தற்கால நிலை அரசியலும் சமூகஇயலும்

கனவான்களே!

அரசியலும், சமூக இயலும் என்பது பற்றி எனது அபிப்பிராயங்களை பத்திரிகை மூலம் தெரிந்திருப்பீர்கள். அதாவது, அரசியல்வேறு சமூக இயல் வேறு என்பதாக இரண்டுமே தனித்தனி இயல்கள் கிடையாது. இவ்விரண்டும் வேறு வேறாகத் தனிப்படுத்தக்கூடிய விஷயமல்ல. அரசியல் என்றாலும் சமூக இயல் என்றாலும் இரண்டும் ஒரு நாட்டின் ஒரு சமூகத்தின் முன்னேற் றத்திற்குத்தானே யல்லாமல் வேறு காரியத்திற்கல்ல. எனவே ஒரு நாட்டின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்று வைத்துக்கொண்டு அரசியல் என்றால் அதில் சமூக முன்னேற்றம் இல்லாமலிருக்க முடியாது. அது போலவே சமூக இயல் என்றாலும் அரசியல் முன்னேற்றம் அதில் இல்லாமலிருக்க முடியாது. இரண்டும் தனித்தனி பிரிக்கப்படாத தன்மை யுடையது. நமது நாட்டில் இப்போது இவ்விரண்டும் வேறு வேறாக காணப்படுவதின் காரணம் உண்மை யான அரசியல் தொண்டும் உண்மையான சமூக இயல் தொண்டும் இல்லாமல் வெறும் வேஷத்தில் பாமர மக்களை ஏய்த்து, சிலர் தங்கள் சுயநலத்தை வளர்க்கவும் பாடுபடுவதினால், அதாவது நம் நாட்டு பெரும்பாலும் படித்தவர் கள் என்போர்களான பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்துவிட்டு உத்தியோகம் சம்பாதிக்கப் பாடுபடுவது அரசியலாகவும், ஆங்கிலம் படிக்காமல் ஆரியம் படித்து விட்டு வயிறு வளர்க்க புரோகிதத் தொழிலை பரப்புவது சமூக இயலாகவும் மதிக்கப்பட்டு வருகிறது. எனவே இவ்விரண்டு காரியங்களும் நாட்டு முன்னேற்றத்திற்கான அரசியலும் ஆகாது, சமூக இயலும் ஆய்விடாது.

உதாரணமாக, மகாத்மா காந்தி அரசியலில் அதாவது காங்கிரசில் ஈடுபட்டிருந்த காலத்தில் அரசியல் என்பதின் பேரால் அவர் ஏற்படுத்தின திட்டமாகிய நிர்மாணத்திட்டத்தையும் பஹிஷ்கார திட்டத்தையும் கவனித்துப் பார்த்தால் என்ன என்ன விஷயம் சேர்ந்தால் அரசியல் ஆகும் என்பது புலப்படும்.

அதாவது நிர்மாணத் திட்டத்தில் எல்லா மக்கள் வயிற்றுக்கும், பிழைப்பும், பணமும் சம்பாதிக்க “பொருளியல்” ஆன கதரும் எல்லோரும் சமத்துவமடைய தீண்டாமை விலக்கு என்னும் “சமத்துவஇயலும்” மனிதர்களின் ஒழுக்கம் சீர்படுவதற்காக, மது விலக்கு என்னும் “ஒழுக்க இயலும்” எல்லா மதஸ்தர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் சகிப்புத் தன்மையாகவும் இருக்க வேண்டும் என்பதாக ‘இந்து முஸ்லீம் ஒற்றுமை’ என்னும் பரஸ்பர “அன்பு இயலும்” ஆகிய இவைகள் சேர்ந்ததை நிர்மாணத் திட்டமாகவும், ஆட்சி சம்பந்தப்பட்டவரை, அதை ஒழுங்குபடுத்தி அதை மேற்கண்ட நிர்மாணத் திட்டத்திற்கு அனுகூலமாய் ஆட்சி புரியும்படி செய்வதற்காக மட்டும் அனுகூலமாய் இருக்கும்படி செய்ய, அதுவரையில் அதனோடு கூடுமான வழிகளிலெல்லாம் ஒற்றுழைக்காமலிருக்க வேண்டும் என்பதாகக்கொண்டு அரசாங்கத்துள் நமக்குள்ள ஒவ்வொரு சம்பந்தத்தி லிருந்தும் விலகுவதற்காக பஹிஷ்கார திட்டம் என்பதாகவும் ஏற்பாடு செய்திருந்ததே ஒழிய வேறில்லை.

