பெரியார் பேசிய பகுத்தறிவு – மேற்கத்திய இறக்குமதி அல்ல!
மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (சென்ற இதழ் தொடர்ச்சி)
சுயமரியாதை, பகுத்தறிவு, மானம், அறிவு ஆகிய பெரியாரின் சொல்லாடல்களை எவ்வாறு புரிந்து கொள்வது? குறிப்பாக, பெரியாரின் பகுத்தறிவு வாதம் நவீன ஐரோப்பாவின் அறிவு வாதம் (ரேசனலிசம்) போன்றதா?
பெரியாருடைய சுயமரியாதை, பகுத்தறிவு, மானம் அல்லது தன்மானம், அறிவு முதலான கருத்துகள் மேற்கத்திய ரேசனலிச (மேல் நாட்டு பகுத்தறிவு வாதம்) சாயல் கொண்ட கருத்துகள் போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், பெரியார் மேற்கத்திய பகுத்தறிவு வாதங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து, ஓர் அறிவுத்தளத்தில் நின்று அவற்றைக் கையாண்டார் என்பது மாதிரியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவரிடம் ஓர் உள்ளூர் தன்மை உண்டு. அதாவது இங்குள்ள சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியல் தளங்களில் நின்று இந்தச் சொற்களை உருவாக்கினார் போலத் தெரிகின்றது.
காங்கிரஸ்காரர்கள் சுயராஜ்யம் என்று வைத்ததற்கு எதிராகப் பெரியார் சுயமரியாதை என்பதை உருவாக்கினார் என்று நினைக்கிறேன். டொமினியன் அந்தஸ்து, அரசியல் அதிகாரப் பங்கீடு, அரசியல் சுதந்திரம் என்ற பல தளங்களில் வைத்து சுயராஜ்யம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். பெரியார் சுயமரியாதை என்பதை மனிதனுக்கானதாக முன் வைத்தார். காங்கிரஸ்காரர்கள் அரசை, அரசியல் அதிகாரம் என்பனவற்றை மனதில் இருத்திக் கொண்டு சுயராஜ்யம் குறித்துப் பேசினார்கள். அது இந்துத்துவவாதிகளுக்குச் சுயராஷ்டிரம் ஆகிவிடு கின்றது. பெரியார் மனிதரின் சுரணையைச் சீண்டக்கூடிய சுயமரியாதை குறித்துப் பேசினார். “உன் அம்மா இப்படித்தான் உன்னை அடிமையாகப் பெற்றாளா?” என்பதுபோல கேள்வி கேட்ட, மனிதரின் கோபத்தை, ரோசத்தை சீண்டுகிறதுதான் சுயமரியாதைக் கருத்தாக்கம். இதற்கு ஒப்புமையான ஐரோப்பியக் கருத்தாக்கம் என்றெல்லாம் தேட வேண்டியதில்லை; பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இது தனிமனித வாதமும் இல்லை. சுயமரியாதையை ஆங்கிலத்தில் “self-dignity” என்று சொல்லலாம். “self-respect” என்று மொழியாக்கம் செய்கின்றார்கள். ஆனால் இந்தக் கருத்தை உள்ளூர் சூழலிலிருந்துதான் எடுத்துள்ளார்; உருவாக்கி யுள்ளார்.
பகுத்தறிவு என்பதும் அப்படித்தான். பகுத்தறிவு என்பதைத் துல்லியமான ஆங்கிலத்தில் சொன்னால் analytical approachஎன்று மொழி பெயர்க்கலாம். ஐரோப்பாவில் analytical என்பதற்கு ஆங்கில அகராதிகள் பக்கம் பக்கமாக விளக்கங்கள் தருகின்றன. ஆனால் பகுத்தறிவு என்பது analytical என்ற கருத்தைப் பெற்றிருந்தாலும், அது மட்டுமல்ல. பகுத்தறிவு என்பதில், பகுத்துப் பார்த்துப் பிரித்தறிதல் என்பதெல்லாம் வருகின்றது. ஐரோப்பாவில் analysis என்றால், அதற்கு இணையாக synthesis என்பது உண்டு. ஆனால் synthesis என்பதற்குத் தொகுப்பு, இணைவாக்கம் என்பன போன்ற தமிழ்ச் சொல் உருவாக்க முயற்சியையே இப்போதுதான் சில கட்டுரைகளில் காண முடிகின்றது. Thesis, antithesis, synthesis என்றெல்லாம் வரும்போது இந்தத் தமிழ்ச் சொல்லாக்க முயற்சியும் தொடங்கியது. ஆனால், ஐரோப்பாவில் synthesis என்பதற்கு இணையாக analysis பயன்படுத்தப்பட்ட மாதிரி, பகுத்தறிவு என்பதைப் பெரியார் பயன்படுத்தவில்லை.
