திரு. ஆர்.கே.ஷண்முகஞ் செட்டியார்
அஷ்டதிக்குப் பாலகர்களான ஐயங்கார் கோஷ்டியார் சமீபத்தில் தமிழ் நாடெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்து வரும்போது திரு. ஆர்.கே. ஷண்முகஞ் செட்டியாரவர்களை பல கேள்விகளால் தூத்துக்குடியிலும், திருச்சியிலும் வளைத்துக் கொண்டார்கள். அக்கேள்விகளுள் முக்கியமான இரண்டிற்கு உண்மையிலே தன்னுள்ளத்திலே உறையும் அபிப்பிராயத்தை வெளிப் படையாய்க் கூறிவிட்டார். அவை வகுப்புவாரிப் பிரதிநிதித்து வத்தைப் பற்றியும் ஹிந்துமத பரிபாலனச் சட்டத்தைப் பற்றியுமாகும்.
திரு.ஷண்முகஞ் செட்டியார் இவற்றிற்குப் பதிலளிக்கு முகத்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே நாட்டின் அமைதியைக் காக்கவல்ல தென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்காகக் காங்கிரசிலும் போராடப் போவதாகவும் கூறியுள்ளார். மத பரிபாலனச் சட்டத்தைப்பற்றிக் கூறும்போது இச்சட்டம் அருமையானதொரு சட்டமென்றும், சட்ட சபையில் இச்சட்டம் நிறைவேற்றப் பெறுதற்குத் தன்னுடைய உதவியையும் அக்காலத்தில் கொடுத்திருப்பதாகவும், இனி காங்கிரசோ அல்லது மற்றையோர்களோ அச்சட்டத்தை அழிப்பதற்கு முற்பட்டால் தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தி அச்சட்டத்தை நிலைநாட்ட முயலுவேன் என்றும் திரு.செட்டியார் விடையிறுத்துள்ளார். இவ்வாறு தன்னுள்ளத்திலே உறையும் எண்ணத்தை தைரியமாய்க் கூறியது ஆச்சரியத்தைக் கொடுக்காது. ஐயங்கார் கோஷ்டியில் சேர்ந்து தாளம் போடும் உண்மைத் தமிழர் பலருக்கும் இத்தகைய கொள் கையே உண்டென்பதை நாம் தனித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து அறிவோம். ஆனால், திரு.ஷண்முகஞ் செட்டியாரைப் போன்று மற்றையோர் தைரியமாய் வெளியில் எடுத்துக் கூறப் பின்வாங்குவதற்குக் காரணமில்லாம லில்லை. திரு.ஷண்முகஞ் செட்டியார் சுயராஜ்யக் கட்சியில் சட்டசபை அபேக்ஷகராய் நிற்பினும் அவருக்கு பார்ப்பனர் உதவி வேண்டியதே யில்லை. ஐயங்கார் கோஷ்டியின் எத்தகைய உதவியுமில்லாமலேயே யெல் லாம் நடக்கும். ஆதலினாலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் தேவஸ்தான சட்டத்தையும் தைரியமாய் ஆதரிக்கத் தலைப்பட்டார்.
ஆனால் ஐயங்காரைச் சுற்றிவரும் மற்றையரோ பாவம்! கோழைகள்- காலில் பலமில்லாதவர்கள் – முதுகெலும்பில்லாக் கூனிகள். இவர்கள் நடப்பதற்கும் நிமிர்வதற்கும் ஐயங்கார் கோஷ்டியை எதிர்நோக்க வேண்டிய வர்கள். பத்திரிகை நடத்துவோருக்கு அக்கோஷ்டியின் உதவியும் ஆதரிப்பும் இல்லாவிடில் பத்திரிகை அடங்கி ஒடுங்கி விடும். சட்டசபைக்கு நிற்போருக் கும் அப்படியே. வேறு பலருக்கும் அவ்வத்துறையில் வெவ்வேறு வகையி லேயே அக்கோஷ்டியின் ஆதரிப்பு வேண்டியதாகிறது. இதற்காக தங்களது மனச்சாட்சியையும் கௌரவத்தையும் இழந்து வருவதோடல்லாமல் தங்க ளுக்கு மட்டுமல்லாது தங்கள் பின் சந்ததிகளுக்கும் குழிதோண்டிக் கொண்டவர்களாகிறோம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
திரு.ஷண்முகஞ் செட்டியாரல்லாது வேறு எவராலேனும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்குமானால் இதுவரை அவர் “மாரீசனாக”வும் “தேசத் துரோகி” யாகவும் மாறியிருப்பார். ஆனாலும் பார்ப்பனப் பத்திரிகைகள் தத்தம் ஜாதிப் புத்திப்படியே நடந்து வருகின்றன. தூத்துக்குடியிலும், திருச்சி யிலும் மேற்கண்ட இரு முக்கிய விஷயங்களையும் திரு.ஷண்முகஞ் செட்டி யாரால் ஸ்பஷ்டமாக எடுத்துக் கூறப்பட்டிருந்தும் உண்மைக்கு மாறாக பாமரரை ஏமாற்றும் வழியில் அவைகளைப் பிரசுரிக்காமல் மறைத்துவிட்டது சின்னத்தனமேயாகும். இவ்விஷயத்தை “திராவிடன்” ஒன்றே தெளிவாகக் கூறியது. ஆதலால் உண்மை எங்கிருக்கிறதென்பதை பொது ஜனங்களையே அறிந்துகொள்ள விட்டுவிடுகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 25.04.1926