மற்றபடி நமது நாட்டு பழய கால சரித்திரத்தில் இம்மாதிரி அரசியல் என்பதாக ஒன்று இருந்ததாகவே காணமுடியாது. மக்களுக்கும் அரசர் களுக்கும் அபிப்பிராயபேதமோ, அரசாங்க சுதந்திரத்திற்கு என்பதாக மக்கள் அரசாங்கத்துடன் போராடியதாகவோ, அதற்காக ஒரு இயக்கம் இருந்ததா கவோ எந்த இடத்திலும் காணமுடியாது. சரித்திரத்தில் பார்க்கும், அரச தர்பாரில் அரசன் மக்களுக்காக வாழ்ந்து வந்ததும், மக்கள் அரசருக்கு முடி சூட்டினதுமாக காணப்படுமே ஒழிய வேறில்லை. அது ஒரு தனி ஜாதியாக வோ அல்லது ஒரு தனி வகுப்பாகவோ இருந்ததாகக் கூட காணமுடியாது. ஏதாவது ஒரு இடத்தில் குடிகள் அரசனிடம் முறையிட்டதாக பார்ப்போ மானால், அது காட்டு மிருகங்கள் வந்து வேளாண்மைகளை அழித்ததற் காகவும், வேறு ஏதோ திருடர்களோ, ராக்ஷதர்களோ வந்து குடிகளை இம்சித்த தாகவும் காணப்படுமே ஒழிய வேறு ஆக்ஷி முறையைப் பற்றி குற்றம் காணவே முடியாது. இப்பொழுது நமது கண்களுக்கு நமது நாடு ஆக்ஷி முறை குற்றம் சொல்லப்படுவதாய்க் காண்பதெல்லாம் மேல்காட்டிய நிர்மாணத் திட்டத்தில் நமக்குள்ள குற்றங்களே ஒழிய ஆக்ஷிக் குற்றமே அல்ல. ஒரு நாடோ அல்லது ஒரு சமூகமோ தங்களுக்குள் ஒற்றுமையில் லாமல் பரஸ்பர அன்பும் இல்லாமல் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்தி மனிதத் தன்மைக்கு விரோதமாய் வாழும்போது, எப்படியானாலும் அன்னி யன் யாராவது ஒருவன் உள்ளே பிரவேசித்து ஆதிக்கம் பெற்றுக் கொள்ளத் தான் முடியுமே ஒழிய வீணாய்க் கிடக்க முடியவே முடியாது. இந்த நிலையில் வந்த கொடுமையான ஆட்சிமுறையானது இந்நிலைகள் சரிப்படுத்தப் பட்டாலொழிய ஒழிக்கப்படவே முடியாது என்பதை கண்டிப்பாய் கவனத்தில் வைக்க வேண்டும். ஏதாவது ஒரு கொடுமையை ஒழிக்க வேண்டுமானால் அக்கொடுமைக்கு உள்ளஆஸ்பதமான காரியம் எதுவோ அதை ஒழித் தால்தான் அக்கொடுமை வளராமலிருக்க முடியுமேயல்லாமல் மேலுக்கு மேலாகப் பார்ப்பதால் அது அடியோடு ஒழிக்கப்படவே மாட்டாது. உதாரண மாக நமக்கு தலைவலி ஏற்பட்டிருக்குமானால், அத் தலைவலி வருவதற்கு நமது சரீரத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறு என்ன? அதற்கு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்த மாதிரி பத்தியமாயிருக்க வேண்டும்? என்ன மாதிரி மருந்து சாப்பிட வேண்டும்? என்பதாக கவனித்து கண்டு பிடித்து அந்தப்படி நடந்து வர வேண்டுமேயல்லாமல் அப்போதைக் கப்போது ஒரு பத்துப் போடவோ அல்லது ஒரு தைலத்தைப் பூசவோ செய்தால் எப்படி வியாதி போகும் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அரசியல் என்கிற பேரால் இதுசமயம் நமது நாட்டில் ஒரு கூட்டத்தாரால் நடத்தப்பட்டு வரும் ஒருவித கிளர்ச்சி சிலரின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதே தவிர நாட்டுக்கோ நாட்டிலுள்ள மக்க ளுக்கோ பொதுவாக அதில் ஒருவித நன்மையும் இல்லாததோடு நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிய தீவினையை உண்டாக்கி வருவதாகவே இருக்கிறது.

