தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் தொழிலாளர் மத்தியில் ஓட்டுப் பிரசாரம் – சித்திரபுத்திரன்
சென்னை எம்.எஸ்.எம். ரயில்வே தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான் எம். கே. ஆச்சாரியார் அருமையான மாயப்பிரசங்கம் ஒன்று செய்தார். அப்பொழுது அவர் சொல்லியுள்ளவைகளில் முக்கியமானது இரண்டு விஷயம். அதாவது, “உங்களுக்கு அரசாங்க சட்டசபைகளில் பிரதிநிதித்து வம் கிடையாது. அது கிடைக்கிற வரையில் எங்களை அங்கீகரிக்க வேண் டும்” என்று பேசியிருக்கிறார். ஸ்ரீமான் எம். கே. ஆச்சாரியார் ஒரு பிராமணர், அதோடு அளவுக்கு மிஞ்சிய வருணாசிரம தர்மி. ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை ஒருவேளை பார்த்து விட்டால் ஒரு மாதத்திற்கு உண்ணாவிரதமிருப்பேன் என்று சொன்னவர்.
அல்லாமலும், பிராமணன் அயோக்கியனாயிருந்தாலும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் கூலிக்காரனாயிருந்தாலும், குஷ்டரோகியாயிருந் தாலும் அவன் பிறவியிலேயே உயர்ந்தவன். மற்றவன் சூத்திரன் ஒரு யோக்கியனானாலும் சுயமரியாதை உள்ளவனானாலும் அவன் தாசி மகன்; அடிமை; அவன் பிறவியிலேயே பிராமணனுக்கு வேலை செய்யப் பிறந்த வன் என்று சொல்லும் வருணாசிரம சபைக்குத் தலைவர் .
இவர் 100- க்கு 99 பேர் பிராமணரல்லாதாராயுள்ள தொழிலாளர் களுக்கு எப்படித் தலைவராவார்; உபதேசம் செய்ய யோக்கியதை உடைய வராவார் என்பது நமக்கு விளங்கவில்லை. அல்லாமலும் இவரை எப்படி பேசச் சொல்லி “7,000” தொழிலாளர்களும் உட்கார்ந்து கேட்டார்களோ தெரியவில்லை. ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் செல்வச் செருக்கும் செல் வாக்குப் பெருக்கும் தேசத்தில் எவ்வளவு வேலை செய்கிறது. ஸ்ரீமான் அய்யங்கார் பணமே 7000 பேரை உட்கார்ந்து கேட்கும்படி செய்கிறது. ஸ்ரீமான் அய்யங்கார் பணமே ஒருவரை உபதேசம் செய்யச் செய்கிறது.
தொழிலாளர்களுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லையென்று மாயக் கண்ணீர் விடும் ஸ்ரீமான் எம். கே. ஆச்சாரியார் சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் ஏன் ஒரு தொழிலாளியை சட்டசபைக்கு அனுப்பக் கூடாது? “சுய ராஜ்யக் கட்சிக்கு தேசத்தில் செல்வாக்கு இருக்கிறது; கட்டுப்பாடு இருக்கிறது; ஒத்துழையாமை நாற்றமடிக்கிறது. அது வொன்றே தற்கால அரசியல் கட்சிகளில் முதன்மையானது” என்று தொண்டை கிழியக் கத்தி ஓட்டு வாங்கித் தருகிறவரும் இதற்கு முன் பல தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சி யாருக்குத் தொழிலாளர்களின் ஓட்டுகளை வாங்கிக் கொடுத்தவருமான ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களும் இருக்கிறார்கள். இந்தியா சட்டசபைக்கு சென்னை மாகாணத்தின் சார்பாய் 10 ஸ்தானங்களுக்கு மேலாக இருக்கிறது. அவைகளுக்கு பிராமணரல்லாதார்களில் ஆள்கள் கிடைக்கவில்லை என்று வெறும் அய்யங்கார்களாக நிற்கிறார்களே; ஏன் ஒரு தொழிலாளிக்கு விட்டுக் கொடுத்து ஒரு அய்யங்கார் விலகிக் கொள்ளக் கூடாது? தொழிலாளர்களுக்கு ‘கடவுள்’ போல இருக்கும் ஸ்ரீமான் சீனிவாசய் யங்காரே தான் நிற்கும் ஸ்தானத்தை தொழிலாளர்களுக்குக் கொடுக்கட்டுமே. இல்லாவிட்டாலும் “தொழிலாளர்களே உஷார், உஷார் ! ஏமாறாதீர்கள்! ஜஸ்டிஸ் கட்சியாருடன் சேராதீர்கள்! முதலாளிகளுக்குக் காட்டிக் கொடுத்து விடுவார்கள்! பழய சங்கத்தை ஆதரியுங்கள் ! வஞ்சகர் வார்த்தையைக் கேளாதீர்கள்!” என்று சதா சர்வகாலமும் அசரீரி பொழிகின்ற ‘சுதேசமித் திரன்’ பத்திராதிபரும் தொழிலாளர்களுக்கு “கிருஷ்ண பகவான்” போன்றவ ருமான ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் தஞ்சை திருச்சி ஜில்லாவில் தான் நிற்கப் போவதிலிருந்து விலகிக் கொண்டு ஏன் தொழிலாளருக்காக தனது ஸ்தானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது? இவர்களில் ஒருவரும் ஒப்ப வில்லையானால் உபதேசியரான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாரே தான் விலகிக்கொண்டு தனது ஸ்தானத்தை ஏன் தொழிலாளருக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது? ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு சொத்திருக்கிறது, மாதம் 10,000 ரூபாய் வரும்படி வருகிறது. ஏ. ரெங்கசாமி ஐயங்காருக்கு மாதம் 1000 ரூபாய் சம்பளம் வருகிறது; அவர் மகனுக்கு சர்க்கார் உத்தியோகத்தில் மாதம் 500 ரூ. சம்பளம் வருகிறது; அவர் தம்பிக்கு சர்க்கார் உத்தியோகத்தில் மாதம் 1500 ரூபாய் சம்பளம் வருகிறது. எம்.கே. ஆச்சாரியாருக்கு சொத்து இல்லா விட்டாலும் இந்த மூன்று வருஷம் வாங்கின இந்தியா சட்டசபைப் பிரயாணப் படிச் செலவு இன்னும் 5,6 வருஷத்திற்குப்போதுமானதாய் இருக்கிறது. இப்படி இருக்க, இவர்களுக்கு ஏன் இத்தனை ஆசை. ஏழைத் தொழிலாளர் தினம் 8 அணா, 10 அணா, 1 ரூபாய் சம்பாதிக்கும் கஷ்ட ஜீவனக்காரர்கள்; அதிலும் பிராமணரல்லாதார்கள் ஏன் ஒருவர் இந்தியா சட்டசபைக்குப் போய் பதவியும் பணமும் தங்கள் கஞ்சிக்கில்லாத பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகமும் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது? இந்த அய்யங்கார்களுக்கே இந்தியா சட்ட சபை கோயில் மானியமா? இவற்றை மறந்துவிட்டு தொழிலாளர் கூட்டத்தில் “உங்களுக்குப் பிரதிநிதித்துவம் சர்க்காரார் வாங்கிக் கொடுக்கவில்லை, ஜஸ்டிஸ்காரர் உதவி செய்யவில்லை, ஆதலால் எங்களுக்கு ஓட்டுக் கொடுங் கள்” என்றால் என்ன அருத்தம்? இப்பொழுது இருக்கும் தொகுதியில் தொழிலாளர் சட்டசபைக்குப் போனால் கதவு மூடிக்கொள்ளுமா? சட்டசபை மண்டபம் இடிந்து இவர்கள் தலையில் விழுந்து விடுமா? எவ்வளவு நெஞ்சு தைரியமாய்த் தொழிலாளர் மத்தியில் ஓட்டுப் பிரசாரம் செய்ய இந்த அய்யங்கார்களுக்கு தைரியம் வந்து விட்டது. “`தட்டிப்பேச ஆளில்லா விட் டால், தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஏழைத் தொழிலாளர் கள் அப்பாவிகள்; அவர்களும் கொஞ்சம் வாய் படைத்தவர் புத்தியை அய்யங் கார் பணம் என்னும் கிரகணம் தீண்டிவிட்டது; இவர்கள் அடித்த மூப்புத் தான் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். இந்த லக்ஷணத்தில் ஸ்ரீமதி அலமேலு மங்கைத் தாயாரம்மாள் ஏதோ ஒரு தொழிலாளர் கூட்டத்தில் ராஜீயவாதிகளைத் “திருட்டுப் பசங்கள்” என்று நினைத்து ராஜீயவாதிகளுடன் சம்மந்தப்படாதீர்கள் என்று சொன்னதற்கு “சுதேசமித்திர” னாகிய ஐயங்கார் பிள்ளைக்கு மூக்கு மேல் கோபம் வந்து விட்டதே ஒழிய தங்கள் பித்த லாட்டங்களுக்குக் கொஞ்சமும் வெட்கப்படவேயில்லை. இருந்தால்தானே வரும். ஸ்ரீமதி தாயாரம்மாள் மாத்திரம் இப்படிச் சொல்லவில்லை. அநேக பெரியோர்களும் அனுபவசாலிகளும் உண்மைத் தேசபக்தர்களும் கதறிக் கொண்டுதான் வருகிறார்கள். அய்யங்கார் பணம் இதைக் கவனிக்கச் செய்வ தில்லை. நமது தொழிலாளர்களுக்கு இந்த பிராமண அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை அறிய யோக்கியதை வரும் வரை நமது தொழிலாளர்களுக்கு விடுதலையில்லை என்று காய்ந்த எண்ணெய்க் குடத்தில் கூட கையை விடுவோம்.
குடி அரசு – கட்டுரை – 16.05.1926