ஜாதி-இந்துத்துவ எதிர்ப்பை உள்ளடக்கியதே சரியான பொருள் முதல்வாதம்
பெரியார் ஒரு வித்தியாசமான பொருள் முதல்வாதி. அவர் கொச்சைப் பொருள்முதல்வாதி அல்ல, அப்படி வரையறுப்பது தவறு.
மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (கடந்த இதழ்களின் தொடர்ச்சி)
சாதி, கற்பு போன்ற ஆதிக்கச் சொல்லாடல்களை மட்டுமில்லாமல், காதல், தொண்டு, பொதுநலம் போன்ற சொல்லாடல்களையும் நிராகரித்த பெரியார், இந்தியத் தத்துவ மரபில் சொல்லப்படும் விதண்டா வாதியா?
காதல், தொண்டு, பொதுநலம் போன்றவற்றை மிகைப்படுத்தும் போதுதான் பெரியார் நிராகரித்து எழுதியுள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் அவர் முழுக்கவும் நிராகரிக்கவில்லை. இவற்றின் நியாயமான அர்த்தப்பாட்டில் அதனை அங்கீகரிப்பார்.
சாதி, வருணம், மதம் பற்றிப் பேசும் போதெல்லாம், அவை வெறும் சுயநலக்காரர் களுடைய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டன, இலாபங்களுக்காக உருவாக்கப்பட்டன. இவை யெல்லாம் எந்தவித பொதுநோக்கங்களும் இல்லாதவை என்று நிராகரிப்பார். இது போன்று காதல், தொண்டு, பொதுநலம் ஆகிய வற்றைப் பெரியார் நிராகரிக்கவில்லை.
ஆனால், சமகாலத்தில் இச்சொல்லாடல்கள் பயன்படுத்துகிற சூழ்நிலைகளைப் பொறுத்து விமர்சித்துள்ளார். சில வேளைகளில், இச் சொல்லாடல்களைக் குறித்து போலித்தனமான வற்றை முன்வைத்து, திராவிட முன்னேற்ற இயக்கத்துக்காரர்கள் ரொம்ப சிலாகிக்கும் போது இவற்றை நிராகரித்துப் பேசியுள்ளார்.
காதல் என்பதைக்கூட, அது இயற்கை இன்பம், இயற்கைக்கு முரணானதாக இருக்கக் கூடாது என்ற வகையில் பெரியார் ஏற்பார். ஆங்கிலத்தில் யீடயவடிniஉ டடிஎந என்று சொல்வார்களே, அது போல பௌத்திரமான, தூய, புனித, உன்னத காதல் என்ற அர்த்தப்பாட்டில் நிராகரிப்பார். தாவரங்களிடத்தில், விலங்குகளிடத்தில் காதல் உண்டு, அதற்குப் புனிதம் ஒன்றுமில்லை, இயற்கையானது என்பது பெரியாரின் கருத்து. வ.சுப. மாணிக்கனார், தமிழ்க் காதல் புத்தகத்தில், ‘காதல் என்பது அகத்திணை. அகத்திணை தமிழில் முதன்மையானது. காதலைக் காமம் என்றும் சொல்லலாம். அதை இயற்கையான தளத்தில் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்துவார். இந்தப் பார்வையைக் கா.சிவத்தம்பி பாராட்டி எழுதியுள்ளார். காதலைப் பற்றி இது மாதிரியான பார்வைதான் பெரியாரிடமும் உண்டு. காதலை இயற்கை உணர்ச்சியாகப் பார்க்க வேண்டும் என்ற பார்வை நல்ல கருத்தாக்கம்தான்.
‘அரசியல் சுயநலமானதாகி விட்டது. சாதி, மதம் ஆகியவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதின் மூலம் சாதாரணத் தொண்டைச் செய்து வருகிறேன்’ என்பது போன்ற வாசகங்கள் பெரியாரிடம் உண்டு. பொதுநலம், தொண்டு ஆகியவற்றை ரொம்ப சிலாகித்து, உன்னதப் படுத்தப்படும் வேளையில்தான் அவற்றைப் பெரியார் நிராகரித்துள்ளார். ஆகவே, பெரியாரை விதண்டாவாதி என்று சொல்லமுடியாது.
