வேண்டுகோள்

“திராவிடன்”

சென்னையில் தென்னிந்திய மகாஜன சங்கம் லிமிடெட் கம்பெனி யாரால் பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு என்பதாக “ஐஸ்டிஸ்”, “திராவிடன்” என்கிற இரு தினசரி பத்திரிகைகள் முறையே இங்கிலீசிலும் தமிழிலுமாக நடந்து வருகின்றன. அவைகள் ஜஸ்டிஸ் கட்சியானது அரசியல் அதிகாரத்தில் இருந்த காலமாகிய சென்ற ஆறு வருஷ காலமாக மந்திரிகளின் ஆயிரக்கணக்கான ரூபாய் நன்கொடைகளினாலும் அக்கட்சிப் பிரமுகர் களின் நன்கொடையாலும் நடைபெற்று வந்தன. இப்போது அக்கட்சி அதி காரமும், ஆரவாரமும் அக்கட்சியார் பாமர மக்கள் இடையில் தங்களது கொள்கைகளைச் சரியாகப் பரப்பாததாலும் பாமர மக்களிடம் அளவுக்கு மீறின நம்பிக்கையால் சரியான பிரசாரம் செய்யாமல் அலட்சியமாக இருந்து விட்டதாலும் அவர்களின் எதிர்கட்சியராகிய பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் இக்குறைகளை உபயோகித்துக்கொண்டு காங்கிரஸ், சுயராஜ் யம் என்னும் பல பாமர மக்கள் ஆசையால் ஏமாறத்தக்க பெயர்களால் விஷமப் பிரசாரம் செய்ததின் பலனாலும், அதிகாரப் பதவி இழக்க நேரிட்ட தால் இப்பத்திரிகைகள் கஷ்டத்திலிருக்கின்றன. ஆனபோதிலும், இக் கட்சியார் இப்போது பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் முற்போக்குக்கு அவசிய மானதும் உண்மையானதுமான காரியங்களைச் செய்ய நல்ல சமயமும் சாவகாசமும் பெற்றிருக்கிறார்கள். அதோடு கூடவே மகாத்மாவின் நிர்மா ணத் திட்டத்தின் அவசியத்தையும், மேன்மையையும் அதனால்தான் பார்ப்பனரல்லாத மக்கள் முன்னேறக் கூடும் என்கிற ரகசியத்தையும் மனப் பூர்வமாய் முன்னிலும் அதிகமாய் உணர்ந்தும் இருக்கிறார்கள். இந்நிலையில் இப்போது செய்ய வேண்டிய வேலை பிரசாரமும் நிர்மாணத் திட்டம் நிறை வேற்றுதலுமே ஆகும். இக்காரியங்களுக்கு பத்திரிகைகள் அவசியம் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். ஆகவே பார்ப்பனரல்லாதார் கைவசம் இது சமயம் மிகக் கஷ்டத்திலிருக்கும் தினசரி பத்திரிகைகள் முன் சொன்ன “ஜஸ்டிஸ்”, “திராவிடன்” என்கிற இரண்டே பத்திரிகைகள்தான். இவைகள் முன் மந்திரிமார்களும் மற்ற செல்வவான்களும் சேர்ந்து மாதம் 1-க்கு 3000 முதல் 5000 ரூபாய் வரை கொடுத்து வந்தும் நஷ்டத்திலும் கடனிலும் நடைபெற்றுவந்ததென்றால் இப்போது யாருடைய பண உதவியும் இல்லாத காலத்தில் எப்படி நடைபெறும் என்பதை வாசகர்களேதான் உணர வேண்டும். இவ்விரண்டு பத்திரிகைகளில் ஒரு பத்திரிகையை மாத்திரம் அதுவும் “ஜஸ்டிஸ்” என்கிற இங்கிலீஷ் பத்திரிகையை மாத்திரம் ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் இப்போது ஏற்றுக்கொண்டு அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கெல்லாம் தானே பொது ஜனங்கள் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ சரிசெய்து கொள்வது என்கிற உத்தேசத்தின் பேரிலும் தானும் எவ்வித