சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி
ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக் கணக்கான வருஷங்களாக பல பெரியார்களும் பல இயக்கங்களும் அவ்வப் போது தோன்றி மக்களுக்கு உணர்ச்சி அளித்து வந்த சமயங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சிகளால் அவைகள் ஒழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருப்பதற்கு எத்தனையோ கதைகளும் சரித்திரக் குறிப்புகளுமிருக் கின்றன. அது போலவே தற்காலம் நமது நாட்டில் தோன்றியிருக்கும் சுய மரியாதை உணர்ச்சியையும் அழிப்பதற்கு பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள். அச்சூழ்ச்சிகளில் சர். சிவசாமி அய்யர் என்கிற ஒரு வக்கீல் பார்ப்பனர் கண்டு பிடித்து இருக்கிற சூழ்ச்சி மிகப்பெரிய சூழ்ச்சி யாகும். இந்த மாதிரி சூழ்ச்சிகளேதான் இப்பார்ப்பனர்களின் பெரியோர்களான வேதகாலம், மனுதர்ம சாஸ்திர காலம் முதலிய காலத்துப் பார்ப்பனர்களும் செய்து வந்திருக்கிறதாக அந்த வேதங்களும், சாஸ்திரங்களுமே ருஜுப்பிக் கின்றன. இது போலவே தற்கால மனுக்களில் ஒரு பழம் பெருச்சாளி மனுவாகிய மேல்கண்ட சர்.பி. சிவசாமி அய்யர் என்பவர் ஒரு மனுதர்ம சாஸ்திரத்தை உண்டாக்க சர்க்காரை வேண்டிக்கொள்ளுகிறார். அதாவது இந்தியன் பீனல் கோடில் மத சம்மந்தமான குற்றம் செய்பவர்களை தண்டிப்ப தற்கு என்று ஏற்படுத்தப்பட்ட 295, 297, 298 – வது பிரிவுகளில் மத ஸ்தாபகரை தூஷிப்பவர்களை தண்டிக்க இடமில்லை. ஆதலால் 203 -வது பிரிவுக்குப் பிறகு புதிதாக ஒரு பிரிவைச் சேர்க்க வேண்டும் என்றும், அதாவது,
‘எந்த வகுப்பாரின் மனதையாவது புண்படுத்தும் வண்ணம் ஒரு மத ஸ்தாபகரையோ தெய்வத்தையோ குருமார்களையோ அவதார புருஷர் களையோ தூஷித்தாலும் அல்லது பத்திரிகையில் எழுதினாலும் அப்படிப் பட்டவருக்கு 2 வருஷ தண்டனை விதிக்க வேண்டும்.’
என்பதாக ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று யோசனை சொல்லுகிறார். இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்பட்டு விட்டால் மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களை யாரும் அசைக்க முடியாது என்பது அவர்களது சூழ்ச்சியின் கருத்து என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தக் கருத்தை ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையும் ஜாடையாக அநேக தடவை எழுதி வந்திருக்கிறது. ஆனாலும் இப்போதுதான் ஒரு சட்ட ஞான முள்ள பொறுப்பான மனிதரால் சட்டம் செய்ய வேண்டிய வாசகங்களுடன் வெளியாயிருக்கிறது. சர். சிவசாமி அய்யர் சட்டம் கற்று, சுமார் 35 வருஷம் ஆகியும், சட்டத்திற்கு வியாக்யானம் செய்து ஜீவிப்பதிலேயே காலங்கடத்தி வந்தும், இதுவரை இக்குறையைப் பற்றி ஞாபகம் வராமல், இப்போது சுயமரியாதைக் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு இவை ஞாபகத்திற்கு வந்திருப்பதின் பொருள் என்ன என்பது இவை வாசிப்பவர்களுக்கு விளங்காமல்போகாது.
இதே சர். சிவசாமி அய்யரின் கருத்தைத்தான் சென்ற வருடம் ஸ்ரீமான். எஸ். சீனிவாசய்யங்கார் தெரிவித்தார். அதாவது:- “வகுப்புத் துவேஷத்தைக் கிளப்பும் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை இன்னம் ஜெயிலில் போடாமல் வெளி யில் விட்டுக்கொண்டிருப்பதற்கு சர்க்காருக்கு கண்ணில்லையா? அட்வொ கெட் ஜனரல் இதை கவனியாமல் என்ன செய்கிறார்” என்று கேட்டார். இதே கருத்தைத் தான் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி மற்றொரு வழியில் வெளியிட்டார். அதாவது:- “பம்பாய் மாகாணத்து கல்வி மந்திரி ஸ்ரீமான் யாதவர் சென்னை மாகாணத்திற்கு வந்து வகுப்பு துவேஷத்தை உண்டாக்கி விட்டு போவதை சட்ட மெம்பர் சர்.சி.பி. ராமசாமி அய்யர் எப்படி பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கு யாதவரை தண்டிக்க தைரியமில்லாவிட்டால் தான் ராஜீனாமா கொடுத்து விட்டு வேறு ஒருவரைக் கொண்டாவது ஏன் செய்திருக்கக்கூடாது” என்று கேட்டார். “சுயராஜ்ஜியா”, “சுதேசமித்திரன்”, “பிராமணன்” முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளும் “கேள்வி முறை இல்லையா? இப்படி அக் கிரமங்களை சகித்துக் கொண்டிருக்கலாமா? பிராமணத் தலைவர்கள் இதைப் பற்றி கவனிப்பதில்லையா” என்று மாரடித்துக்கொண்டன. இவைகள் எல்லாம் கவனிக்கப்படா விட்டாலும் சர். சிவசாமி அய்யரின் அழுகை கட்டாயம் கவனிக்கப்பட்டு அந்தப்படி ஒரு சட்டம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.
