தஞ்சை ஜில்லா பிரசாரம்
அச்சுயமரியாதை அடையவே இப்போது நாம் ஆங்காங்கு பார்ப்பன ரல்லாதார் சங்கம் என்பதாகவும், பார்ப்பனரல்லாதார் வாலிபர் சங்கம் என்ப தாகவும் ஏற்பாடு செய்து வருகிறோம். வகுப்புப் பெயரால் ஏன் சங்கத்தை நிறுவ வேண்டும்? என சிலர் கேட்கலாம். நமது நாட்டில் வகுப்புகள் இருந்து வருவதை யாவரும் மறைக்க முடியாது. ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் வகுப்புக்கு என சங்கங்கள் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பாருக்கும் பொதுக் குறைகள் பலவும் மற்ற வகுப்பார்களால் சில குறைகளும் இருந்து கொண்டுதான் வருகிறது. அவற்றை நிவர்த்தித்துக் கொள்ள அந்தந்த வகுப்பார் தனித்தனியாய் முயற்சித்துத் தான் ஆக வேண்டும். நமது குறையை மற்றொரு வகுப்பார் நிவர்த்திப்பார்கள் என்று எண்ணுவதற்கு போதிய நிலைமை இன்னமும் ஏற்படவில்லை. நமது குறையை மற்ற வகுப்பார் நிவர்த்திப்பார்கள் என்று எண்ணுவதற்கு முன் அந்த மற்ற வகுப்பாரால் நாம் கொடுமை செய்யப்படாமலும் குறைகளுண்டு பண்ணப்படாமலும் இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். நமக்கு இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் குறைகளில் பெரும்பகுதி மற்ற வகுப்பார்களாலேயே இருந்து வருகிறதேயல்லாமல் இயற்கையானதல்ல. ஆதலால் அக் குறைகளை நிவர்த்தித்துக் கொள்ள ஏற்படுத்தும் இயக்கங்கள் வகுப்புப் பெயர்களுடன்தான் ஏற்படுத்தப்படும். இதில் “ஏன் பார்ப்பனர் களை மாத்திரம் விலக்க வேண்டும்” என்பதாக சிலர் கேட்கக்கூடும். நாம் அவர்களை ஒருபோதும் விலக்கவேயில்லை; அவர்களால் நாம் விலக்கப் பட்டிருக்கிறோம். அவர்கள் தங்களை மாத்திரம் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு தனியாகப் பிரிந்து மற்றவர்களை யெல்லாம் தாழ்ந்தவர் களென்று சொல்லி அநேக முறைகளில் சமத்துவம் அளிக்க மறுத்து நம்மை விலக்கி வைத்துக்கொண்டு வருகிறார்கள். நித்தியப்படி வாழ்வில் இதைப் பார்த்து வருகிறோம். ஆதலால் அக்குறைகளை நிவர்த்தித்துக் கொள்ள வேண்டுமானால் அவர்களை நீக்கித்தான் நாம் சங்கம் ஸ்தாபிக்க முடியும். நமக்கு சமத்துவமளிக்க அவர்கள் சம்மதிப்பார்களேயானால் நமக்கென்று தனியாக பார்ப்பனர் நீங்கிய ஒரு சங்கம் தேவையில்லை. உடனே இவற்றை மூடியும் விடலாம். அவ்வித சமத்துவம் ஏற்படும் வரை இப்படி ஒன்று இருந்துதான் தீரும். அது பார்ப்பனருக்கும் நமக்கும் மாத்திரம் அல்ல; இன்னும் நம்மால் யாருக்காவது சமத்துவமளிக்க இடையூறு ஏற்படுமானால் அவர்களும் நம்மை நீக்கித்தான் சங்கம் ஸ்தாபித்துக் கொள்வார்கள். இவ்வித குறைகள் உள்ளவரை ஒருவரையொருவர் நீக்கி சங்கம் ஸ்தாபித்து நடந்து கொண்டுதான் இருக்கும். இதனாலேயே ஒரு வகுப்பாரிடம்ஒருவகுப்பாருக்கு துவேஷம் என்று சொல்லிவிடமுடியாது. பஞ்சாப் அட்டூழியங்களைப் பற்றி