ஊதியமில்லாமல் பத்திராபதிபராயிருப்பது என்கிற உறுதியின் பேரிலும் ஒப்புக்கொண்டு ஏற்று நடத்திவருவதாய்த் தெரிகிறது. இந்த நிலைமையில் தமிழ் பத்திரிகையான “திராவிடனை” கவனிப்பாரின்றி வாராந்திரமாக்க வேண்டியதோ அல்லது நிறுத்திவிட வேண்டியதோவான நிலைமையில் இருக்கிறது. அதன் தற்கால பத்திராதிபர்களும் மற்றும் காரியஸ்தர்களும் அதற்காக எவ்வளவோ கஷ்ட நஷ்டப்பட்டு உழைத்து வந்திருந்தாலும் இப்போது அதன் நிலைமை நெருக்கடியாகவே இருந்து வருகிறது. தமிழ்நாடு என்பதாக 10 ஜில்லாக்கள் கொண்ட ஒரு நாடு தமிழ்மக்கள் அதாவது பார்ப்பனரல்லாதார் என்பதாக 2 கோடி மக்களைக் கொண்ட ஒரு சமூகம் தங்கள் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் விடுதலைக்கும் என்பதாக ஏற்பட்ட ஒரு தமிழ் தினசரி பத்திரிகையை நடத்த முடியாமல் விட்டு விடுவதென்றால் நமது சமூகத்தின் தாழ்ந்த நிலைமையைக் காட்ட இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை யென்றே சொல்லு வோம். ஒருக்கால் தமிழ் மக்கள் அப்பத்திரிகையின் கட்சிக் கொள்கையைப் பற்றி ஏதாவது வார்த்தைகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்பதாக நினைத்தாலும் அக்கட்சியின் கொள்கையைப் பற்றி யாரும் இது சமயம் குற்றம் சொல்லுவதற்கில்லாத நிலையில் ஏற்பட்டிருப்பதை நன்றாய் அறிவார்கள். சுயராஜ்யம் அடையும் விஷயத்திலும் மகாத்மாவின் நிர்மாணத் திட்ட விஷயத்திலும் இது சமயம் நமது நாட்டு அரசியல் திட்டம் என்று சொல்லுபவைகளில் எதிலும் பின் வாங்கியதல்ல. அன்றியும் நம் மக்கள் சுய மரியாதைக்கு மற்ற எல்லா திட்டங்களையும் விட அதிகமான பிரதானியத்தை இக்கட்சி கொடுத்திருக்கிறது. அன்றியும் அரசியல் முதலிய உரிமைகளில் ஒரு வகுப்பாரை மற்றொரு வகுப்பார் ஏமாற்றிச் சூழ்ச்சி செய்து ஆதிக்கம் பெற்று நசுக்கி விடுவார்களோ என்று எவ்வகுப்பாரும் பயப்படுவதற்கும் அவநம்பிக் கைப்படுவதற்கும் இடமில்லாமல் எவ்வித உரிமையும் அதிகாரமும் பதவியும் எல்லா வகுப்பாரும் அவரவர்கள் கூட்டத்திற்கு தகுந்தபடி பிரதிநிதித்துவம் பெறலாம் பெற வேண்டும் என்கிற வகுப்புவாரி உரிமையையும் பிரதிநிதித் துவத்தையும் வலியுறுத்துகிறது. இப்படியிருக்கும்போது கொள்கைகளைப் பற்றி யாரும் எந்த வகுப்பாரும் நல்ல எண்ணத்தோடு கொஞ்சமாவதும் குறை கூற இடமில்லை என்பதும் யாவரும் அறிந்ததே. உயர்ந்த கொள்கைகளை கொண்ட இம்மாதிரி யான ஒரு பெரிய சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்குமாக நடைபெற ஒரு பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது நம் கடமை என்பது நாம் சொல்லாமலே விளங்கும். நம்மில் எத்தனையோ லக்ஷhதிபதிகள் வருஷம் 1 க்கு லக்ஷக்கணக்கான வரவு உள்ளவர்கள், தேசாபி மானமும் சமூகப் பற்றும் சுயமரியாதையில் கவலையுமுள்ளவர்கள் இருந்தும் கவனிக்காமல் இருப்பதென்றால் இச்செல்வங்கள் மற்றெதற்காகத்தான் இருப்பதாய்க் கருதுகிறார்களோ தெரியவில்லை.

