‘இந்துராஷ்டிரம்’ உருவாக்க ‘படுகொலைகள்’

‘சனாதன் சன்ஸ்தா’வின் பார்ப்பன பயங்கரவாத பின்னணி

தபோல்கரிலிருந்து  – கவுரி லங்கேஷ் வரை சுட்டுக் கொன்ற இந்த அமைப்பு, இராணுவம், போலீசை வீழ்த்தவும் படை திரட்டுகிறது.  தேர்தல், நீதிமன்றம், ஜனநாயகத்துக்கு அவர்கள் அமைக்கப் போவதாகக் கூறும் இந்து இராஷ்டிரத்தில் இடமில்லை என்று தனது பத்திரிகையில் எழுதி வருகிறது.

நகர்ப்புற கொரிலாக்கள் என்ற பெயரில் சமுதாய சிந்தனைகளை விதைத்து வரும் எழுத்தாளர்கள், கருத்தாளர்களை பயங்கரவாதி களாக்கி தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்து வரும் மோடி ஆட்சி, ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடி வரும் ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து மதவெறி அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.

இந்து ஆன்மீகம் பேசிக் கொண்டே அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போரை நடத்துகிறோம் என்ற கொள்கையைக் கொண்ட இந்த அமைப்பு 2025க்குள் இந்தியாவை ‘கடவுள் ராஜ்யம்’ அல்லது ‘இந்து இராஷ்டிர’மாக மாற்றுவோம் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது. அதன் முதல்கட்டமாக தீயசக்திகளை அழிப்பது என்ற திட்டத்தோடு தபோல்கர், கல்புர்க்கி, பன்சால், கவுரி லங்கேஷ் ஆகியோரை சுட்டுக் கொலை செய்ததோடு, மேலும் நீண்ட கொலைப் பட்டியலையும் தயாரித்துள்ளது. சனாதன் சன்ஸ்தாவின் இந்து இராஷ்டிரத்தில் புத்தம், சமணம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களுக்கோ, மதத் தினருக்கோ இடமில்லை என்றும் இந்து இராஜ்யத்துக்கான தனி அரசியல் அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. இதன்படி ஜனநாயகம், தேர்தல், நீதிமன்றங்கள் முற்றாக ஒழிக்கப்படும். இந்து தர்மத்தைப் பரப்பும் கல்வி முறை உருவாக்கப் படும் என்று அந்த அமைப்பின் கொள்கைப் பிரகடனம் கூறுகிறது. (ஆதாரம்: சனாதன் சன்ஸ்தா, வெளியிட்ட ‘சாஸ்தரா தர்ம சாதனா’ நூல், 1999)

பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவு இதுவரை இந்த அமைப்பைச் சார்ந்த 7 நபர்களைக் கைது செய்துள்ளது. வைபவ் ரவுத், சரத் கலாஸ்கர் மற்றும் சுதான்வ கொந்தலேகர் ஆகிய மூவரும் கடந்த ஆக.10ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ரவுத் பங்களாவிலிருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பயங்கரவாத மதவெறிக் கும்பல், பல்வேறு சங்கிலித் தொடர்புகளோடு களமிறங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. ரவுத் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பம்பாய் மகாராட்சி முன்னாள் சிவசேனை உறுப்பினர் பங்கர்கர் என்பவர், ஆகஸ்ட் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் இந்து ஜனஜக்குரி என்ற மற்றொரு இந்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர். தொடர்ந்து கலாஸ்கர் மற்றும் சுதான்வ கொந்தலேகர், அவினாஷ் பவார் ஆகிய இந்து பயங்கரவாதிகளும் கொலையில் தொடர் புள்ளதாக கண்டறியப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளனர். தபோல்கரை துப்பாக்கியால் சுட்டவர் என்று கைது செய்யப்பட்டுள்ள சச்சின் அந்துரே என்பவரும் இந்து பயங்கரவாத குழுவைச் சார்ந்தவர். குறிப்பாக பெங்களூரில் இந்துத்துவ எதிர்ப்பாளரும் பத்திரிகை யாளருமான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விசாரணை தீவிரமான நிலையில்தான் இந்து மதவெறி அமைப்புகளுக் கிடையே உள்ள தொடர்புகள் கண்டறியப்பட்டு, பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவது தொடங்கியது.