மகாத்மா எடுத்துச்சொல்லி அதற்குப் பரிகாரம் தேடுவதற்காக அரசாங்கத்தாருடன் ஒத்துழையாமை செய்தது அரசாங்கத் துரோகமாகுமா? அல்லது வெள்ளைக்காரரிடம் துவேஷமாகுமா? ஒரு பார்ப்பனர் ஒத்துழை யாமையை அரசாங்கத் துரோகம் என்று சொல்லியும் கூட அரசாங்கத்தார் அதை ஒப்புக்கொள்ளாமல் பரிகாரம் தேடிக்கொள்ள நமக்கு உரிமை உண்டு என்று சொல்லிவிட்டார்கள். அப்படிக்கிருக்க நமது சமத்துவத்திற்காக அது வும் நமது சுயமரியாதையைப் பாதிக்கும் விஷயத்தை ஒழிப்பதற்காகச் செய்யும் பிரயத்தனங்கள் ஒருக்காலும் மற்றொரு வகுப்பாரிடம் துவேஷம் என்று சொல்லவே முடியாது. உதாரணமாக நமது வீட்டில் கொசுக்களின் உபத்திரவம் அதிகம் என்பதாக வைத்துக் கொள்ளுவோம். கொசுக்கடிக்கு பயந்துகொண்டு நாம் கொசுவலை போட்டுப் படுத்துக்கொண்டால் அது கொசு வுக்குத் துரோகம் செய்ததாகுமா? கொசுக்கள் எல்லாம் கூடிக்கொண்டு கொசு வாதம், கொசுத் துவேஷம் என்று சத்தம் போட ஆரம்பித்தால் கொசுவுக்குப் பயந்துகொண்டு கொசுவலையை எடுத்தெறிந்துவிட்டு கொசுக்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி நமக்கு வியாதியை உண்டாக்கும்படி நாம் தடிக் கட்டை யாய்ப் படுத்துக்கொள்ளுவதா? ஒருவர் தன் சொத்தைப் பாதுகாத்துக் கொள்ள நினைத்தால் அச்சொத்தைக் கொள்ளையடிக்க காத்திருப்பவனுக்கு கஷ்டமாகத்தான் தோன்றும். நமது வீட்டில் திருடலாம் என்று நினைத்திருப் பவனுக்கு நாம் கதவை தாழிட்டுக்கொண்டு பத்திரமாய்ப் படுத்திருப்பது துரோகமாய்க் கூட தோன்றலாம். ஒரு சமயம் இதனால் அத்திருடன் குடும்பம் பட்டினி கிடக்கவும் நேரிடலாம். அதற்காக நாம் பயந்துகொண்டோ, பரிதாபப் பட்டுக் கொண்டோ, கதவைத் திறந்து போட்டுக் கொண்டு படுத்துக் கொள்ள வேண்டுமா? கொஞ்ச காலத்திற்கு நாம் பந்தோபஸ்தாயிருந் தோமானால் திருடன் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்து வீட்டுக்குப் போய் பட்டினி கிடப்பானானால் பிறகு தானாகவே இந்தத் தொழில் இனி நமக்கு பிரயோஜனப் படாது என்பதாகக் கருதி வேறு ஏதாவது ஒரு யோக்ய மான தொழிலில் ஈடுபட்டு யோக்யமாகப் பிழைக்கக் கற்றுக் கொள்வான். ஆதலால் நாம் ஜாக்கிரதையாய் இருப்பதன் மூலம் நமது சொத்து பாது காக்கப்படுவதன் மூலம், திருடனும் யோக்கியனாவதற்கு மார்க்கம் ஏற்படு கிறது. ஆகையால் இம்மாதிரி சங்கங்கள் ஏற்படுத்துவதையோ, நமது சுய மரியாதையையும் சமத்துவத்தையும் வேறு ஒருவனுக்கு பறிகொடுக்காமல் காப்பாற்ற முயலுவதினாலேயே எந்த விதத்திலும் யாருக்கும் துரோகம் செய்தவர்களாக மாட்டோம். யாரிடமும் துவேஷமுள்ளவர்களுமாக மாட் டோம். மற்றொருவர் அப்படிச் சொல்லுவார்களே என்று நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆதலால் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், இவ்வித சங்கங்கள் ஏற்பட்டு