‘கொரானா’ இடைவெளிக்குப் பிறகு தோழர்களின் முதல் சந்திப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்த இரு நாள் பயிற்சி முகாம்
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பெரியாரியல் பயிலரங்கம் மேட்டுப்பாளையம், பேருந்து நிலையம் அருகில் ஈஸ்வரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 03.01.2021 ஞாயிறு, 04.01.2021திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் நடந்த இப்பயிலரங்கில், முதல் நிகழ்வாக தோழர்கள் சுய அறிமுகத்துடன் பயிலரங்கில் கலந்து கொள்ளும் புதிய தோழர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து பெண் தோழர்கள் கொள்கைப் பாடல்களைப் பாடினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பயிலரங்கின் அவசியம் குறித்தும் பெரியாரியலை, ‘வாழ்க்கை-சமூகம்-மாற்றம்’ என்ற மூன்று தளங்களில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்றும் விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் “செயல்பாடுகள், கட்டுப்பாட்டு நெறி முறைகள்” ஆகியவை குறித்து பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, இணையதள செயல்பாடுகள் குறித்து இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் உரையாற்றினார்.
இரண்டாம் நிகழ் வாக ‘பெரியாரின் மொழிக் கொள்கை’ எனும் தலைப்பில் தலைமைக் குழு உறுப் பினர் மடத்துக்குளம் மோகன், நிறைவாக “பெரியாரும் பெண்ணுரிமையும்” எனும் தலைப்பில் கோவை மாவட்டச் செயலாளர் வெள்ளியங்கிரி வகுப்புகளை எடுத்தனர். பிறகு பயிலரங்கில் கலந்து கொண்ட புதிய தோழர்கள் பயிலரங்கம் குறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். தோழர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. விளையாட்டு நிகழ்வுகளில் பயிற்சி யாளர்கள் பங்கேற்றனர். முதல் நாள் நிகழ்வுகள் மாலை 6.00 அளவில் நிறைவுற்றது.
இரண்டாம் நாள் 4.1.2021 அன்று முதல் வகுப்பாக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘மதமும் அரசியலும்’ என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். மதம் கட்டமைத்த சடங்குகளை எதிர்த்தே மனித சமூகம் முன்னேறி வந்துள்ளதை சுட்டிக் காட்டி, ஜாதி ஆதரவு – பெண்ணுரிமை மறுப்பு – மாநிலங்களை ஒழித்தல் – சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்குதல் ஆரிய இனமே உயர்வானது என்பதே ஆர்.எஸ்.எஸ். அடிப்படை இலட்சியம் என்பதை ஆர்.எஸ்.எஸ். தத்துவ நூலான கோல்வாக்கர் எழுதிய ‘பஞ்ச் ஆப்தாக்ட்ஸ்’ நூலிலிருந்து எடுத்துக்காட்டி விளக்கினார். தொடர்ந்து பயிற்சியாளர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு விளக்கமளித்தார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘இடஒதுக்கீடு வரலாறு’ தலைப்பில் பிரிட்டிஷ் ஆட்சி, நீதிக் கட்சி ஆட்சி, காங்கிரஸ்-தி.மு.க.-அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் இடஒதுக்கீடு அமுலாக்கப்பட்ட வரலாறுகளை விரிவாக எடுத்துரைத்தார். மத்திய அரசில் பிற்படுத்தப்பட் டோருக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை வி.பி. சிங் கொண்டு வந்தார். பிறகு 2006இல் கல்வியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டு வந்தது. அதை செயல்பட விடாமல் முடக்க நீதித் துறை பார்ப்பன அதிகார வர்க்கம் செய்த சதிகள் ‘நீட்’ தேர்வின் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கி வகுப்பு எடுத்தார். பின்னர் தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார். 65 பேர் பயிற்சியில் பங்கேற்றார்கள்.
இரண்டு நாள் பயிற்சி முகாமையும் தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் ஒருங் கிணைத்தார். நீண்ட கொரானா இடைவெளிக்குப் பிறகு கழகத் தோழர்களின் நேரடியான முதல் சந்திப்பாக இந்தப் பயிற்சி முகாம் அமைந்திருந்தது. கோவை, திருப்பூர் மாவட்டக் கழகம் இணைந்து இந்த முகாமை நடத்தின.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 07012021 இதழ்