பெரியார், அம்பேத்கர் ஆகியோரை இந்திய இடது சாரிகள் / மார்க்சியர்கள் பயன்பாட்டுவாத நோக்கில் கைக் கொள்கின்றார்கள். ஆனால் இந்திய மார்க்சியர்கள் தங்கள் சிந்தனையுடன் இவர்களை இணைவாக்கம் செய்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது சரியா? சில தமிழ் மார்க்சியர்கள், மார்க்ஸ் காலத்து முந்தைய ஐரோப்பிய பொருள் முதல்வாத மரபுடன் ஒப்புவைத்து, பெரியாரைக் கொச்சைப் பொருள்முதல்வாதி என்று வரையறை செய்கின்றனர், வாதிடுகின்றனர். இது சரிதானா? இந்த இந்திய மரபில் தங்கள் வேர்களில் ஊன்றி நின்று, இவர்களையும் தமது ஊற்றுகளாக இந்திய, தமிழக மார்க்சியர்கள் கொள்ள முடியுமா?
நமது கட்சியின் பெருந் தலைவர்களில் ஒருவரான ராஜேஷ்வர்ராவ் அறக்கட்டளை, இந்தியப் பொருள் முதல் வாதங்கள் பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்த இருக்கின்றது. அக்கருத்தரங்கில் கலந்துகொள்ள எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை விடுத்த தோழருக்கும் எனக்கும் நடந்த உரையாடலில் நவீன காலத்துக்கு முந்தைய இந்தியப் பொருள் முதல்வாத வகைகளின் முக்கியத்துவம் குறித்து பேசிக் கொண்டோம். இந்தியாவின் அந்தந்த வட்டாரத் தாய்மொழிகளில் உள்ள பொருள்முதல்வாதங்கள் பற்றி அறிந்துகொள்ளுதல் மிகமிக அவசியம். பொதுவாகச் சொல்வதென்றால் நவீன காலத்துக்கு முந்திய சிந்தனை முறைகளை அறிந்துகொள்ள வேண்டும்.
கறாராக நோக்கின், நவீன காலப் பொருள் முதல் வாதத்தை முன்னுக்குக் கொண்டு சென்றவர்கள் ஐரோப்பாவின் முதலாளிகள். பாயர்பாக்கின் ஜெர்மானியப் பொருள்முதல்வாதம் மானிடவியல், மனிதப் பண்பியல் சார்ந்த பொருள்முதல்வாதம் என்பார்கள். பிரான்சிஸ் பேக்கன், ஜான் லாக் போன்றோருடைய பொருள்முதல்வாதம் முரட்டுப் பொருள் முதல்வாதம், முதலாளியத்தின் பொருள் முதல் வாதம், வணிகத் தொழிற்சமூகத்தின் பொருள் முதல் வாதம். இதில் கொச்சைத் தன்மை உண்டு. இது அதிகாரத்தின் கோட்பாடாகவும் இருந்தது. பொருள் முதல்வாதம் என்று சொன்னால், நாம் என்னமோ புனிதமான மார்க்சியக் கோட்பாடு போல நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை.
அறிவியல்-தொழில்நுட்பங்களை அதீதமாக உன்னதப்படுத்திப் பார்க்கும்போதுதான், நவீன காலத்துப் பொருள்முதல்வாதங்கள் அதிக அற்புதமானது போல தெரியும். ஆனால் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் அறிவியல்-தொழில்நுட்பங்களை அதிகமாக உன்னதப்படுத்த இயலாது. முதலாளிய காலகட்டத்தில் உருவான கோட்பாடுகள், தொழில்நுட்ப வாதம், பொருளாதார வாதம் ஆகியவற்றைக் கொஞ்சம் சந்தேகப்பட வேண்டியுள்ளது.
ஆகவே, நான் சொல்ல வருவது என்னவென்றால், நவீன காலத்து ஐரோப்பிய பொருள்முதல்வாதங்கள் என்று பேசப்படுவதைப் போல, மூன்றாம் உலகப் பொருள்முதல்வாதங்கள் பற்றிப் பேச வேண்டும். பழங்குடிகளின் பொருள்முதல்வாதங்கள் பற்றிப் பேசிப் பார்க்க வேண்டும். சாருவாகம் ஒரு பொருள் முதல் வாதம். சாங்கியத்தில் பொருள்முதல்வாதம் உண்டு. தாந்திரிகத்தில் பொருள்முதல்வாதம் உண்டு. வைசேடி கத்தில் பொருள்முதல்வாதம் உண்டு. தமிழில் திணைக்கோட்பாட்டில் பொருள் முதல் வாதம் உண்டு. சாக்த சிந்தனையில் பொருள் முதல் வாதம் உண்டு. இந்திய பொருள்முதல்வாதங்களின் பல்வேறு வடிவங்கள் பற்றி ஆழமாகப் பேச வேண்டும்.
