நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம்

தமிழர்  வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பாக   10.4.2018  அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத  மத்திய அரசைக் கண்டித்து  நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மே-17 இயக்கம், காஞ்சி மக்கள் மன்றம், மக்கள் அதிகாரம், த.மு.மு.க, தமிழ்தேசியப் பேரியக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, விவசாய சங்கங்கள் உள்ளிட்ட  கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பாக 50ஆயிரத்திற்கும் மேலான வர்கள் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பாக புதுச் சேரியில் இருந்து லோகு. அய்யப்பன் தலைமையில் 100-க்கும் மேலான தோழர்களும், பெரியார் சிந்தனை மய்யம் சார்பில் தீனாவும் தோழர்களும் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தோழர்கள் ந.வெற்றிவேல், க.இராமர், க.மதியழகன் உட்பட 30-க்கும் மேலான தோழர்களும் ஆத்தூரி லிருந்து  மகேந்திரன், இராமு  உட்பட பல்வேறு பகுதிகளில்  இருந்தும் 300-க்கும் மேலான தோழர்கள்  கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றிய போது,  “இந்த முற்றுகைப் போராட்டமானது  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான போராட்டம் மட்டும் அல்ல  தமிழகத்தில்  மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள  நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட்  உள்ளிட்ட  நச்சுத் திட்டங்கள் மற்றும் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக வந்த இரதயாத்திரை  உள்ளிட்ட அனைத்து  இடர்ப்பாடுகளுக்கும் எதிரான  தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டமாகும்.  மேலும்  தமிழகத்தில்  தற்போது நிலவுகின்ற பிரச்சினை களுக்கு மத்திய மாநில அரசுகள்  நிரந்தர  தீர்வு ஏற்படுத்தாவிட்டால்  இப்படிப்பட்ட முற்றுகைப் போராட்டங்களுக்கு மாறாக  காத்திருப்பு போராட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டமாக  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பாக முன்னேடுப்போம்” என்று பேசினார்.

பெரியார் முழக்கம் 19042018 இதழ்

You may also like...