மும்முரமாக வேலை செய்ய வேண்டும். வாலி பர்களே பெரும்பாலும் இக் காரியங்களில் ஈடுபட்டு உழைக்க வேண்டும். சுயமரியாதையையும் சமத்துவத்தையும்விட நமக்கு வேறு பெரிய காரியம் வேண்டுவதில்லை. சுயமரியாதையும் சமத்துவமும் அற்ற ஜனசமூகம் அரசியலைப்பற்றி பேசுவதென்றால் அது வெறும் மடமையும், புரட்டும், வயிற்றுப் பிழைப்பு மல்லாமல் வேறல்ல. நமது வாலிபர்கள் அரசியல் என்னும் பெயரால் ஏமாந்து போகிறார்கள். அரசியல் என்கிற தொத்து வியா திக்கு பலியாகாமல் நமது வாலிபர்களைக் காப்பாற்ற வேண்டும். அரசியல் என்பது யோக்கியப் பொறுப்புள்ளதானால் மகாத்மா அரசியலை வெறுப்பாரா என்பதை யோசித்துப் பாருங்கள். மகாத்மாவுக்கு மிஞ்சின தேச பக்தி நமது அரசியல் புரட்டுக்காரர்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அரசி யல் ஸ்தாபனம் என்னும் காங்கிரசை மகாத்மா கைப்பற்றிப் பார்த்துத்தான் அதில் உண்மையான அரசியல் வாதம் இல்லையென்பதும், புரட்டானதும், ஒருவரை ஒருவர் ஏமாற்றி தன்னலம் பெறுவதும், தன் வயிற்றுப் பிழைப்பான துமான காரியமாயிருக்கிற தென்பதையும் உண்மையான அரசியல் விடுத லைக்கு ஒரு கூட்டத்தார் எதிரிகளாயிருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து தான் தன் ஆதிக்கத்தை விலக்கிக் கொண்டார். அப்படி இருக்க யாரோ நாலு கத்துக்குட்டிகள் சப்தம் போடுவதற்காக நாம் ஏமாந்து போகக்கூடாது. நமது சுயமரியாதைக்கும் சமத்துவத்திற்கும், தற்கால காங்கிரசும் அரசியல் முறை களும் எமன் என்பதை மறந்துவிடாதீர்கள். அதோடு மாத்திரமல்ல, தேசத் திற்கே பெரிய ஆபத்தான மார்க்கம் என்பதையும் மறந்துவிடாதீர்கள். உண்மை யான அரசியல் விடுதலைக்கும், நமது சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும், கண்டிப்பாய் இப்போதைய காங்கிரசில் வழியில்லை. மகாத்மாவின் நிர்மாணத் திட்டத்தை காங்கிரஸ் மூலம் நிறைவேற் றிக்கொள்ள பார்ப்பனர்களும், அரசியலில் வயிறு வளர்ப்பவர்களும் ஒருக்காலும் சம்மதிக்கவே மாட்டார் கள். கவனித்துப் பார்ப்பீர்களானால் மகாத்மாவின் நிர்மாணத் திட்டம் பார்ப்பனர்களுக்கு பெருத்த எதிரியாக இருக்கும். அதாவது தீண்டாமை ஒழிந்துவிட்டால் பார்ப்பனர்களுக்கு நமது நாட்டில் இடம் இருக்குமா என்பதை நன்றாய் யோசித்துப் பாருங்கள். பார்ப்பனர்க ளுக்கு இப்போது நமது நாட்டில் இருக்கும் யோக்கியதை எதனால்? அவர்கள் ஒழுக்கத்தாலா? நல்லறிவினாலா? கஷ்டப்படும் தன்மையினாலா? இவை ஒன்றிலும் அல்ல. நம்மைத் தாழ்ந்தவர்களென்றும், தீண்டாதவர்களென்றும் சொல்லிக்கொண்டி ருப்பதும், தாங்கள் உயர்ந்த ஜாதியாரென்றும், மற்றவர்க ளுக்கு மோட்சம் கொடுக்க யோக்கியதை உள்ளவர்கள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் புரட்டுகளினாலும், தந்திரங்களினாலு மல்லாமல் வேறென்ன? இந்த