நிற்க, சென்ற மாதக் கடைசியில் நாமும் ஸ்ரீமான்கள் பனகால் அரசரும், ராமசாமி முதலியாரவர்களும் திருநெல்வேலி சுற்றுப் பிரயாணத்தில் ஒன்றாய் பிரயாணம் செய்த காலத்தில் “திராவிடன்” பத்திரிகையை நடத்துவது தங்களுக்கு கஷ்டமாய் இருப்பதாகவும் நம்மையே ஏற்று நடத்த வேண்டும் என்பதாகவும், அப்பத்திரிகைக்கு அச்சு ஆலயமும், அச்சு யந்திரமும் அசோசியேட் பிரஸ் வர்த்தமானமும் தாங்கள் கொடுப்பதாகவும் நாம் அதன் நிர்வாகத்தையும் பத்திராதிபர் ஸ்தானமும் ஏற்று நடத்த வேண்டும் என்றும் மேற்காட்டியவைகள் தவிர மேற்கொண்டு அப்பத்திரிகை நடத்துவதால் ஏற்படும் நஷ்டங்களை பொது ஜனங்களின் நன்கொடையின் மூலமாக நம்மையே சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். எவ்வள வுக் கெவ்வளவு சுருக்கமாகக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் 8 பக்கத்திற் குக் குறையாமல் 12 பக்கங்களுக்கு அதிகப்படாமல் இப்போதிருக்குமளவில் குறைந்தது தினம் 2000 பிரதிகளாவது வெளியேறும் படியாவும், சுமார் மாதம் 1 -க்கு 1-4-0 ரூபாய் சந்தாவுக்கு மேல் போகாமலும் கூடுமானவரை பிரசார விஷயத்தோடு வர்த்தமான விஷயமும் தாராளமாய் பிரசுரிக்கப்பட்டு வெளியாவதாயிருந்தால் முதல் வருடத்திற்கு மாதம் 1-க்கு 750 ரூ. போல் நஷ்டம் வரக்கூடுமென்றும் அடுத்த அடுத்த வருஷங்களில் கொஞ்சங் கொஞ்சமாய் தனக்குத்தானே சரிகட்டிக் கொள்ளக்கூடிய நிலைமை வரலாம் என்றும் எதிர்பார்க்கிறோம். ஆகவே, இப்பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்வ தென்றால் பல வழிகளிலும் பயமாகவே இருக்கிறது. முதலாவது “குடி அரசு” பத்திரிகைப் பொறுப்புடன் இப்பத்திரிகைப் பொறுப்பையும் ஏற்பது என்பது சாத்தியமாகக் கூடியதா என்பதும் ஈரோட்டை விட்டு சென்னையில் அதிக நாள் தாமதிப்பது சாத்தியமாகுமா என்பதும் இப்போதைப்போல் வாரத்தில் 3,4 நாள் பிரசாரங்களுக்கு வெளியிடங்களுக்குப் போக சௌகரியம் ஏற்படு மா என்பதும் ஆகியவைகள் ஒரு புறமும் இவ்வளவு பெரிய நஷ்டத்தைப் பொதுஜனங்களின் நன்கொடைகளால் ஈடு செய்யக்கூடுமா என்பது ஒரு புறமும் யோசிக்க வேண்டிய விஷயமாயிருப்பதோடு இத்தொண்டை யாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக பொதுமக்கள் விரும்புகிறார்களா என்பதும் எல்லாவற்றையும்விட முக்கியமாய் யோசிக்க வேண்டிய விஷயமாகவும் இருக்கிறது. சமீபத்தில் மதுரை ஜில்லா கனவான் ஒருவர் “குடி அரசு”க்காக வருஷம் 2000 ரூ. வீதம் 3 வருஷத்திற்குக் குறையாமல் கொடுத்து வருவதாக தானாகவே முன் வந்தார். அதுசமயம் நாம் இப்போது “குடி அரசு”க்கு இவ்வித உதவி தேவையில்லை என்றும், “திராவிடனு”க்கு உதவுங்கள் என்றும் சொல்லிக்கொண்டதில் உடனே அவர் “திராவிடன்” பத்திரிகையையும் நீங்கள் எடுத்துக்கொண்டு நடத்துவதானால் அதன்படியே கொடுத்து வருகிறேன் என்பதாக வாக்களித்தார். தஞ்சை ஜில்லாவிலும் இரண்டு செல்வம் பொருந்திய கனவான்கள் “திராவிடனை”எடுத்து நடத்துங் கள் என்றும் அதில் ஏற்படும் நஷ்டத்திற்கு ஏதாவது நாங்கள் உதவுகிறோம் என்றும் தாங்களாகவே வாக்களித்தார்கள். இந்த நிலைமையில் என்ன செய்வதென்பது எமக்குத் தோன்றவில்லை. ஆகையால் “குடி அரசு” அபி மானிகளும் மற்றுமுள்ள கனவான்களும் கூடுமான வரையில் தங்கள் அபிப்பிராயத்தை தெரிவித்தால் அந்தப்படி செய்ய அனுகூலமாயிருக்கும். அரை அணா கார்டு செலவை லட்சியம் செய்யாமல் தங்களுக்குத் தோன்றி யதைத் தெரிவிக்கக் கோருகிறேன். அதாவது “திராவிடனை’’யும் ஏற்றுக் கொண்டு “குடி அரசு” கொள்கைப்படி தினசரியாக நடத்தலாமா? அல்லது “குடி அரசை” நடத்துவதே போதுமானதா என்ற விஷயத்தைத் தெரிவிக்கக் கோருகிறேன். அடுத்த வாரத்தில் நமது முடிவை தெரிவிக்கக் கடமைப்பட்டி ருக்கிறோம். ஆதலால் தயவு செய்து உடனே தெரிவிக்க வேண்டுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 06.03.1927

You may also like...

Leave a Reply