தியாகி இம்மானுவேல் பேரவைச் செயலாளர் சந்திரபோசு இல்ல ஜாதி மறுப்பு மண விழாக்கள்

21-4-2018 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடி, லேனா மகாலில், தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திர போசு-சரசுவதி இணையரின் மகன் களான ச.ச.அனீசு குமார், அம்பேத்ராஜ் ஆகியோருக்கு, ஜாதி, சடங்கு, தாலி மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிட, ஆணவக் கொலையில் தனது இணையர் சங்கரைப் பறிகொடுத்த உடுமலை கவுசல்யா மாலைகளை எடுத்துக் கொடுக்க நடந்தேறியது. விழாவின் சிறப்பாக – திருமண முறை, பெண்ணுரிமை, ஜாதியொழிப்பு குறித்த கட்டுரைகள் அடங்கிய  ‘தமிழ்த்தேசிய விடுதலைக்கான வாழ்வியல் பண்பாடு’ எனும் நூல் வெளியிடப்பட்டது.

தமிழ்த் தேசிய முன்னணி பொழிலன், தமிழ்த்தேச விடுதலை முன்னணி மீ.த.பாண்டியன், கிருஷ்ணஜோதி ஆகியோர்  இணையேற்பு விழா விளக்கவுரையாற்றினர். விழாவினை தியாகி இமானுவேல் பேரவையின் இளைஞரணிச் செயலாளர் புலி.பாண்டியன் தொகுத்து வழங்கினார்.  பல்வேறு அரசியல், சமூக, தமிழ்த் தேசிய அமைப்பினர்  மிகப்பெருமளவில் கலந்து சிறப்பித்தனர். பட்டியலினத்தின் மூன்று பெரும் உட்பிரிவுகளுக்குள் நடந்தேறிய இவ்விணையேற்பு அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டும் சிறப்புடையது என பலரும் போற்றி மகிழ்ந்தனர். மண விழா மகிழ்வாக கழக வார ஏட்டிற்கு ரூ.2000 வழங்கினர்.

பெரியார் முழக்கம் 03052018 இதழ்

You may also like...