தபோல்கர், பன்சாரே (இருவரும் மகாராஷ்டிர பகுத்தறிவாளர்கள்) சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ‘சன்தான் சன்ஸ்தா’ அமைப்பைச் சார்ந்த விரேந்திர தாவ்டே மற்றும் சமீர் கெய்க்வார்டு இருவரும் 2016ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர். இதில் தாவ்டே ஒரு மருத்துவர். தபோல்கர் கொலைக்கு சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றியவர் என்று குற்றம்சாட்டப் பட்டார். கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான கெய்க்வார்ட் பிறகு விசாரணையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஏப். 2006இல் நந்தீட் நகரில் உள்ள ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் வீட்டில் குண்டு வெடித்தது. 2007 பிப்ரவரியில் அதே நந்தீட் நகரில் மீண்டும் குண்டு வெடித்தது. இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 2008ஆம் ஆண்டில் மாலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த சாத்வி பிரக்யாசிங், சிறிகாந்த் புரோகித் இருவரும் கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டில் தானே, வாஷி மற்றும் பான்வெல் நகரங்களில் உள்ள தியேட்டர்களில் குண்டு வெடித்தது. இதற்குக் காரணமான ரமேஷ் கத்காரி மற்றும் விக்ரம் பாவே இருவரும் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு, 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். இதில் கத்காரி அண்மையில் பிணையில் வெளி வந்துள்ளார். அவரை ‘வீரத் துறவி’யாக சந்தான் சன்ஸ்தா அங்கீகரித்து கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் வன்முறை களுக்கு ‘சன்ஸ்தா’ தொடர்பு இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. கோவாவில் மார்கோவா என்ற இடத்தில் நடந்த குண்டு வீசித் தாக்குதலில் சன்ஸ்தா அமைப்புக்கு தொடர்பு உள்ளது அம்பலமானது. அந்த குண்டு வெடிப்பில் சிக்கி ‘சன்ஸ்தா’வின் இரண்டு உறுப் பினர்கள் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

ஆக நாடு முழுதும் இந்த பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருவதை உணர முடிகிறது. பெரும்பான்மை மக்களான இந்துக்களுக்காகத் தானே இவைகள் நடக்கின்றன என்ற கண்ணோட்டத்தோடு புலனாய்வு அமைப்புகளும் நடுவண் அரசும் இந்த அமைப்புகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காமல், ஒதுங்கி நிற்கின்றன. ‘சனாதன் சன்ஸ்தா’வை தடை செய்ய வேண்டும் என்று கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆட்சிகள் 2008ஆம் ஆண்டிலிருந்தே வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தடை செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நடுவண் அரசு தடை செய்ய மறுத்து வருகிறது. சன்ஸ்தா நாடு முழுதும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி உதவிகளையும் தாராளமாக செய்து வருகிறது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்த போதுகூட, இந்த அமைப்பை முடக்குவதற்கோ, எங்கிருந்து நிதி வருகிறது என்பதைக் கண்டறிவதற்கோ ஆர்வம் காட்டவில்லை. இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு இந்தச் செயல்களை அதற்கான எதிர்வினை என்று நியாயப்படுத்தும் மனப்போக்கே மேலோங்கி நின்றது. ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற சொற்றொடர் 1990ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது இந்த ‘ஒற்றைச்சொல்’, ‘மந்திரச் சொல்லாக’ மாறி, பல அப்பாவி இஸ்லாமியர் களின் உயிரைப் பறித்தது. பல இஸ்லாமிய இளைஞர்களும், அவரது குடும்பத்தினரும் பொய் வழக்குகள் போடப்பட்டு ‘பயங்கரவாதி’ என்ற முத்திரை குத்தி சிறையில் அடைக்கப் பட்டனர். அதைப் பயன்படுத்தி ‘சன்ஸ்தா’ வெளிப்படையாக ஆட்சிகளின் ஆதரவோடு வெளியே வந்தது. தொலைக்காட்சி விவாதங்களிலேயே இந்த அமைப்பின் அடையாளத்தோடு பங்கேற்றுப் பேசினர். இந்தப் போக்கை முற்றிலும் மாற்றி உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் மகாராஷ்டிரா ‘பயங்கரவாத தடுப்புப் பிரிவு’ தலைமை அதிகாரி ஹேமந்த் கார்கரே தான். அவர்தான் இந்த பயங்கரவாத செயல்களுக்குப் பின்னால் பதுங்கி இருந்த இந்த கும்பலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். அதுவரை ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற முகமூடிக் குள் பதுங்கியிருந்த இந்து பயங்கரவாதம் முகத்திரை கிழிக்கப்பட்டு வெளியே வந்தது.

