வாசகர் கடிதம்

‘நிமிர்வோம்’ மாத இதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வரலாற்றுச் செய்திகளையும் தற்கால அரசியல் பொருளியல் பிரச்சினைகளையும் பெரியார் பார்வையில் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக நவம்பர் மாத இதழில் வந்த கட்டுரைகள். காந்தி ஜாதியை ஆதரித்தாரா? எதிர்த்தாரா? என்ற கட்டுரை காந்தி பற்றிய புதிய புரிதலைத் தந்தது. காஞ்சா அய்லய்யா பேட்டியில் ‘சமூகக் கடத்தல்’ குறித்து விரிவாக விளக்கியிருந்தார். அந்த சொற்றொடரே சிந்தனையைக் கிளறிவிட்டது. குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஆண் ஆண்மையற்றவன், பெண் மலடியானவள் சொத்துக்கு வாரிசு இல்லாமல் போய்விடும் வயதானால் பார்த்துக்கொள்ள ஆள் இருக்கமாட்டார்கள் என்பதையெல்லாம் அடித்து நொறுக்கி  குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்து வாழும் தம்பதிகள் குறித்து வெளிவந்த கட்டுரை மிகவும் சிறப்பு. 1957 நவம்பர் 26 சாதியை ஒழிக்க சட்டத்தை எரித்து சிறை சென்ற கருஞ்சட்டைத்  தோழர்களின் தியாகத்தை வாசிக்கும் போது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. களப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்தது. ஜனவரி மாத இதழ் கார்ப்பரேட் சாமியார்கள் முகத்திரையையும் ஆன்மிக அரசியல் பேசும் ரஜினி முகத்திரையையும் சேர்த்தே கிழித்துவிட்டது. ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ பொம்மலாட்ட விமர்சனத்தில் அண்ணாவின் கருத்தைப் படித்தபோது அந்தக் கருத்துகள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும் என்ற உணர்வே எழுந்தது.

முழுவதையும் போட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. நிமிர்வோம் சிறப்பாகவும் தொடர்ச்சியாகவும் வெளிவர என் வாழ்த்துகள்.

பெரியார் யுவராஜ், மயிலாப்பூர், சென்னை.

 

நிமிர்வோம் பிப் 2018 இதழ்

You may also like...