தமிழில் உள்ள திணைக் கோட்பாட்டில் அட்ட காசமான பொருள்முதல்வாதம் இருக்கின்றது. நிலமும் பொழுதும் முதல் எனப் பேசும்போது, அது வித்தியாசமான பொருள்முதல்வாதத்தைப் பேசு கிறது. மார்க்ஸ் காலத்துக்கு முந்தைய பொருள் முதல்வாதங்கள் சரியானவை அல்ல என்று கழித்துக் கட்டுகிற “வரைசட்டகமே” சரியானதில்லை.
பெரியார் ஒரு வித்தியாசமான பொருள் முதல்வாதி. அவர் கொச்சைப் பொருள்முதல்வாதி அல்ல, அப்படி வரையறுப்பது தவறு. இந்தியச் சூழல்களில் பார்ப்பனிய எதிர்ப்பு சார்ந்த, பெரியாரின் நாத்திகம் என்பது ஒரு நியாயமான வரலாற்றுத் தொடர்ச்சியின் – ழளைவடிசiஉயட ஹசபரஅநவேயவiஎந – வரலாற்று நிலைப்பாட்டின் உச்சம்; எல்லை. ஆகவே அதை அப்படியே நிராகரித்துவிட, மறுதலித்துவிட முடியாது. அதனுடன் நின்றுதான், நாம் அதைக் கொஞ்சம் நெகிழ்வார்ந்த நிலைக்கு கொண்டு செல்லலாம், வித்தியாசமான இயங்கியல் நிலைக்குப் பயணிக்கலாம். ஆனால் பெரியார் பேசிய நியாயத் தன்மை கொண்ட வைதீக எதிர்ப்புப் பொருள் முதல் வாதம் என்பது ஒரு வரலாற்று அறிவிக்கை. பழைய தத்துவார்த்தக் கலைச் சொற்களில் சொன்னால் வரலாற்றின் மகாவாக்கியம். அதனால் பெரியார் சிந்தனை நெடுநாளைக்குத் தங்கி நிற்கும்.
மாறும் அரசியல் விவாதச் சூழ்நிலைக்கு ஏற்ப, இன்னும் சில புதிய நெகிழ்வார்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டியதாக இருக்கலாம். இப்போது நாத்திகம், செக்குலரிசம் – சார்பின்மைவாதம் பற்றி புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. அவற்றுக்குப் பண்பாட்டு வேர்கள் இல்லை என வாதிடப்படு கின்றது. மானிடவியல் ஆய்வுகளின், பண்பாட்டு ஆய்வுகளின் வழியாக அவற்றுக்குப் பண்பாட்டு வேர் கிடைக்கும்போது, பண்பாட்டு வேர் கொள்ளல் நடக்கும்போது அவை சற்று வேறுவிதமாக மாறக்கூடும். தமிழிலேயே பண்பாடு மற்றும் பெரியாரியம் பற்றிய விவாதம் நடந்திருக்கின்றது. இவற்றைத் திராவிட இயக்கங்களும் நாமும் செய்துள்ளோம். தொ. பரமசிவன் முழுக்க, வலுவான பெரியாரியவாதி. ஆனால் மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் வழியிலான ஆய்வுகள் செய்திருக் கின்றார். பண்பாட்டுக் கூறுகளையெல்லாம் ஆழமாகத் தன்வயப்படுத்திக் கொள்வார். ஆனாலும் கூட பெரியார் சிந்தனை என்பது வரலாற்று வாக்கியம். அதை நிராகரிக்க முடியாது. கொஞ்சம் நெகிழ்வாக்கம் செய்யலாம். பெரியார் கொச்சைப் பொருள்முதல்வாதி என்பதெல்லாம் பொறுப் பில்லாத, அப்புறப்படுத்த வேண்டிய வார்த்தைகள்.
எஸ்.வி.ஆருடைய பணிகள், அ.மார்க்ஸ் உள்ளிட்ட பின்னை நவீனத்துவரின் வேலைகள், பெண்ணிய தளங்களிலிருந்து வ.கீதா அவர்கள் பெரியாரைத் தனதாக்கிக் கொள்ளும் இடங்கள் போன்ற நியாயப்பாடுகள் வலுவாகும்போது, மார்க்சியர்களாகிய நமது பார்வைகளும் மாறிக் கொண்டே வருகின்றது. பயன்பாட்டுவாத நோக்கில் பெரியாரை எடுத்துக் கொண்டோம் என்று சொல்ல முடியாது. பெரியாரை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்ற விவாதம் நம்மிடையே நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றது. நாம் பெரியாரை ஏற்றுக் கொள்ள முடியாமல் போனமைக்குப் பலவித காரணங்கள் இருந்திருக் கின்றன. எரிச்சல்படுத்தக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியலும் சில சமயங்களில் காரணமாக இருந்திருக்கின்றது.
‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ எஸ்.வி.ஆர் – வ.கீதா ஆகியோரின் மிக நல்ல படைப்பு. அதில் அவர்கள் பெரியார், சுய மரியாதை சமதர்மக் கட்சி ஆரம்பிப்பதற்கு முயன்றதைப் பற்றியெல்லாம் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளனர். அது நமக்குப் புது வெளிச்சங்களைத் தருகின்றன. பெரியாரின் சில பரிமாணங்கள் பற்றிய அ.மார்க்ஸின் பார்வைகளும் மிக முக்கியமானவை. பெரியாரிடம் உள்ள கட்ட விழ்த்தல், அராஜகக் கூறுகள் இல்லாமல் இந்தியப் பழமையை எதிர்கொள்ள முடியாது என்ற அ.மார்க்ஸின் பார்வை முக்கியமானது.
ஆனால் நாம் இன்னும் இயங்கியல் பொருள் முதல்வாதம் என்ற சொல்லை மட்டும்தான் பயன் படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்தியச் சூழல் களுக்குள் பொருள்முதல்வாதம் என்பது சாதி, அதைத் தாங்கிப் பிடிக்கிற சனாதனம், இந்துத்துவம் ஆகியவற்றை விமர்சிக்கின்ற ஒன்றாகத்தான் இருக்க முடியும். அப்படி உருவானால்தான் சமூகத்திற்கும் பயனுடையதாக இருக்க முடியும். இதிலில்லாமல் வெறும் வர்க்கவாதம் பேசினால் பயனில்லை.
ஆங்கிலத்தில் ஒரு தத்துவ விவாதம் நடந்து வருகின்றது. அது உடிசசநஉவநேளள எனப்படுகிற சரித்தன்மை பற்றியது. இந்தச் சரித்தன்மை என்கிற வாதமானது பல சமயங்களில் செக்டேரியனிசத்திற்கு – குழுவாதத்திற்குக் கொண்டுசென்று விடும். சரித்தன்மை என்பது அறிவியல் ரீதியாக, தொழில் நுட்பரீதியாக இந்த நெட்டைப் போட்டால்தான் அந்தச் சக்கரம் சுற்றும் என்பது போல எந்திரத்தனமாகச் சரித்தன்மை என்பது சரியாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை என்பது இந்தச் சரித் தன்மையோடு மட்டும் குறுகிவிடுகிற விசயமில்லை. பல சமயங்களில் மார்க்சியக் கோட்பாட்டாளர்கள், இந்தச் சரித்தன்மையை மட்டும்தான் கோட்பாட்டு ரீதியாகப் பார்க்கின்றார்கள் என்ற விமர்சனம் மேலைநாடுகளில் வந்துள்ளது. இந்த விமர்சனத்திற்கு வாழ்க்கையை வாழ்க்கையாகப் பார்க்கவில்லை, எந்திரத்தனமாகப் பார்க்கின்றோம் என்று அர்த்தம். நமது கோட்பாடுகளில் எந்திரத்தனம் இருக்கிறது என்று பொருள்.
உங்களுக்குத் தெரியுமா? “பொருள்முதல்வாதம் உண்மையாக இருக்கலாம், ஆனால் கருத்து முதல்வாதம் சுவையாக இருக்கின்றது” என்று கார்க்கி சொல்வார். பொருள்முதல்வாதம் எல்லா சமயங் களிலும் சரியாக இருப்பது பலமாக இருக்கலாம், பலவீனமாகவும் இருக்கலாம். கார்க்கி ஏதோ கொடூரமான தப்பாகச் சொல்லிவிட்டார் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த இடங்களில் இயங்கியல்ரீதியாக, நெகிழ்வாகச் செயல்பட வேண்டும் என்றுதான் கார்க்கி வலியுறுத்துகின்றார் என்று நினைக்கிறேன்.
இலத்தின் அமெரிக்க புரட்சியாளர்கள் புரட்சியில் அறிவார்ந்த கூறுகள் மட்டுமில்லை, அதற்கு மாறான கூறுகளும் இருக்கும் என்கிறார்கள்; புரட்சியில் கற்பனை, உணர்ச்சி ஆகிய கூறுகளெல்லாம் இருக்கும் என்கிறார்கள். தொன்மச் சிந்தனையும் புரட்சியும் என்று லத்தீன் அமெரிக்கர்கள் கட்டுரை எழுதுகிறார்கள். அதனால் நாம் சரித்தன்மையை மட்டும் வைத்துக் கொண்டு, பெரியாரைக் கொச்சையானவர் என்றெல்லாம் சொல்வது, விமர்சிப்பது சரியாக இருக்காது.
பெரியார் முழக்கம் 15062017 இதழ்