சனாதன் சன்ஸ்தா மற்றும் ஹிந்து ஜன்சக்ருதி சுமிதி (எச்.ஜெ.எஸ்.) என்ற இரண்டு மத பயங்கரவாத அமைப்புகளும், பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து இந்து இராஷ்டிரம் உருவாக்கும் நோக்கத்தோடு 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டவை. இரண்டு அமைப்பு ளையும் தோற்றுவித்தவர் ஒரு மருத்துவர். அவர் மனோவசியம் (hலயீnடிவாநசயயீளைவ) செய்வதையும் தொழிலாக நடத்தி வந்தார்.  அவர் பெயர் அத்வாலே. தொடக்கத்தில் போலி அறிவியல் – ஆன்மீகம் ஆகியவற்றைக் கலவையாக்கிப் பிரச்சாரம் செய்து வந்தார். மும்பை சியோன் பகுதியைச் சார்ந்த இவர், இங்கிலாந்தில் ‘மனோவசியம்’ தொடர்பாக, தனது மனைவியுடன் சேர்ந்து 1971லிருந்து 1978 வரை ஆய்வு செய்தார். பிறகு 1978லிருந்து 90 வரை சியோனில் ‘கிளினிக்’ ஒன்றை தொடங்கினார். இதிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு சனாதன் சன்ஸ்தாவைத் தொடங்கினார். கோவாவைச் சார்ந்த அஷ்போஷ் பிரபு தேசாய் என்ற உளவியல் மருத்துவர் இந்த அமைப்புக்கு மதவெறி கருத்தியலை உருவாக்கித் தந்தார் என்று கூறப்படுகிறது. கோவா, மகாராஷ்டிரா மற்றும் கருநாடக மாநிலங்களில் இந்த பயங்கரவாத ‘அமைப்பு’ இப்போதும் தீவிரமாக  செயல்படுகிறது. தங்களது ஆன்மீக பயங்கரவாத கருத்துகளுக்கு மதவெறியர்களிடம் கிடைத்த ஆதரவினால் உற்சாகமடைந்த அத்வாலே, ‘இந்து இராஷ்டிரம்’ என்ற இலக்கை நோக்கி நகர்த்தினார். தொடக்கக் காலங்களில் அதாவது, 1999இல் இந்த அமைப்பு அதன் உறுப்பினர் களுக்கு தற்காப்பு மற்றும் ஆயுதப் பயிற்சிகளை அளித்தது. சமூகத்தில் மத எதிர்ப்பாளர்களை அழித்தொழிக்க ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும் என்று மூளைச் சலவை செய்தார்கள். முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் இந்து எதிர்ப்பாளர்கள் பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டனர். “5 சதவீதம் பேர் மட்டுமே ஆயுதப் பயிற்சி எடுத்தால் போதும்; இந்து இராஷ்டிரம் அமைக்கப் போராடும்போது, கடவுளே சில நபர்கள் வழியாக ஆயுதங்களைக் கிடைக்கச் செய்து விடுவார்” என்று சீடர் களிடம் கூறி அத்வாலே நம்பிக்கையூட்டினார். ‘துப்பாக்கி சுடுவதற்கு சிறப்புப் பயிற்சி ஏதும் தேவை இல்லை. கடவுள் பெயரைக் கூறிக் கொண்டே குறி வைத்தால் குறி தப்பாது’ என்றும் சீடர்களிடம் கூறினார். தற்காப்புக் கலைகளைக் கற்பிக்க தர்மசேனா என்ற அமைப்பைத் தொடங்கினர். இராணுவ உடை தரித்து, சீடர்கள் தற்காப்புப் பயிற்சி பெறும் புகைப்பட ஆதாரங்கள் வெளி வந்துள்ளன. இந்த அமைப்பு நடத்திய ‘சந்தான் பிரபாத்’ என்ற இதழில் அத்வாலே இராணுவ உடை தரித்துக் கொண்டு சீடர்களிடம் கீழ்க்கண்ட வாறு பேசுகிறார்: “காங்கிரஸ் போன்ற மதச் சார்பற்ற சக்திகளிடம் சிக்கி, இந்தியா துண்டுதுண்டாக சிதறாமல் தடுக்க இந்து இராஷ்டிரம் அமைப்பது தவிர்க்க முடியாதது” என்று அவர் பேசியதாக ‘சந்தான் பிரபாத்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது (2005).

