வாசகர்களிடமிருந்து

டி எம் நாயரின் அற்புதமான பேச்சு

நீதிக்கட்சியை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான டாக்டர் டி எம் நாயர், 1917ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் நிகழ்த்திய உரை வரிக்கு வரி அர்த்தம் பொதிந்தது. எல்லாரும் மதிக்கும் என்னை கேரள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பான், “ஏடா, நாயர்’ என்று கேவலமாகவே அழைப்பார்கள் என்ற வரிகளைப் படித்தபோது கண்ணீர் வந்தது. நீதிக்கட்சி தலைவர்களிலேயே நாயர் ஒரு பகுத்தறிவாளராக இருந்திருக்கிறார். நான் படித்த ஒரு வரலாற்றுச் செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1904ஆம் ஆண்டு நாயர் சென்னை நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “சென்னை பார்த்தசாரதி கோயில் குளத்துக்கு வரி இல்லாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று தீர்மானத்தை நீதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவராக பிறகு உருவாகிய சர். பிட்டி தியாகராயர் கொண்டு வந்தபோது நாயர் அதை எதிர்த்தார். “கோயில் வருமானத்திலிருந்து வரி செலுத்தித் தண்ணீர் பெறுவதுதான் முறை; இல்லை என்றால் மற்ற கோயில் குளத்திற்கும் வரி இல்லாமல் தண்ணீர் விட நேரிடும்” என்றார் நாயர். கொதிப்படைந்த திருவல்லிக்கேணி பார்ப்பனர்கள் நாயரை பதவி விலகுமாறு பேசியும் எழுதியும் மிரட்டினார். நாயர் தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறி உறுப்பினர் பதவியை தூக்கி எறிந்தார். நீதிக்கட்சி, திராவிர் இயக்க முன்னோடிகளின் வரலாறுகளை ‘நிமிர்வோம்’ பதிவு செய்து, இளைய தலைமுறைக்கு வரலாறுகளை அறிமுகப்படுத்தலாமே!

-க. நடராசன், திட்டக்குடி ‘பராசக்தி’ ஆய்வு

 

பராசக்தி ஆய்வு

திரைப்படம் என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தை சமுதாய மாற்றத்துக்கு ‘திராவிட இயக்கம்’ பயன்படுத்தியதையும் அதற்கு பார்ப்பனர்கள் எதிர்ப்புகள் எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதையும் ‘கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல் ‘ ஆய்வுக் கட்டுரையைப் படித்தபோது உணர முடிந்தது. கலைஞரின் ‘பராசக்தி’ வசனங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கின. “அம்பாள் என்றைக்கடா பேசினாள்?” என்ற அந்தஒரு வரி இப்போதும் மேடைகளில் பேசப்பட்டுவருகிறது.‘பராசக்தி’யின்கதையைஎழுதியபாவலர் பாலசுந்தரம், தீவிரமான பெரியார் தொண்டர். திராவிடர் கழகத்தின் மேடைப் பேச்சாளர். மிகச் சிறந்த கவிஞர்.

சங்குகள் நிறமும் மாறிச்

சந்தனம் மணமும் மாறி

செங்கதிர் திசையும் மாறி

தெங்குநீர் குளிரும் மாறி

திங்கள்தன் நிலையும் மாறி

தெவிட்டமுது இனிப்பும் மாறி

சங்கமும் மாறினாலும்

தந்தை சொல் வாழும் நாளும்.

-என்று தந்தை பெரியார் பற்றி அவர் வடித்த கவிதை வரலாற்று வரிகளாகும். இவரது துணைவியார் பட்டம்மாள் குழந்தை ஆலங்காட்டானுடன் 1938இல் இந்தி எதிர்ப்புப் போரில் இரண்டு முறை மறியலில் ஈடுபட்டு கைதானவர்.

இலட்சியத்துக்காக வாழ்ந்து மறைந்த சுயமரியாதை சுடரொளி பாவலர் பாலசுந்தரம் அவர்களின் கதை தான் ‘பராசக்தி’ என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

 

தமிழ்நாட்டுக்கு தனி அரசியல் சட்டம் வேண்டும்

நாகாலாந்து காட்டும் வழியில் தமிழ்நாட்டுக்கு தனி அரசியல் சட்டம் வேண்டும் என்ற தலையங்கம் பாராட்டி வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டின் தனித்தன்மை ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. ‘நீட்’, ‘ஜி.எஸ்.டி.’, இந்தித் திணிப்பு, உணவு உரிமையில் குறுக்கீடு, சமஸ்கிருதத் திணிப்பு என்று ஒவ்வொன்றாக தமிழ்நாட்டின் மீது மத்திய அரசால் திணிக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டுக்கு தனிக் கொடி, தமிழ்நாட்டுக்கு தனி சட்டம், தமிழ்நாட்டுக்கென தலையீடு இல்லாத கல்விக் கொள்கை என்று ஒவ்வொன்றாக கொண்டு வர வேண்டும். மாநில சுயாட்சியை ஆதரித்து ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் தமிழக சட்டப் பேரவை தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அத்தீர்மானத்தை முன் வைத்து மத்திய அரசின் தலையீட்டை விலக்கிக் கொள்ளும் போராட்டங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட வேண்டியது அவசியம், சரியான நேரத்தில் வந்துள்ளது, இத்தலையங்கம்.

-ச. பூவண்ணன், தண்டையார்பேட்டை

நிமிர்வோம்

நிமிர்வோம் நிமிர்வோம் நிமிர்வோம்

தடைகள் தகர்த்து தலைநிமிர்வோம்

வேதபுராணங்கள் பொய்புரட்டு இதிகாசங்கள்

ஓதிஓதி மடமை வளர்க்கும்

நச்சுபார்ப்பன பார்த்தினிய செடி அகற்ற

நிமிர்வோம் நிமிர்வோம் தலைநிமிர்வோம்

மாட்டையாட்டை சுட்டுத் தின்றவன்

சோமம் குடித்து ஆடிக் களித்தவன்

மாட்டிறைச்சி அரசியல் அம்பலப்படுத்த

நிமிர்வோம் நிமிர்வோம் தலைநிமிர்வோம்

சாதிசமய சாத்திரம் காட்டி நம்

சரித்திரம் சாய்த்த சனாதனிகளின்

சிண்டைபிடித்து செவிட்டில் அறைந்திட

நிமிர்வோம் நிமிர்வோம் தலைநிமிர்வோம்

திராவிடத்தமிழர் தாழாமல் பிறர் தாழ் வீழாமல்

தன்மான உணர்வுபெற தளராதுழைத்த

பெரியார் வழியில் நாம்நடந்து

நிமிர்வோம் நிமிர்வோம் தலைநிமிர்வோம்

 

-சி. தித்திப்பு, தூத்துக்குடி

 

 

காவிரியும், பாலாறும்

பாட்டிலுக்குள்!

காவு வாங்கியது கார்ப்பரேட்டு

காணாமல் போனது

தண்ணீர் மட்டும் அல்ல

 

ஆறுகளும்தான்!

-மணக்காடு செயச்சந்திரன்

 

நிமிர்வோம் ஆகஸ்ட் 2017 இதழ்

You may also like...