ஐரோப்பிய தத்துவங்களில் நேர் காட்சிவாதத்தில் analytical school என்றொரு சிந்தனைப்பள்ளி உண்டு. இந்த அர்த்தத்திலும் பெரியார் பயன்படுத்த வில்லை. அவர் பகுத்தறிவு என்பதற்கு அனுபவப் பூர்வமாகப் பார்த்தல், இயற்கைக்கு முரணில்லாமல் பார்த்தல், மனிதத் தன்மை கொண்டு பார்த்தல் என்ற அர்த்தங்களைத் தருவிக்கின்றார். பெரியாரிடம் அனுபவப்பூர்வமாகப் பார்த்தல் என்பது வலுவாக இருக்கும். இது மனிதருக்கு இயற்கை உணர்ச்சி என்பார். ஆகவே பெரியார் பகுத்தறிவு என்பதை ஐரோப்பாவிலிருந்து எடுக்கவில்லை.
பல சமயங்களில் அண்ணா, கருணாநிதி ஆகியோ ரெல்லாம்கூட, அங்கே அவர் சொன்னார், இங்கே இவர் சொன்னார் என்றெல்லாம் பேசுவார்கள். இந்த மாதிரியான அலம்பல் பேச்செல்லாம் பெரியாரிடம் கிடையாது. முழு மனிதத் தன்மையோடு மிக எளிமையாகப் பெரியார் பேசுவார். இது ஒரு மாதிரியான பட்டறிவு தன்மை ஆகும். இதை இன்னும் கவனமாக உற்றுநோக்க வேண்டும்.
பெரியாரிடம் காணப்படும் மதம் என்பது இயற்கைக்கு மாறானது, எதிரானது என்ற வாதம் நீட்சேவிடம் உண்டு. கிறிஸ்துவத்தை விமர்சிக்கும் போது நீட்சே, துறவு என்பது இயற்கைக்கு எதிரானது, மாறானது என்பார். பெரியாரைப் படிக்கும்போது நான் இதை உணர்ந்துள்ளேன். ஆனால் இந்த வாதத்தை நீட்சேவிடமிருந்து எடுத்தார் என்றும் சொல்ல முடியாது. சுதந்திரமாக இந்த வாதத்தைப் பெரியார் உண்டாக்கியுள்ளார். பெர்னாட்ஷா முதலான ஒரு சில பகுத்தறிவு வாதிகளை அவர் படித்திருக்கலாம்.
மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், அறிவை முதன்மைப்படுத்துகிற sensualism அல்லது empiricism, Rationalism ஆகிய இரண்டு தத்துவப் பள்ளிகள் தோன்றின. Empiricism என்பது புலன் சார்ந்த அறிவு என்பது பற்றியது ஆகும். இன்னும் கொஞ்சம் விரித்து நோக்கினால், அனுபவம் சார்ந்த அறிவு என்பது ஆகும். Rationalism என்பது லாஜிக்கில் உள்ள a prior என்ற இலத்தின் சொல் குறிக்கும் அனுபவம் சாராத அபூர்வமான அறிவு என்பது பற்றியது ஆகும். மனதிற்குள்ளிருந்து எழுகின்ற, உள்ளங்கை நெல்லிக்கனிப் போலத் தெரிகின்ற ஒன்றுதான்
reason என்பதற்கு கறாரான வரையறை ஆகும். இதற்குப் பல நேரங்களில் நிரூபணம் கூட இருக்காது. கணிதம் சார்ந்த அருவச் சிந்தனையை அடிப்படை யாகக் கொண்டு தெகார்த், லைப்னிஸ் போன்றோர் ரேசனலிசத்தை ஒரு தத்துவமாக நிறுவினார்கள். இத் தத்துவத்தில் கணித அடிப்படைகளிலிருந்து வரவழைக்கப்படும் அறிவுக்கு அனுபவம் சார்ந்த நிரூபணம் தேவையில்லை. அவசியமில்லை. அந்த அளவுக்கு அவர்கள் அறிவை உச்சாணி கொம்புக்குக் கொண்டு சென்று விட்டார்கள். அமைப்பியல் வாதத்தில் பைனரிகள் – எதிரிணை நிலைகள் மனித மனத்திலேயே இருக்கின்றன என்பதை இம்மானுவேல் காண்டிலிருந்து எடுத்து வாதிடு வார்கள். காண்ட் antinomies என்பது மனித மனத்தில் உள்ளார்ந்து உள்ளது என்றார். ஒரு கட்டத்தில் ரேசனலிசத்தில் அறிவை மறைஞானத் தன்மை கொண்டதாக, அனுபூதத் தன்மை கொண்டதாக மாற்றினார்கள். ஆகவே ஐரோப்பாவின் ரேசனலிசத்தில் உள்ள கூறுகள் எவைவும் பெரியாரிடம் இல்லை. அனுபவம் சார்ந்த அறிவுவாதக் கூறுகள், empiricism – எம்பிரிசிசக் கூறுகள் பெரியாரிடம் உண்டு.
ஐரோப்பியத் தத்துவங்களில் நேர்க்காட்சிவாதம், பயன்பாட்டுவாதம், மார்க்சியம் ஆகிய மூன்று தத்துவங்களின் சாயலை, செல்வாக்கைப் பெரியாரிடத்தில் காணமுடியும். நேர்க்காட்சி வாதத்தின் அனுபவம் சார்ந்த அறிவு என்ற செல்வாக்கு பெரியாரிடத்து உண்டு. ஒன்றின் பயன்பாட்டை வலியுறுத்தும் பயன்பாட்டு வாதத்தின் செல்வாக்கும் அவரிடம் உண்டு. பெரியார் எதனொன்றின் பயன்பாடு பற்றியும் அடிக்கடிக் கேள்வி எழுப்புவார். நவீன விஞ்ஞானங்களை எதற்காக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவற்றின் ரேசனாலிட்டி என்பதைக் கருதியல்ல, அவற்றின் பயன்பாடு கருதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பார் பெரியார். இதே போல மார்க்சியத்திலும் சில கூறுகளைப் பெரியார் எடுத்துக் கொள்வார். இந்த மூன்று தத்துவங்களோடும் பெரியார் தொடர்பு வைத்துக் கொள்வார். உடன்பாடுடைய இடத்தில் அவற்றின் செல்வாக்கை ஏற்றுக் கொள்வார். மாறுபாடுடைய இடத்தில் அவற்றை மறுத்துவிடுவார். அத் தத்துவங்கள் பற்றி பெரியாருக்கு என்ன படுகிறது என்பதுதான் முக்கியம். இதையெல்லாம் ரேசனலிசம் என்று ஆங்கிலத்திலும் நீங்கள் போட்டிருப்பதால் சொன்னேன்.
மற்றபடிக்கு, இயற்கையாய் இருத்தல், இயற்கை உணர்ச்சிக்கு மதிப்பளித்தல், இன்ப நாட்டம், சுதந்திரம் ஆகிய அறிவொளி இயக்கச் சிந்தனைகள் மீது பெரியாருக்கு ஈர்ப்பு உண்டு. ரூசோ, வால்டேர் ஆகியோரை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். ஆனால் ரேசனலிசம் என்றால், எந்த அர்த்தத்தில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்பதுடன் தான், பெரியாரை அதனுடன் தொடர்புபடுத்தலாமா, இல்லையா என்பதை யோசிக்க முடியும். தெகார்த்தின் ரேசனலிசச் சிந்தனையுடன் பெரியார் சிந்தனை ஒத்துப்போகாது.
பெரியார் முழக்கம் 01062017 இதழ்