‘பார்ப்பனியம் – வர்ணாஸ்ரம அமைப்பு’ என்பதைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட அமைப்பு இது. இந்துப் பெண்களையும் பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஜாதியினரையும் தனது அமைப்பில் இணைத்துக் கொண்டது. (பார்ப்பனிய சமூகத்தை பார்ப்பனர்களால் மட்டுமே உருவாக்க முடியாது என்பதை புரிந்து வைத்திருந்தார்கள்). இந்த அமைப்பு ஏராளமான நூல்களையும் வெளியிட்டுள்ளது. இந்து ஆண்களும், பெண்களும் உடை மற்றும் நகை அணிய வேண்டிய முறைகளையும், இந்து பண்டிகைகளைக் கொண்டாடும் வழிமுறை களையும், கடவுளை வணங்கும் வழிபாட்டு முறைகளையும் இந்த நூல்கள் விளக்குகின்றன. இந்த அமைப்பு தனக்கான தனிக் கடவுள் உருவத்தை உருவாக்கியுள்ளது. இந்து கடவுளின் படங்கள் முறையாக வடிவமைக்கப்படவில்லை என்பதால் அந்தப் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்த நூல்கள் வலியுறுத்து கின்றன. சன்ஸ்தா உருவாக்கிய கடவுள் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடியவர். ஆன்மிகத்தில் ஊறிப் போனவர்களுக்கு கனவில் இந்தக் கடவுள் தோன்றுவார் என்றும் நம்ப வைத்தனர். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் தங்கள் அமைப்பில் இருப்பதாகக் கூறி சீடர்களை நம்ப வைத்துள்ளனர். முடி உதிர்தல், பாலுறவு பிரச்சினைகள் உள்ளிட்ட எந்தப் பிரச்சனையையும், ‘மனோவசியம்’ மூலம் சரிப்படுத்த முடியும் என்றும், அத்வாலே மலட்டுத் தன்மையை நீக்கி விடுவார், திருநங்கைகளை ஆணாக மாற்றுவார் என்றும் நூல்களில் எழுதி வைத்துள்ளனர். வீடு வீடாகச் சென்று, சூடம், ஊதுவத்திகள் மற்றும் தங்கள் நூல்களை விற்று மிகவும் அமைதியான அமைப்பாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வது வழக்கம்.

