புதுக்கோட்டை முஸ்லீம் மகாநாடு
சமஸ்தான முஸ்லீம் பிரஜைகளின் முதலாவது மகாநாட்டில் சைபுல் இஸ்லாம் பத்திரிகை ஆசிரியரான மௌலானா மௌலி அஹமது சயிது சாஹிப் அவர்கள் 15. 2. 27 ல் அக்கிராசனம் வகித்து நிகழ்த்திய அக்கிராசனப் பிரசங்கம் மிகவும் நீண்டதாகையால் நமது பத்திரிகையில் முழுதும் பிரசுரிக்க முடியாததற்கு மிக வருந்துகிறோம். நாமறிந்த வரையில் மௌலானா அவர் கள் நமது நாட்டுப் பெரும்பான்மையான அரசியல்வாதிகளைப் போல் கீர்த்திக்கும், பெருமைக்கும், சுயநலத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் ஆசை பட்டுக் கொண்டு தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டும், உள்ளொன்றும் புறமொன்றும் ஆகப் பேசியும், எழுதியும் காலங் கழிப்பவரல்ல. சரியோ, தப்போ தனது மனதிற்குட்பட்டதை ஒளிக்காமல் சொல்லும் சுபாவம் கொண்ட வர். அவர் தனது அக்கிராசன பிரசங்கத்தில் கூறியிருக்கும் ஒற்றுமை, கதர் முதலிய சில முக்கிய விஷயங்களை மாத்திரம் பின்னால் குறிப்பிடுவோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 20.02.1927