நான் நரகாசுரன்… – சவுரி, பெங்களூர்

நடப்பவைகளை சகித்துக் கொள்ளாதபோது

நான் நரகாசுரன்

எங்கிருந்தோ வரும் தேவர்கள் எங்கள் கதிராமங்கலத்தில்

துளையிடுவதை எதிர்த்துக்  கேட்டால்

நான் நரகாசுரன்.

மூலதன கூர்மாவதாரங்கள் எனது நெடுவாசலைப் பாயாய் சுருட்டிக் கொண்டு

ஓட வருகையில், வீதிக்கு வந்து விரட்டினால்

நான் நரகாசுரன்.

தமிழகத்தையே மத்தாக்கி கெயில் ஆதிசேஷன் இறுக்குகையில்  –

அமிர்தம் மேல் லோகத்திற்கு, விஷம் எங்களுக்கா?

என ஆர்த்தெழுந்துப் போராடினால்

நான் நரகாசுரன்.

பசுந்தளிர் அகலிகையை அபகரிக்க ‘மேக் இன் இந்தியா’ மாறுவேடத்தில் வரும்

பன்னாட்டு இந்திரனைத் தடுத்து நிறுத்தினால்

நான் நரகாசுரன்.

அழகிய தாமிரவருணியை ஆக்கிரமிக்க வரும் அமெரிக்க பிரகஸ்பதியை –

என்னைக் கொன்றுவிட்டு தீபாவளி, என் ஆற்றைக் கொன்றுவிட்டு

கொக்கோகோலாவா?  என எதிர்த்துக் கேட்டால்

நான் நரகாசுரன்

வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர்மெய், அணியாய்,

இலக்கணமாய் இலக்கியமாய் என் குருதி கலந்த

தாய்த்தமிழை ஆதிக்கம் செய்ய வரும் சமஸ்கிருதத்தை அடித்துத் துரத்தினால்

நான் நரகாசுரன்.

கருவறைக்குள் வந்தால் தீட்டு, கல்வி பயில வந்தால் நீட்டு,

பூர்வகுடி உரிமைகளுக்குப் பூட்டு என்ன அநியாயம்?

இந்த அரசுக் கட்டமைப்பை ஓட்டு – என தெளிந்து நின்றால்

நான் நரகாசுரன்

– சவுரி, பெங்களூர்

நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்

You may also like...