உ.பி. பாஜக அரசு அமைத்த கோ சாலையில் 12 பசுக்கள் எரிந்து பலி
உத்தரப்பிரதேசத்தில் பசுமாடுகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அம்மாநில பாஜக அரசு, ஏராளமான கோ சாலைகளை அமைத்துள்ளது. இந்த கோ சாலைகளில் பசுக் களின் பராமரிப்பு, தீவனங்களுக்காக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால், கோ சாலைகளில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகள் காரணமாக, பசு மாடுகள் தீவனமின்றி பட்டினியால் இறந்து போவதும், போதிய பராமரிப்பின்மைக் காரணமாக கொத்துக் கொத்தாக நோயால் செத்து மடிவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில்தான், செவ்வாயன்று பாக்பத் மாவட்டம் நக்லா பாடி கிராமத்திலுள்ள கோ சாலையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பசுமாடுகள் பரிதாபமான முறையில் இறந்துள்ளன. 18 பசு மாடுகள் கடுமையான தீக்காயம் அடைந்துள்ளன. கோ சாலையில் இணைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் திடீரென உயர் மின்அழுத்தம் பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துணைஆட்சியர் அஜய் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெரியார் முழக்கம் 14012021 இதழ்