வினாக்கள்… விடைகள்…
ட இந்தியாவில் 90 சதவீதம் பேர் முட்டாள்கள் என்று கூறியதற்காக சிலரின் மனம் புண்பட்டிருப்பதால், மன்னிப்புக் கோருகிறேன். – நீதிபதி கட்ஜு
இந்தியாவில் 10 சதவீதம் பேர் அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தால் கைதட்டி பாராட்டிருப்பார்கள்.
ட தமிழகத்தில் 35 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மணியாச்சி காவல்துறை அதிகாரிக்கு இலங்கையி லிருந்து ‘மர்ம நபர்’ தமிழில் பேசினார். – போலீசார் எச்சரிக்கை
தொலைபேசியில் பேசிய மர்ம நபர் யார் என்பதைக் கண்டுபிடிக்க காவல் துறை எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? அந்த மர்மத்தை காவல் துறை விளக்குமா?
ட தர்மபுரியில் அதிக மதிப் பெண் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க திருமண மண்டபத்தில் நடக்கவிருந்த விழாவுக்கு 144 தடை உத்தரவை காரணம் காட்டி, காவல் துறை அனுமதி மறுத்து, மாணவ மாணவிகளை வெளியேற்றியது. – செய்தி
திருமண மண்டபங்களில் திருமணங் களாவது நடத்தலாமா?
ட பெரம்பலூர், புதுச்சேரியில் சத்துண வில் பல்லி விழுந்ததால் மாணவர்கள் மயக்கம். – செய்தி
இப்படி அடிக்கடி சத்துணவில் வந்து விழும் பல்லிகளுக்கு கடுந்தண்டனை வழங்கும் பிரிவுகளை உணவு பாது காப்புச் சட்டத்தில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் இந்த பல்லிகள் கொட்டம் அடங்கும்!
ட நாடாளுமன்றம் ஒரே நாளில் 3 முறை ஒத்தி வைப்பு. – செய்தி
பேசாமல், மழைக்காலக் கூட்டத் தொடர் என்பதை ‘ஒத்தி வைப்புக் கூட்டத் தொடர்’ என்று பெயரை மாற்றி விடுங்கள்!
ட இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக் கணிக்க வலியுறுத்தி தமிழகம் முழுதும் பா.ஜ.க. போராட்டம். – பா.ஜ.க. தலைவர் பொன் இராதாகிருஷ்ணன்
இந்த சர்வதேசப் பிரச்சினையில் அகில இந்திய கட்சியான நீங்கள், ஏன் தமிழகத்தில் மட்டும் போராட வேண்டும்? மோடி வழியாக இந்தப் பிரச்சினையை இந்தியா முழுதும் கொண்டு செல்ல முடியாதா?
ட இலங்கை நட்பு நாடா? பகை நாடா? தி.மு.க. – காங்கிரஸ் மோதல். – செய்தி
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இந்தியா தமிழர்களின் பகை நாடு என்பது மட்டும் உறுதி!
ட நாங்கள் நடத்தும் அயோத்தி யாத் திரை ஆன்மிக யாத்திரை; அரசியல் யாத்திரையல்ல. இதற்கு தடை விதித்ததைக் கண்டித்து, நாடு முழுதும் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும். – விசுவ இந்து பரிஷத் தலைவர் தொக்கடியா
இந்தத் தலைநகர்ப் போராட்டம் ஆன்மிகமா? அரசியலா? அல்லது ஆன்மிக அரசியலா? அரசியல் ஆன்மிகமா? ஏதாவது புரியும்படி பேசுங்க ‘ஜி’!