இதிலேயே பதில் உள்ளது.
தொழிற் பிரிவுகள், அடிமை வியாபாரம் ஆகியவை அனைத்து நாகரிகங்களிலும் உள்ளன. ஆனால் நாகரிகமே இல்லாத நாடோடி களிடம் இவை எதுவும் இருக்காது. இதை வைத்துக் கொண்டு ஆரியர்கள் மேலானவர்கள் என்று எப்படி கேள்வியைக் கேட்கிறீர்கள்? ஆரியர்கள் அரசாட்சியை நிறுவிய பிறகு எப்படி நடந்து கொண்டார்கள் என்பதல்லவா முக்கியம். ஆரிய அரசாங்கங்கள் ஏற்பட்ட பிறகு ஆரியர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தானே பார்க்க வேண்டும். சூத்திரர்களைத் தீண்டத்தகாதவர்களாக மாற்றியது ஆரிய மன்னர்கள். அசுரர்களிடம் தொழில் திறமைகள் இருந்தாலும் போரிடும் திறமையில்லை. அத்தகைய போர்த் திறமை இலலாதவர்கள், ஆரியர்களிடம் தோற்கத்தானே செய்வார்கள்? இது இயற்கை தானே என்று கேள்வி கேட்கிறார்கள். போரை நீங்களே தொடங்கி நடத்தியதை வீரம் என்று நியாயப் படுத்துகிறீர்களா? நான்கு வர்ணங்களில் உழைக்கும் மக்களை நான்காவதாக ஆரியம் வைத்துள்ளது. உழைக்கும் மக்களை நான்காவதாக வைத்துவிட்டு, அசுரர்களின் சமூகக் கட்டமைப்பை நீங்கள் குற்றம் சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது.
அசுரர்களிடம் நீங்கள் சென்றீர்களே தவிர அசுரர்கள் உங்கள் பகுதிக்கு வரவில்லை. இராவணன் ஆண்ட தென் பகுதிக்கு இராமன் சென்றான். இராவணன் அயோத்திக்கு சென்று படையெடுக்க வில்லை. மஹாபாரதமும் என்ன கூறுகிறது ? நீங்கள் பிற பகுதிகளுக்கு சென்று போரிடுகிறீர்கள். ஆக்கிரமிப்புக்காரன் யார் ? ஊடுருவல் காரன் யார் ? கோட்டை கட்டி வாழ்ந்தவன் இங்கே இருந்த உள்ளூர் மன்னன். அவன் அசுரன். அந்த கோட்டைகளை இடி வந்து தாக்கும் என்று வந்தவன் யார் ? ஆரியன் வெளியிலிருந்து வந்த நாடோடி, நாகரிக முதிர்ச்சி இல்லாதவன் காட்டுமிராண்டி. எப்போதுமே இருப்பதற்கு இடம் இல்லாமல் அழையும் இந்த இரவுடிகளுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. அவன் எந்தவிதமான முரட்டுத் தாக்குதலை யும் செய்வான். எனவே பெரிய நாகரிகங்கள் வீழ்ந்தது, முரடர்களால் தான். எகிப்திய நாகரிகம் ஹைக்சோஸ் என்ற முரடர்களிடம் வீழ்ந்தது. ரோமானிய சாம் ராஜ்யம், பார்பேரியன்கள் என்கின்ற நாகரிக மற்றவர்களிடம் வீழ்ந்தது. சிந்துவெளி நாகரிகமும் ஆரிய முரடர்களால் வீழ்ந்ததே தவிர சிந்துவெளியை விட நாகரிகம் மேம்பட்டவர்களிடம் வீழவில்லை. ஏதோ வெற்றியடைந்தவர்கள் அனைவரிடமும் உயர்ந்த பண்பு உடையதாக பேசுவது பேதைமை. எப்போதுமே நல்லதெல்லாம் வெற்றி பெறவேண்டும் என்று நாம் விரும்புகிறோம், ஆனால் வெற்றி பெரும் அனைத்தும் நல்லவை என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
(நிறைவு)
பெரியார் முழக்கம் 14012021 இதழ்