தத்துவம் ஒழிந்து விட்டால் பார்ப்பனர் நமது நாட்டில் இப்போது இருப்பதுபோல் வாழ முடியுமா? ஆதலால் பார்ப்பனர்கள் தீண்டாமை ஒழியவும் சமத்துவத்திற்கும் கண்டிப்பாய் சம்மதிக்க மாட்டார்கள். மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று சொன்னவுடன் “பறையன் வீட்டிலும் சாப்பிடுவேன். நாயக்கர் வீட்டிலும் சாப்பிடுவேன்” என்று சொல்லிக்கொண்டிருந்த ஸ்ரீமான் ராஜ கோபாலாச்சாரியேதான் தனது சிஷ்ய கோடிகளுடன் ராஜினாமா கொடுத்து விட்டுப் போய்விட்டார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? “காங்கிரஸ் தலைவர்” ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்காரே “தீண்டாமை அரசியலில் கலக்கக்கூடாது” என்று சொல்லும் போது மற்ற பார்ப்பனர்கள் அரசியல் சபையில் தீண்டாமை ஒழிக்க உடந்தையாயி ருப்பார்களா? தவிர மதுவிலக்கைப் பற்றியோ வென்றால் அதற்கும் நமது பார்ப்பனர்கள் சம்மதிக்க முடியாது. நமது நாட்டில் மதுபானம் ஒழிந்து விட்டால் பெரும்பாலும் படித்த பார்ப்பனர்கள் தங்கள் வீட்டின் முன்புறம் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் வக்கீல் போர்டு பலகைகளைத் திருப்பி காப்பி ஓட்டல்கடை போர்டுகளாக மாற்றிக் கொண்டும், பிச்சையும் தூது போகும் வழிகளில் தான் வயிறு வளர்க்க வேண்டிவரும். சர்க்கார் உத்தி யோகத்திலுள்ள பார்ப்பனர்களுக்கும் அநேகமாய் இந்த கதியேதான் வரும். ஆதலால் குடியை ஒழிப்பதற்கு பார்ப்பனர்கள் மனதோடு கூடி சம்மதிக்க முடியாது. அப்படி மது விலக்குக்கு உண்மையாய்ப் பாடுபடுபவர்களா யிருந் தால் கள் உற்பத்தியில் பணம் சம்பாதிக்கும் ஸ்ரீமான் சி.வி. வெங்கட ரமணய் யங்காருக்கும் சாராயம் விற்று விளம்பரம் செய்யும் ஸ்ரீமான் ஏ. ரங்கசாமி அய்யங்காருக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச் சாரியார் பிரசாரம் செய்வாரா? கள்ளை நிறுத்தப் பாடுபடுவதாய் பறை அடித்துக் கொண்டும் மகாத்மாவிடம் நற்சாட்சி பத்திரம் வாங்கி வைத்துக் கொண்டுமிருக்கும் ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியாரின் மதுவிலக்கு பிரசாரமே இப்படியிருக்குமானால் மற்ற பார்ப்பனர்களின் மதுவிலக்கு பிரசாரம் உண்மையாயிருக்குமா? கதர் விஷயமும் பார்ப்பனர் கவலை கொள்ள இடமே இல்லை. நாட்டில் தரித்திரத்தால் கஷ்டப்பட்டு பட்டினி கிடந்து சாவது பார்ப்பனரல்லாதாரே தவிர பார்ப்பனர்கள் ஒருவராவது பட்டினி கிடக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. அவர்கள் ஒவ்வொரு வரும் தங்கள் யோக்கியதைக்கு மேல் வாழுவதோடு மற்றவன் பட்டினி கிடந்து கொண்டானாலும் தனக்கு கொடுத்து விடவேண்டும் என்பதாக பல வழிகளிலும் மார்க்கத்தைத் தேடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெண்கள் எந்த வகையிலும் குறைவில்லாமல் இருக்கும் படியான