ஆன்மிக நிறுவனங்களில் நடப்பது போலவே இந்த அமைப்பின் ஆசிரமங்களிலும் குடும்பத்தை உதறிவிட்டு பெண்கள் அடைக்கலம் புகுந்தனர். குடும்ப உறவுகளைத் துண்டித்துக் கொண்டு ஆஸ்ரமத்துக்கு வந்த பல பெண்கள் கதி என்ன என்பது தெரியாத நிலையில், பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் இணைந்து பம்பாய் உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடர்ந்து இந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

சன்ஸ்தாவின் இணை அமைப்பான ‘ஹிந்து ஜன் சுக்ருதி சமிதி 2011ஆம் ஆண்டு ‘லவ்ஜிகாத்’ என்ற நூலை வெளி யிட்டது. இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள் என்றும் ஒவ்வொரு பிரிவினரையும் திருமணம் செய்ய எவ்வளவு பணம் தரப்படுகிது என்றும் அந்த நூலில் ‘கட்டண விவரங்கள்’ என்று பட்டியல் போட்டுள்ளனர்.

இந்து இராஷ்டிரம் அடைவதற்கு இராணுவமும் காவல்துறையும் முட்டுக் கட்டைப் போட்டு வருகின்றன. இராணுவத்தை யும் காவல்துறையையும் தோற்கடிக்க வேண்டும் என்று ‘சந்தான் பிரபாத்’ இதழ் (ஜூன் 9, 2013) வெளிப்படையாகவே அறிவித்தது.

“காவல்துறை எப்போதும் இந்துக்களிடம் பகைமை காட்டுகிறது; இஸ்லாமியர்கள் குற்றங்களை மன்னிக்கிறது. இந்துக்களுக்கு எதிராக காவல்துறை நடத்தும் வன்முறைகளை மறந்து விடாதீர்கள். இப்போதிருந்தே அத்தகைய போலீசாரின் பட்டியலை தயாரியுங்கள். நாம் நடத்தப் போகும் புரட்சியில் முதல் நடவடிக்கை போலீ சாருக்கு எதிராகவே இருக்க வேண்டும். போலீசையும் இராணுவத்தையும் வீழ்த்தாமல் நாம் இந்துஇராஷ்டிரத்தை அமைக்க முடியாது”

என்று அந்த இதழ் அச்சிலேயே பிரகடனப் படுத்தியது. 4 இலட்சம் இந்துக்களைக் கொண்ட படை ஒன்றை உருவாக்க வேண்டும்; அவர்களுக்கு இராணுவப் பயிற்சி தர வேண்டும்; 30 இலட்சம் போலீஸ், இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையோடு போரிட்டு வீழ்த்த முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம் என்றும் அதே ஏடு அறிவித்தது.

ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக இந்து இராஷ்டிரம் நோக்கி செயல்படவில்லை என்ற விரக்தியில்தான் ‘சனாதன் சன்ஸ்தா’ உருவானது. இந்த அமைப்பு தேர்தல், அரசியல் சட்டம், ஜனநாயகம் ஆகிய அமைப்புகளை வெளிப்படையாக எதிர்க்கிறது. ஆர்.எஸ்.எஸ். இந்த அரசியலை எதிர்க்காமல் அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் அணுகுமுறையை இந்த அமைப்பு கடுமையாக விமர்சிக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் ‘இந்து இராஷ்டிராவின்’ எதிரிகள் என்று இந்த அமைப்பு ஏற்கனவே அறிவித்திருக்கிறது (சந்தான் பிரபா இதழ்-2013). ஆர்.எஸ்.எஸ்சை இந்த அமைப்பின் தலைவர் அத்வாலே வெளிப்படையாகவே குற்றம்சாட்டி இவ்வாறு எழுதினார்.

“ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 40 இலட்சம் தொண்டர்கள் இருந்தும் கடந்த 68 ஆண்டுகளாக அவர்கள் ஆன்மிகப் பயிற்சிகளை தரவில்லை. அனைத்துத் துறைகளிலும் வேகம் காட்டாமல் செயல்பட்டு வருகிறது. அதற்கு மாறாக அடுத்த அய்ந்து ஆண்டுகளில் 4 இலட்சம் ஆன்மிகப் போராளிகள் நமது அமைப்புக்குக் கிடைத்து விடுவார்கள். அவர்கள் ஆன்மிகத்தைக் கையில் எடுத்து இந்து இராஷ்டிராவுக்கான புரட்சியைத் தொடங்கு வார்கள். 2023இல் நாம் இந்து இராஷ்டிரத்தை அமைத்து விடுவோம்” என்று சந்தன் பிரபா இதழில் அத்வாலே எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் சந்தன் சன்ஸ்தா வுக்கும் ஒரே இலக்கு ‘இந்துஇராஷ்டிரம்’ அமைப்பதுதான். ஆனாலும் இவர்களுக் கிடையே உள்ள மோதல்களின் பின்னணியில் பார்ப்பன உயர்ஜாதிக் கூறு அடங்கி இருக்கிறது.

‘சித்பவன்’ பார்ப்பனர்களுக்கும் கர்கடே (முயசாயனந) பார்ப்பனர்களுககும் இடையே யார் உயர்ந்த ஜாதி பார்ப்பனர் என்ற போட்டிதான் இந்த மோதலின் பின்னணி என்று கூறப்படு கிறது. சாவர்க்கரின் இந்து மகாசபை முன்னிறுத்திய ‘இந்துத்துவா’வுக்கும் ஆர்.எஸ்.எஸ். சித்பவன் பார்ப்பனர்கள் முன்னிறுத்திய இந்துத்துவாவுக்கும் இடையே நடந்த மாறுபாடுகளின் தொடர்ச்சிதான் இந்த மோதலும். சாவர்க்கர் பேசிய இந்துத்துவாவை ‘சனாதன சன்ஸ்தா’ ஆதரிக்கிறது. உண்மையில் சன்ஸ்தாவின் அடிப்படை இலட்சியம் வர்ணாஸ்ரம பார்ப்பனிய இராஜ்யம்தான் என்றாலும் அதை நேரடியாகக் கூறாமல் பிற இடைநிலை ஜாதியினர், பெண்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கத்தோடு இந்து கோயில்களில் நடக்கும் ஊழல்களை எதிர்க்க வேண்டும் என்ற முழக்கத்தை ‘முகமூடியாக’ முன் வைக்கிறது. இந்த தந்திரமான பிரச்சாரத் தினால் ‘இந்து’ உணர்வுள்ள வெகுமக்களை இடைநிலை ஜாதியினரை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க. கொலைக் குற்றச்சாட் டுகளின் கீழ் இந்து பயங்கர வாதிகளை கைது செய்ததை ‘சன்ஸ்தா’ கண்டித்தாலும் தங்களுக்கு பாதுகாப்பாக பா.ஜ.க. ஆட்சி இருக்கும் என்று உறுதியாக நம்புகிறது.

மற்றொரு கருத்தையும் குறிப்பிட வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.சும் சனாதன் சன்ஸ்தா அமைப்பும் மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியில் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதி கருநாடகாவின் பெல்காம் வரை நீளுகிறது. கடந்த 15 ஆண்டுகளாகத்தான் இந்தப் பகுதியில் இந்து பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக காலூன்றி வருகின்றன. இந்தப் பகுதி பால் உற்பத்தி, கரும்பு விவசாயம் நிறைந்த பகுதியாகும். கூட்டுறவு சங்கங்கள் வலிமையாக இயங்கி வருகின்றன. அதன் காரணமாக ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கும் செல்வாக்கு உள்ள பகுதி. வரலாற்றில் ஜாதி எதிர்ப்பு, சமூகப் புரட்சி இயக்கங்கள் இந்தப் பகுதியில்தான் தோன்றின. எனவே ஆர்.எஸ்.எஸ். இந்தப் பகுதிகளில் ஊடுறுவ முடியாத நிலையில் அதன் காரணமாக விரக்தி அடைந்த இந்து தீவிரவாதிகள், ‘சன்ஸ்தா’வை இப்பகுதியில் பரப்பும் முயற்சிகளில் இறங்கினர்.

