நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கோவை : கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் 46 வது நினைவு நாளில் தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து, மாநகர துணை தலைவர் வெங்கட் கொள்கை முழக்கங்கள் எழுப்பி, விஷ்ணு உறுதிமொழி வாசிக்க தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் சுரேஷ்-தர்ஷினி இணையர்  தேனீர் வழங்கினர்.

சென்னை :  24.12.2019 அன்று காலை 9 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

திருப்பூர் : திருப்பூர் இரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு  காலை 10 மணியளவில் தி.க, தி.வி.க, த.பெ.தி.க தோழர்கள் இணைந்து  மாலை அணிவித்தனர். கழகத் தோழர் திருப்பூர் சரசுவதி மாலை அணிவித்தார்.

நாமக்கல் : திருச்செங்கோடு நகர புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியாரின்  சிலைக்கு காலை 9 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக நகர செயலாளர் பூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் திருச்செங்கோடு நகர கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

இராசிபுரம் : இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் அத்தனூர் பேரூராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரத்திலுள்ள பெரியாரின் சிலைக்கு காலை 9 மணியளவில் இராசிபுரம் நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வின் போது, சமத்துவபுரத்தில் வசித்துவரும் அரசன் மாவட்ட பொருளாளர் (விசிக) கலந்து கொண்டார்.

தென்காசி : தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கீழப்பாவூர், பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் அ.மாசிலாமணி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது..

பெரியார் முழக்கம் 16012020 இதழ்

You may also like...