நாம் அவைகளுக்குப் பயந்து கொண்டு அயோக்கியர்களின் செய்கை களையும், சூழ்ச்சிகளையும், அக்கிரமங்களையும், மனிதப் பிறப்புரிமைக்கும், மனிதத்தத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் இடையூறு விளைவிக்கும் காரியங்களையும் வெளிப்படுத்தாமலிருக்கப் போவதில்லை. பிறப்புரிமை யான சுயமரியாதையானது சூழ்ச்சிக்காரர்களால், வஞ்சகர்களால் செய்யப் படும் சட்டங்களுக்கு அடங்கிவிடும் என்று எதிர்ப்பார்ப்பது மடமையே யாகும்.
சாதாரணமாக, இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை யுடையது அல்ல என்பதையும், அது ஒரு பழமையான மதம் அல்ல என்பதையும், பல பெரியோர்களும் அறிஞர்களும், ஆராய்ச்சிக்காரர்களும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இனி சட்டம் என்ன செய்து விட முடியும்.
எவ்வளவோ பிரத்தியக்ஷ ஆதாரங்களுடனும் அநேக நன்மையான கொள்கையுடனும் விளங்கும் கிருஸ்தவ மதத்தைப் பற்றியே பேசும்போது, கிருஸ்துநாதர் என்பதாக ஒருவர் பிறக்கவே இல்லையென்று ஒருவர் புஸ்தகமே எழுதியிருப்பது குற்றமில்லாமல் இருக்கும்போது, அஸ்திவாரத் திலிருந்தே அண்டப்புளுகையுடையதான இந்து மதத்தைப் பற்றி பேசுவதும், கள்ளு, சாராயம், மாம்சம், பெண் கூத்தி முதலியவைகளை வைத்துப் படைக்க வேண்டிய தெய்வங்களையும், தன்னைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிற மத ஸ்தாபகரையும், ஊரைக் கொள்ளைடித்து ஒரு கூட்டத்தாருக்கே வயிறு புடைக்கத் தின்னும்படி பொங்கிப் போட்டுவிட்டு தான் பஞ்சு மெத்தையில் உறங்கிக்கொண்டும், தங்கப் பல்லக்கில் உலவிக் கொண்டும், தன்னை சன்னியாசி என்றும் துறவி என்றும் சொல்லிக் கொண்டும் திரியும் போலி குருமார்கள் என்போர்களையும் வெளிப்படுத்தினால் அது எப்படி குற்றமாகு மென்பது நமக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆசாமிகளை வெளிப்ப டுத்துவதன் மூலம் இவர்களால் வயிறு வளர்க்கும் ஆசாமிகளுக்கு மனம் புண்ணாவதோடு வயிறு கூட பட்டினியால் வருந்த நேரிடலாம். அதற்கு யார் என்ன செய்யக்கூடும். சோம்பேறித் தனத்தையும் ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பதையும் விட்டு விட்டு யோக்கியமாய் பாடுபட்டு சம்பாதித்து தின்னும் படி மக்களை பழக்குவதுதான் இதற்கு பரிகாரமாகுமே தவிர சட்டத்தின் மூலம் இதை வெளிப்படுத்துகிறவரை 2 ´ தண்டிக்க வேண்டும் என்பது ஒருக்காலும் பரிகாரமாகாது. வேதம் கூட கடவுளால் சொல்லப்பட்டதென்று தான் சொல்லப்படுகிறது. வேதத்தைக் கண்டிப்பது தெய்வதூஷணை என்றுதான் சொல்லப்படுகிறது. இதற்காக அதன் அக்கிரமங்களை ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் வெளியிடாமலிருக்க முடியுமா? உதாரணமாக அதர்வண வேதத்தில் “ஒரு கிராமத்தில் ஒரு பிராமணன் ஒரு இரவு பெண் இல்லாமல் தனியாய் படுத்திருப்பானானால் அந்த கிராமத்திற்கே கேடு” என்பதாக எழுதப்பட்டிருக்கிறதாம். இதற்காக பயந்து கொண்டு எந்த திண்ணையில் எந்தப் பிராமணன் பக்கத்தில் பெண் இல்லாமல் தனியாய்ப் படுத்திருக்கிறான் என்று தேடிப் பார்த்து அவனிடம் ஒரு பெண்ணைக் கொண்டுபோய் படுக்க வைப்பதா? அல்லது சட்டத்திற்குப் பயப்படாமல் இது சுயநலக்கார வஞ்சகர்களால் எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதா என்பதை யோசித்தால் இச்சட்டத்தின் கதி என்ன ஆகும் என்பது விளங்காமல் போகாது.
எந்த மதஸ்தனானாலும் யாரானாலும் ஏதாவது ஒன்று தனக்கு மாத்திரம் தெய்வம் தனக்கு மாத்திரம் குரு என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வானானால் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. அவன் முட்டாள்தனத்துக்கு பரிதாபப்படுவதோடு அவ்விஷயம் தீர்ந்துவிடும். அப்படிக்கில்லாமல் தங்கள் நன்மைக்கு மாத்திரம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதை மற்றவர்கள் பிடரியின் பேரில் யேற்றுவதானால் அதை கண்டிக்காமலும் ஒழிக்காமலும் இருக்க முடியவே முடியாது என்பதை ஸ்ரீமான் சர்.சிவசாமி அய்யருக்கும் இதை வாசிப்பவருக்கும் சத்தியமூர்த்தி அய்யருக்கும் மித்திரன் கூட்டத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடி அரசு – கட்டுரை – 07.08.1927