மேற்கு மகாராஷ்டிராவில் காலூன்ற முடியாத நிலையிலிருந்த ஆர்.எஸ்.எஸ். இப்போது சன்ஸ்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்படுவதற்கு உதவுகிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸோடு நெருங்கிய தொடர்புடைய சாம்பாஜிபிடே என்பவர், 1984இல் மேற்கு மகாராஷ்டிராவில் ‘ஷிவ் பிரதிஸ்தான் இந்துஸ்தான்’ என்ற அமைப்பைத் தொடங்கி இளைஞர்களை குறிப்பாக மராத்தியர்களை ‘இந்துத்துவா’ நோக்கி அணி திரட்டி வருகிறார். சிவாஜி மகாராஜ் குறித்த புனைவு வரலாறுகளைப் பேசி இஸ்லாமிய வெறுப்புகளை விதைத்து வருகிறார். பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆதரவு பாராட்டுகளுடன் அவர் வளர்ந்து வருகிறார். ‘சங்லி’ என்னும் இடத்தில் நடந்த மதக்கலவரம்; கடந்த ஜனவரியில் பீமா கொரேகான் பகுதியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட ஜாதிவெறித் தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டியது இவர்தான் என்று கூறப்படுகிறது. புனேயைச் சார்ந்த மிலின்ட் எக்போத்தே (ஆடைiனே நுமbடிவந) என்ற இந்து தீவிரவாதி ‘சம்ஸ்தா இந்து அகாதி’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கோரேகான் கலவரத்தில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு என்று குற்றம்சாட்டப்படுகிறது. இவர் மீது 23 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ‘இந்துஇராஷ்டிர சேனா’ என்ற அமைப்பை தனஞ்செய் தேசாய் என்பவர் தொடங்கி புனே அதன் சுற்றுப் பகுதியில் இளைஞர்களை திரட்டி வருகிறார். 2014இல் புனேயைச் சார்ந்த மொஷின்ஷேக் என்ற முஸ்லிம் பொறியியல் பட்டதாரியைக் கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி கூலிப் படைகளைக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரம், வன்முறை, கொலைகளில் ஈடுபட்டு வருபவர் ‘சனாதன் சன்ஸ்தா’ – மேற்கு மகாராஷ்டிராவை குறி வைத்து செயல்படுவதோடு, மேற்கு மகாராஷ்டிராவுக்காக அதன் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சந்தான் பிரபாத்’துக்கு தனிப் பதிப்பையும் வெளியிட்டு வருகிறது. இஸ்லாமிய, கிறிஸ்துவ வெறுப்பை கட்டமைக்கும் வரலாற்றுப் புரட்டுகளை பரப்பி வருவதோடு ‘இந்துராஷ்டிரம்’ அமைக்க மராத்தா மற்றும் தலித் இளைஞர்களை குறி வைத்து அணி திரட்டி வருகிறது.

காவல்துறை, இராணுவம், ஜனநாயகம், தேர்தல் போன்ற அரசு  அமைப்புகளை வெளிப்படையாக எதிர்த்துக் கொண்டு – தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோரை சுட்டுக் கொலை செய்த குற்றச் சாட்டுக்குள்ளான ஒரு  அமைப்பை மோடி ஆட்சி தடை செய்ய மறுத்து வருகிறது. தடை செய்ய போதுமான சான்றுகள் இல்லை என்கிறது. இந்தக் கொலைகளைத் தவிர வேறு என்ன சான்றுகள் வேண்டும் என்று நடுவண் அரசு எதிர்பார்க்கிறது?

(‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ அக். 13, 2018 இதழில் சங்கமித்ரா பிரபால் எழுதிய கட்டுரை; தமிழில் ‘இரா’)

கட்டுரைகளுக்கு ஆதாரங்கள் சன்ஸ்தா வெளியிட்ட நூல்கள் – இதழ்களிலிருந்து  எடுக்கப்பட்டுள்ளன.

நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்

You may also like...