நிலைமை ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். முனிசீபு கோர்ட்டில் பியூனாக வோ சம்மன் சர்வு செய்பவனாகவோ இருந்தாலும் கூட அவன் மகள் ஆர்மோனியம் வாசிக்கும் படியான செல்வாக்கு பெற்றிருக்கிறாள். இப்ப டிக்கு எல்லாம் இல்லா விட்டாலும் பிச்சை எடுப்பதையும் குலத்தொழிலாகக் கொண்டிருப்பதாலும் அவனுக்கு கொடுப்பதே நமக்கு புண்ணியம் என்று கற்பித்து வைத்திருப்பதாலும் எவ்வழியிலும் அவர்களுக்கு பட்டினிக்கு மார்க்கமில்லை. ஆதலால் பட்டினி கிடப்பவர்கள் பார்ப்பனரல்லாதாரே தவிர வேறில்லை. பார்ப்பனரல்லாதார் பட்டினி கிடக்காமல் சுகமாய் வாழக் கூடிய நிலைமை ஏற்பட்டால் பார்ப்பனருக்கு அது கஷ்டமாகக்கூடத்தான் இருக்கும். ஏனெனில் பார்ப்பனர்களுக்கு வேலை செய்யச் சூத்திரச்சி அகப்ப டமாட்டாள் என்கிற கவலை ஏற்படலாம். ஆகவே நிர்மாணத் திட்டம் காங்கிரஸ் மூலமாய் நிறைவேற கண்டிப்பாய் பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். இவற்றை நான் 5 வருஷம் சந்தேகமற அனுபவத்தில் கண்ட பிறகே பார்ப்பனரல்லாதார்களைக் கொண்டே தான் நிர்மாணத் திட்டம் நிறைவேற்ற முடியும் என்கிற முடிவின்மேல் பார்ப்பன ரல்லாதார் சங்கத்தைப் பிடித்திருக்கிறேன். இந்நிர்மாணத் திட்டத்தில் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை, சமத்துவம், விடுதலை, உண்மையான சுயராஜ்யம் ஆகிய எல்லாம் அடங்கிக் கிடக்கிறது. இதை நிறைவேற்றச் செய்வதற்குத்தான் ஆங்காங்கு பார்ப்பனரல்லாதார் சங்கமும், பார்ப்பனரல் லாதார் வாலிபர் சங்கமும், பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைச் சங்கமும் ஆகியவைகள் ஏற்படுத்தப்படுவதே அல்லாமல் சில பார்ப்பனர்களும் வயிற்றுச் சோத்து தேச பக்தர்களும் அரசியல் பெயரைச் சொல்லாமல், வாழ யோக்கியதை இல்லாதவர்களும் சொல்லிக்கொண்டு திரிவது போன்ற உத்தியோக ஆசை பிடித்தோ குலாம் தனத்தில் ஆசை கொண்டோ சுயநல வாழ்க்கை நடத்தவோ அல்ல என்பதைக் கண்டிப்பாய் சொல்லுகிறேன். தவிரவும் உத்தியோக ஆசை யாருக்காவது இருக்குமானாலும் அரசியலின் மூலம் பிழைக்க வேண்டுமானாலும் அவர்கள் தாராளமாய் காங்கிரசுக்கு போங்கள். காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாகி அவர்கள் வாலைப் பிடித்துத்திரியுங்கள்! ஏதோ அவர்கள் தின்று மீதியான எச்சிலையை உங்களுக்கும் கொடுப்பார்கள், சில சமயத்தில் அவர்களுக்கு எட்டாததை உங்களுக்கு காட்டுவார்கள். ஆதலால் அந்த எண்ணத்தோடு இச்சங்கத்தில் யாரும் சேராதீர்களென்று கேட்டுக்கொள்ளுகிறேன். தவிரவும் இச்சங்கத்தில் உள்ள வாலிபர்கள் எல்லாவற்றிற்கும் துணிந்தவர்களாகத் தானிருக்க வேண்டும். சத்தியாக்கிரகமோ, சட்ட மறுப்போ, அடக்கு முறையோ ஏற்பட் டால் மார்பைக் கொடுக்கக் கூடியவர்களாகவே இருக்க வேண்டும். இக் காரியங்களுக்கு