சென்னை திருக்குறள் மாநாட்டின் மாபெரும் எழுச்சி குறள் நெறியே தமிழர் மதம் என சூளுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் காமராசர் அரங்கில் ஆக. 12 அன்று திருக்குறள் மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. ஆரியத்துக்கு எதிரான தமிழர்களின் அடையாளம் திருக்குறள் என்று மாநாடு முரசறைந்தது. ‘தமிழர் மதம் குறள் மதம்; தமிழர் நெறி குறள் நெறி’ என்று பெரியார்

முன் வைத்த பண்பாட்டு முழக்கத்தை முன்னெடுப்போம் என்று மாநாடு சூளுரைத்தது.

மாநாடு காலை 9.30 மணியளவில் மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையோடு தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக மேடையில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அருகே கூட்டமைப்பின் செயல்பாட் டாளர்கள் அறச்சுடரை ஏற்றினர். கோவை இராமகிருட்டிணன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்தரங்கத்தில் பொழிலன், சோ. திருநாவுக்கரசு, சு. பழனிராசன், பேராசிரியர் ருக்மணி பன்னீர்செல்வம், இரா. வினோத்குமார் உரையாற்றினர். முனைவர் இளங்குமரனார் மிகச் சிறப்பான தொடக்க உரையாற்றினார். பாவேந்தன் நெறிப்படுத்தினார்.

தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இளைஞர்கள் – பெண்களும் ஆண்களும் பெரியார் சிந்தனைகளை முன் வைத்து உணர்ச்சிபூர்வமாகப் பேசினர். நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட குறும் படங்கள், இசை நாடாக்கள் நிகழ்வில் வெளியிடப்பட்டு திரையில் காணொளி காட்சிகளாக ஒளிப்பரப்பப்பட்டன.

பிற்பகலில் நடந்த கருத்தரங்கில் அருளியார், பேராசிரியர் அரசு, முகிலன், செந்தலை கவுதமன், வழக்கறிஞர் அருள்மொழி, விடுதலை இராசேந்திரன், பா. செயப்பிரகாசம், தழல் தேன்மொழி, அரங்கையா முருகன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வை தபசி குமரன் நெறிப்படுத்தினார். தொடர்ந்து திருக்குறளைப் பரப்புவதற்காக செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட சான்றோர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் வே. ஆனைமுத்து தலைமையேற்று விருதுகளை வழங்கினார்.

இரவு 7 மணியளவில் நிறைவரங்கம் தொடங்கியது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் சத்தியராஜ், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், கோவை இராமகிருட்டிணன், தெகலான் பாகவி (எஸ்.டி.பி.அய்.) எம்.எச். ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கே.எம்.செரீப், காசு. நாகராசன், குடந்தை அரசன், பொழிலன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். வாலாஜா வல்லவன் வரவேற்புரையாற்ற பொழிலன் தலைமை தாங்கினார். திருமுருகன் காந்தி தீர்மானங்களை முன் மொழிந்தார். சீனி. விடுதலை அரசு நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.

மாநாட்டையொட்டி, ‘திருவள்ளுவர் 2050: ஆண்டுகள் அடைவுகள்’ என்ற ஆவண நூல் வெளியிடப்பட்டது. 980 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை பொழிலன் தலைமையிலான குழுவினர் தொகுத்திருந்தனர். ரூ.900 விலை கொண்ட இந்த நூல், மாநாட்டில் ரூ.700க்கு விற்கப்பட்டது. ஆவண நூலை கோவை இராமகிருட்டிணன் வெளியிட விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார்.

மாநாட்டு அரங்கிற்கு வெளியே திருக்குறள் சார்ந்த கலை வடிவ கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்  டிருந்தது. விடுதலை இராசேந்திரன், கோவை இராம கிருட்டிணன் கண்காட்சியைத் திறந்து வைத்தனர். கண்காட்சியை சென்னையைச் சேர்ந்த மாதவன் சிறப்பாக வடிவமைத் திருந்தார்.

காமராசர் அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் காலை முதல் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலையில் அமருவதற்கு இடமின்றி ஏராளமானோர் நின்று கொண்டே நிகழ்வுகளைக் கேட்டனர். மாநாடு முழுதும் பெரியாரியமே பேசும் பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • திருக்குறளை இயக்கமாக்கி செயல்படுத்துவோம்.
  • திருக்குறளை தமிழ்நாட்டின் தேசிய நூலாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
  • தமிழக அரசின் இலட்சினையை திருவள்ளுவரை உள்ளடக்கி மாற்றம் செய்ய வேண்டும்.
  • குறள் விழா ஒன்றை பண்பாட்டு விழாவாகத் தமிழர்கள் முன்னெடுத்துக் கொண்டாட வேண்டும்.
  • வழிபாட்டு இடங்கள் அனைத்திலும் திருக்குறள் அறிவகம் என்கிற பெயரில் நூலகம் அமைத்திட வேண்டும்.
  • உலக திருக்குறள் மாநாட்டை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும்.
  • திருக்குறளைப் பார்ப்பனிய இந்து சனாதனத் தன்மை கொண்டதாய் அடையாளப்படுத்தும் சிலரின் போக்கை மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது

– என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரியார் முழக்கம் 15082019 இதழ்

You may also like...