குடி நிறுத்தும் யோக்கியர்கள்
ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் குடி நிறுத்தும் பேரால் தன் இனத் தாராகிய ஸ்ரீமான் சி.வி. வெங்கடரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க பிரசாரம் செய்த காலத்தில் ஸ்ரீமான் அய்யங்காரவர்கள் குடியை அடியோடு உடனே நிறுத்திவிடப் போகிறாரென்றும், அவருக்கு ஓட்டுக் கொடுங்களென்றும் அவர் மரத்தில் முட்டி தொங்கினதைப் பார்த்த பிறகு கூட கிராமம் கிராமமாய்த் திரிந்து பிரசாரம் செய்ததும் இதற்காக மகாத்மா காந்தியின் சிபார்சு கூட வாங்கினதும் வாசகர்கள் இதற்குள் மறந்திருக்க முடியாது. ஆனால் இப்பொழுது ஸ்ரீமான் வெங்கடரமணய்யங்கார் சட்ட சபையில் என்ன செய்கிறார் என்று பாருங்கள். குடியை உடனே ஒழித்து விடுகிறேன் என்றவர் 10 வருஷத்தில் ஒழிய வேண்டும் என்று விரும்புவதாக வும், அதற்குத் தகுந்தபடி மந்திரிகள் வேலை செய்தால் போதுமென்றும், ஆனால் இதற்காக வேண்டி இப்போதிருக்கும் மந்திரியைத் தோற்கடிக்கவோ கலைக்கவோ விடமாட்டோமென்றும் பேசியிருக்கிறார். ஸ்ரீமான் ராஜகோபா லாச்சாரியார் ஓட்டு வாங்கிக்கொடுத்த பார்ப்பன கனவானின் யோக்கியதை யும் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியால் ஏமாற்றப்பட்ட மகாத்மா காந்தியின் சிபார்சு பெற்ற பார்ப்பன கனவானின் யோக்கியதையும் இப்படி இருக்கு மானால் மற்றபடி ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்கள் பணத்தாலும் பிரசாரத்தாலும் ஓட்டுப் பெற்ற கனவான்களின் யோக்கியதையை நாம் சொல்ல வேண்டுமா? இதை அறிந்த பிறகாவது இவர்களுக்கு சிபார்சு செய்த பார்ப்பனர்கள் ஏதாவது பேசுகிறார்களா? அல்லது இவர்களை திருத்தவாவது முயலுகிறார்களா? ஒன்றுமில்லாமல் “சந்தடி சாக்கில் கந்த பொடி கால் பணம்” என்பது போல் ஒன்றும் தெரியாத சாது வேஷம் போட்டுக்கொண்டு “காந்தி வருகிறார் பணம் கொடு, காந்தி வருகிறார் பணம் கொடு” என்று அலைவதைத் தவிர வேறு என்ன? ஆகவே இந்த பார்ப்பனர்களின் தேசப்பக்தி முட்டுக் கட்டை, குடி ஒழித்தல், பாவாயி கருப்பாயி சம்பாஷணை, கோடு கட்டிய குறள் ஆகியதுகள் எல்லாம் சுயமரியாதையும், சுதந்திர உணர்ச்சியுமுள்ள பார்ப்பனரல்லாதாரை ஒழித்து தாங்கள் ஆதிக்கம் பெறுவதும் முடியாவிட்டால் தங்களது அடிமைகளான சுயமரியாதையும், சுதந்திர புத்தியும் அற்ற அசடுகளைக்கொண்டு பந்து வைத்து தங்கள் காரியங்களையும் சாதித்துக்கொள்ள முயற்சிப்பதுமல்லாமல் வேறு என்ன என்பதை பார்ப்பனர்களில் சில பார்ப்பனர்களாவது யோக்கியர் கள் இருப்பார்கள் என்று நினைக்கும் பிரபுக்கள் உணர்வார்களாக.
குடி அரசு – கட்டுரை – 20.03.1927