முதலாவது நமக்குள் ஒருவித ஒற்றுமை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதற்காகவே பாடுபட வேண்டும். உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் அதற்கு இடையூறாய் உள்ளவைகளையெல்லாம் ஒழிக்க வேண்டும். நமது நாட்டில் ஒற்றுமைக் குறைவு என்பதை ஒரு தேசத் தாருக்கு ஒரு தேசத்தார் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. ஒரு மதஸ்தருக்கு மற்றொரு மதஸ்தர் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. நம்மைப் பொருத்தவரை அதாவது இங்கு கூடியுள்ள பெரும்பான்மை மக்க ளைப் பொருத்தவரை ஒரு மதஸ்தர் (இந்துக்கள்) என்பவர்களுக்குள்ளாகவே அநேக விதமான கொடுமையும் ஒற்றுமைக்குறைவும் இருந்து வருகிறது. இந்து மத தத்துவமே நமது நாட்டை இந்த தாழ்ந்த கதிக்கு கொண்டு வந்தது என்பதே நமது கெட்டியான அபிப்பிராயம். மக்கள் அறிவையும் ஆற்ற லையும் அன்பையும் மனித தர்மத்தையும் நமது மதம் என்று சொல்லுவதே அழித்துக் கொண்டு வருகிறது.