பெரியோர்கள் என்பவர்களை எதிர்பார்ப்பது வீணான காரியம் என்பது எனக்குத் தெரியும். ஆதலால்தான் வாலிபர்களாகிய உங்க ளைக் கேட்டுக் கொள்ளுகிறேன். பட்டாளம், பீரங்கி, துப்பாக்கி, ஆகாசக் கப்பல், வெடிகுண்டு இவைகளைக் கொண்ட சர்க்காரையே லட்சியம் செய்யா மல் நமது மனச்சாக்ஷியையே மதித்து நடந்த நாம் நமது சுயமரியாதைக்காக நமது மனச்சாக்ஷியை மதித்து நடப்பது முடியாத காரியமல்ல. ஆகையால் நமது வாலிபர் சங்கம் எப்போதும் தயாராயிருக்க வேண்டும். அழகுக்கும், பெருமைக்கும், சுயநலத்திற்கும் ஏற்பட்ட சங்கமல்லவென்பதையும், உயிரைக் கொடுத்தாகிலும் சுயமரியாதையை அடையத்தக்க சங்கமென்ப தையும் நன்றாய் உங்கள் மனதிலிருத்துங்கள். அப்படிப்பட்டவர்களே வாருங்கள்! நீங்கள் கொஞ்சமாக இருந்தாலும் நமக்கு கவலையில்லை. பெரிய சீர்திருத்தங்களோ கிளர்ச்சிகளோ ஏற்படுகிற காலத்தில் தைரியவான்களும் பொறுமையும் தியாககுணமும் உள்ளவர்களுமே நமக்கு வேண்டும். குடும்ப கவலை உள்ளவர்கள் இதில் அதிகமாய் கலந்து கொள்ளா தீர்கள். உங்கள் உண்மையான முன்னேற்றத்தையும் சுதந்திரத்தையும், ஆண்மையையும், திடத்தையும் குடும்பக் கவலைகளே கெடுத்து விடுகின்றன. சுதந்தர மனிதன் குடும்ப வாழ்க்கையில் பிரவேசித்தவுடன் குடும்பத்தைக் காப்பாற்றவே பிறந்ததாகவும் அதற்காகவே வாழவேண்டியவனாகவும் ஏற்பட்டு சுய மரியாதை, ஆண்மை, மனச்சாக்ஷி எல்லாவற்றை யும் இழந்துவிடுகிறான். அநேகமாகவே குடும்பி என்று சொல்வதற்கே ஆண்மை, சுயமரியாதை, மானம், மனச்சாக்ஷி அற்றவன் என்பதுதான் தத்து வார்த்தம். ஆதலால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாத வாலிபர்கள் நமது சுயமரியாதைக்கு மிகுதியும் வேண்டியவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் முதலில் ஒழுக்கத்தையே பயில வேண்டும்; பிறகு தன்னலத்தை மறுக்க வேண்டும்; சேவைக்காக இருப்ப தாய்க் கருதவேண்டும். இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு கலங்கரை விளக்கங் (லைட் அவுஸ்)களாவார்கள். இப்படிப் பட்ட உண்மையான வாலிபர்களைக் கொண்ட சமூகம் ஒரு வினாடி யாவது சுயமரியாதையும் சமத்துவமும் சுதந்திரமுமடையாமல் இருக்க முடியாது.
ஆதலால் வாலிபர்களே! உங்களையே பெரிதும் நம்பி இருப்பதால் நீங்கள் முன்வர வேண்டும். பெரியோர்களாயிருப்பவர்களும் பல காரணங் களால் தாங்கள் முன்வர யோக்கியதையற்றவர்களாயிருந்தாலும் வாலிபர் களையாவது தடுக்காமல் இருக்க வேண்டுகிறேன் என்றும் பேசியதோடு மற்றும் கதர் அணிய வேண்டியதின் அவசியத்தைப் பற்றியும் மதச்சடங்கு. கோவில் முதலிய காரியங்களில் பார்ப்பனரைக் கொண்டுதான் நடத்த வேண்டும் என்கிற மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும்.
( தஞ்சை ஜில்லா பிரசாரம் 30.1.27 குடி அரசு இதழ் தொடர்ச்சி )
குடி அரசு – சொற்பொழிவு – 06.02.1927