முதலாவதாக நமது நாட்டில் மக்களை பிறவியிலேயே உயர்வு தாழ்வு கற்பித்து, ஒன்றுக்கொன்று சேர விடாமல் தடுத்து, எவ்வளவு அயோக்கியனா யிருந்தாலும் ஒரு வகுப்பு தாய் வயிற்றில் பிறந்ததற்காக மாத்திரம் உயர்ந்தவன் என்றும், மற்றெல்லோரும் அவனைத் தொழ வேண்டியவர்கள் என்றும் ஆக்கி வைத்திருக்கிறது. அதுபோலவே மற்றொருவன் எவ்வளவு யோக்கியனாயிருந்தாலும் வேறு ஒரு வகுப்பு தாய் தகப்பனுக்குப் பிறந்த தினாலேயே அவன் தாழ்ந்தவனென்றும், தொடக்கூடாதவன், பார்க்கக் கூடாத வன், கிட்டவரக் கூடாதவன், அவனவன் பக்தி செலுத்தும் தெய்வத்தைக் கூட பார்க்கக் கூடாதவன் என்றும், பொது தெருவில் நடக்கக் கூடாதவன் என்றும் தடுக்கிறது. இந்தக் கொடுமையும் முட்டாள்தனமும் கொண்ட ஆணவம் நமது நாட்டில் தான் இருக்கிறதே தவிர வேறு நாட்டில் கண்டிப்பாய் இம்மாதிரி பிறவி தோஷம் கற்பிக்கிறதே கிடையாது. இது மனிதனோடு மாத்திரமல் லாமல் கடவுள்கள் என்று சொல்லப்படுபவைகளுக்கும் இத்தோஷம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய நாட்டு பழந்தமிழ் சரித்திரங்களில் இம்மாதிரி கொடுமையும் மூடத்தனமும் கொண்ட விஷயங்கள் மருந்துக்கு கூட காணப்படுவதில்லை. நமது நாட்டுக்கு அயல் நாடுகளில் இருந்து வந்து குடியேறின ஒரு கூட்டத்தாரால் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இந்த மதம் நம்மை இந்த இழி நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. பிறப்பினால் உயர்வு தாழ்வு வகுக்கும் தன்மையான வருணம், ஆச்சிரமம், தர்மம், ஜாதி, பிராமணன், க்ஷத்திரியன், சூத்திரன், பஞ்சமன், சண்டாளன் முதலியன வார்த்தைகள் தமிழ் மொழிகளே அல்ல. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பாகுபாடு இருந்ததும் இல்லை, தமிழ்நாட்டிற்கு இப்பேர்ப்பட்ட பாகுபாடுகள் எந்த விதத்திலும் வேண்டியதும் இல்லை. அது எந்த விதத்திலும் நடக்கக் கூடிய காரியமும் அல்ல. இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் அபிப்பிராயம் கூட மறுக்க வேண்டியதாகவே இருக்கிறது. பிராமணன் என்பதாக ஒரு ஜாதியோ, ஒரு வகுப்போ, ஒரு மனிதனோ தனியே இருக்க வேண்டும் என்ப தின் அவசியம் என்ன. ஜன சேவை செய்வது பிராமணர்களுடைய தர்மம் என்றும் அதற்காகவே அவர்கள் பிறவியிலேயே பிராமணர்களாகப் பிறந் திருக்கிறார்கள் என்றும் மகாத்மா சொல்லுகிறார். ஜன சேவை என்பது ஒரு ஜாதிக்கோ ஒரு மனிதனுக்கோ சொந்தமானதல்ல. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒருவனுக்கொருவன் உதவி உபகாரம், சேவை முதலியவைகள் செய்ய வேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் பரோபகாரத்திற்கு ஒதுக்கி வைத்த நேரங்களி லெல்லாம் ஜனசேவை செய்தவனாகிறான். ஒரு மனிதன் ஒரு பொதுக்கிணறு வெட்டினால்,வெட்டி வைத்தால், ஒரு பாதை துப்புரவு செய்தால், செய்வித் தால், சுகாதார விஷயத்தில் வீதி கூட்டினால், கூட்டுவித்தால், இன்னும் இதுபோன்ற காரியங்கள் செய்தால், ஜனசேவை செய்தவனாகிறான். இது ஒரே வர்ணத்திற்கு அல்லது ஜாதிக்கு வகுப்புக்கு என்பதாக ஏன் பிரித்து வைக்க வேண்டும். எப்படி பிரித்து வைக்க முடியும் மற்றவர்களுக்கு ஏன் அந்த பாத்தியம் அவரவர் சவுகரியப்படி செய்ய விடக் கூடாது. தவிர, நாட்டை யாள்வது க்ஷத்திரியனுக்கு உரிய தர்மம் என்று சொல்லுவோமானால் ஒரு நாட்டை ஒரு மனிதன்தான் ஆளமுடியும். ஒரு வருணமோ ஒரு ஜாதியோ ஒரு வகுப்போ ஆளமுடியாது. அப்படிப் பார்த்தால் ஒரு நாட்டிற்கு ஒரே ஒரு க்ஷத்திரியன் தான் இருக்க முடியும். நாட்டை ஆளுகிறவனுடைய ஜாதி யெல்லாம் க்ஷத்திரிய ஜாதி ஆகிவிட்டால் உலகத்தில் ஆக்ஷி புரியாத ஜாதியே கிடையாது. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு ஜாதியோ வகுப்போ உலகம் பூராவையோ அல்லது ஓர் பாகத்தையோ ஏதாவது ஒரு காலத்தில் ஆண்டு தான் இருக்கின்றது. ஆகவே, எல்லோரையுமே க்ஷத்திரியர் வர்ணத்தில் தான் சேர்க்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் மகாத்மா மைசூரில் சொன்னதுபோல் “எளியவர்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனுடைய தர்மம்” என்பதாகப் பார்த்தாலும் எளியவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு தனி வருணமோ ஜாதியோ எதற்காக வேண்டும். எப்படி இருக்க முடியும். பிறவி க்ஷத்திரிய வர்ணத்தில் எளியவர்கள் இருக்க மாட்டார்கள், அன்றியும் மற்றவர்கள் எளியவர்களைக் காக்கக்கூடாதா. மனிதனானவன் அவனவன் வாழ்வில் எளியவர்களைக் காப்பதற்கு ஏதாவது ஒரு நேரமோ செய்கையோ ஒதுக்கி வைத்துக்கொண்டு செய்தால் அது எளியவர்களைக் காத்ததாகாதா. இப்படியே பிறவி வைசிய வருணத்திற்கு என்ன தர்மம் கட்டுப்பட்டது என்றால், வைசியர்கள் வியாபாரம் செய்தல், வைசியர்கள் தர்மம் என்ற ஒரு பக்கமும், மாடு மேய்த்தல் வைசியர் தர்மம் என்ற மற்றொரு பக்கத்திலும், உழவு செய்தல் வைசிய தர்மம் என்று மற்றொரு பக்கத்திலுமாக ஆரிய நூல்களில் உளறிக் கொட்டி இருக்கிறது. இதில் எதை மகாத்மா ஒப்புக் கொள்ளுகிறாரோ அதைப் பற்றி நமக்கு கவலையில்லாவிட்டாலும் இந்த தொழிலுக்கு ஒரு தனி பிறப்பு வருணம் எதற்காக ஒதுக்கி வைக்க வேண்டும். இவைகளை எப்படி ஒதுக்கி வைக்க முடியும் மற்றவர் ஏன் செய்யக்கூடாது. அதுபோலவே சூத்திரர் என்பவர்களுக்கும் என்ன என்னமோ தர்மம் சொல்லுவதானாலும் குறிப்பாய் அடிமைத்தனத்தையும், பிராமண வர்ணத் தானுக்கு வைப்பாட்டி மகன் என்கிற தத்துவத்தையும் தான் சொல்லுகிறது. இதில் எதை மகாத்மா ஒப்புக் கொள்வதானாலும், இந்தக் காரியத்திற்கும் ஒரு தனி வருணம் எதற்கு என்றும், இந்த காரியங்கள் மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது என்றும் மற்றவர் செய்யாமல் இருக்க முடியுமா என்றும் தான் கேட்கிறோம். இப்படிப்பட்ட ஆபாசங்களை நம்ம தலையில் சுமத்தி யோக்கியன், அயோக்கியன் அடையாளம் தெரிவதற்கில்லாமல் மக்களைப் பிரித்துப் பாழ்படுத்தி இருக்கிற மதக்கொடுமையாலே தான் நமது நாட்டிற்கு சுபாவமாகவே விடுதலை கெட்டிருக்கிறதே அல்லாமல் வேறு அல்ல என்று பொருள்படும் படிக்கும் மற்றும் இதுபோலவே கடவுள், பக்தி, கோயில், சடங்கு முதலிய விஷயங்களில் நம்முடைய மூட கொள்கைகளையும், பார்ப்பனர்கள் கொடுமையையும் விரிவாக எடுத்துச் சொல்லி இவைகள் ஒழிவதுதான் சுயராஜ்யம் அளிக்க வல்லது என்றும் இதுவே அரசியல் என்பது என்றும், இதைத்தவிர வேறு விஷயங்களை அரசியல் என்றும், சுயராஜ்யம் என்றும் உரிமை என்றும், தேசீயமென்றும், பேசுவதல்லாம் வீண்புரட்டு என்றும் குறிப்புக் காட்டினார்.

குறிப்பு: ஸ்ரீமான் ராமசாமி நாடார் அவர்கள் தலைமையில் விருதுபட்டி பாண்டியன் மைதானத்தில் தற்கால நிலை என்னும் தலைப்பில் அரசியலும் சமூக இயலும் என்பது பற்றி ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 28.08.1927

You may also like...

Leave a Reply