மௌலானா மகம்மதலியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும்
ஸ்ரீமான் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் அவர்கள் சமீபத்தில் தனது பத்திரி கையில் “மௌலானா மகம்மதலி அவர்கள் மகாத்மா காந்தியுடன் கொஞ்சக் காலம் தேசீய நோக்கத்தோடு வேலை செய்த பிறகு மறுபடியும் தன்னுடைய பழைய குணப்படி ஹிந்து – முஸ்லீம் வேறுபாட்டைக் கருதுகிறார்” என்று எழுதியதற்கு விடையாக மௌலானா அவர்கள் எழுதிய கீழ்க்கண்ட பாகத்தை தமிழர்களுக்கு அறிவுருத்துகிறோம்.
“ வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமானது ஏட்டுச் சுறக்காய் அல்லவென்று ஸ்ரீமான் சாஸ்திரியாருக்கு நான் வெளிப்படையாய்ச் சொல்லுகிறேன். நம்முள் குறைந்த தொகுதியாயுள்ள வகுப்பாருக்கு நம்மிடத்திலுள்ள அவநம்பிக் கையும், நாம் முற்காலத்தில் செய்த அநீதிகளுடைய கர்ம பலனும்தான் இவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமென்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவநம்பிக்கை ஏற்படுகிற இடங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்தே தீர வேண்டும். ஸ்தல ஸ்தாபனங்களென்றாவது பள்ளிக்கூடங்க ளென்றாவது இக்கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது. ஆனால், இவ்வவநம்பிக்கை எவ்வளவு காலம் நீடித்திருக்க வேண்டுமென்பது பெரு வாரியான மற்ற சமூகங்களின் கையில்தானிருக்கிறது. முதலாவதாக ஹிந்துக் கள் தங்கள் மதத்தைச் சேர்ந்த தாழ்ந்த வகுப்பாரென்று கருதப்படுகின்றவர் களை மனிதர்களாகவும், சகோதரர்களாவும் நடத்தக் கற்றுக்கொள்ளட்டும். தேசீயத் திற்கு பெரும் பகையான ஜாதி என்னும் பேயை அவர்கள் அடியோடு ஓட்டட் டும். ஒரு முஸல்மானின் தாழ்ந்த நிலை தங்களுடைய தாழ்மைதான் என்று கருதி தேசீய முயற்சியினால் அத்தாழ்மை உயர்த்தப்பட வேண்டு மென்றும், ஹிந்துக்கள் மாத்திரம் முற்போக்கடையாமல் தேசமே முற்போக் கடைய வேண்டுமானால் ஹிந்துக்கள் இந்நோக்கத்துடன் பாடுபடவேண்டு மென்றும் அவர்கள் காட்டட்டும். அப்படிக் காட்டினால் ஒரு முஸல்மானாவது தனிப் பிரதிநிதித்துவம் கேட்கமாட்டானென்று ஸ்ரீமான் சாஸ்திரியாருக்கு உறுதி கூறுகிறேன்.”
ஸ்ரீமான் சாஸ்திரியாரும் மற்றும் சில ஹிந்து மக்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு ஒரு தடவை இடங் கொடுத்தால் அது எந்நாளும் மறையாமல் வளர்ந்து தேசீயத்தைக் கெடுக்கும் என்று சொல்லுகிறார்கள்.
ஆனால், சிறுபான்மையோருடைய அவநம்பிக்கையாலேற்பட்ட இவ் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அந்த அவ நம்பிக்கைக்குக் காரணமில்லை என்று ஹிந்துக்கள் வாக்கினாலல்லாது செய்கையினால் என்றைக்கு ரூபிக்கின் றார்களோ, அன்றே இவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மறைந்துவிடும். தங்கள் மதத்தினர்களுக்கு நன்மை தேடிக்கொண்ட ஹிந்துக்கள் படிப்பிலும் செல்வத்திலும் தாழ்மை அடைந்திருக்கும் முஸ்லீம்களுக்கு என்ன நன்மை செய்தார்களென்று தேடிப் பார்க்கட்டும். உண்மையில் ஹிந்துக்கள் தேசத்தை விட தங்கள் மதத்தையே முக்கியமாகக் கருதுகிறார்கள். மேலும் தங்கள் மதத்தையும் விட தங்கள் ஜாதியையே பிரதானமாகக் கருதுகிறார்களென்றும் சொல்லுவேன். நமது சாஸ்திரியாரின் இனத்தவர்கள் தங்களுடைய ஜாதி அபிமானத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் இவ் விஷயத்தில் மற்ற ஹிந்துக்களைப் போலவே நடந்து கொள்ளுகிறார்கள். நான் ஒரு ஹிந்துவாயிருந்து ஸ்ரீமான் சாஸ்திரியாரைப்போல் தேச ஊழியன் என்று பெயர் வைத்துக்கொண்டேனேயானால் இந்தியன் என்னும் முறையிலும் தேச ஊழியன் என்னும் முறையிலும் நமது தேசத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பி னர்க்கு ஊழியஞ்செய்து அவர்களை உயர்த்தவும், சிறு தொகையினரா கியவர்களை மற்ற சமூகத்தினரைப்போல் நல்ல ஸ்திதிக்கு கொண்டு வரப் பாடுபட்டும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவேன். ஒரு சங்கிலியின் பலம் அதில் பலம் குறைந்திருக்கும் ஒரு கொக்கியின் பலத்தைவிட அதிகமல்ல. இவ்வுண்மை ஹிந்து தலைவர்களில் அநேகருக்கு இன்னும் புலப்பட வில்லை. நமது ராஜீய வாழ்க்கையில் போட்டி பலத்திருக்கிறது. பலஹீனர் களை ஆதரிப்பாரில்லை. ஒரு ஹிந்து குடும்பத்தில் சரீர திடமுள்ளவன் தனக் காகவல்லாது அக் குடும்பத்தின் பலஹீனருக்காகவே பாடுபடுகிறான். இக் குலதர்மத்தை ஹிந்துக்கள் தங்கள் ராஜீய வாழ்க்கையிலும் நடத்தினால்தான் நன்மை பயக்கும்.
இப்பொழுது ஸ்ரீமான் சாஸ்திரியாருடைய மாகாணத்தில் பிராமண ரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை தழுவி நிற்கிறார்கள். முஸல் மான்களை மாத்திரம் குறைகூற இடமில்லை. முஸ்லீம்களுக்கு அநீதி வழங்கப்படும் வட இந்தியாவில், முஸ்லீம்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருவதும், பிராமணராதிக்கத்தினால் பிராமணரல்லாதாருக்கு அநீதி வழங்கப்படும் தென்னாட்டில் பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் கேட்பதுவும், இவ்வநீதிகளின் கர்மபலன்தானென்று சொல்ல வேண்டும். இவ்வுண்மையை எந்த ஹிந்துவாவது மறுக்க முடியுமாவென்று நான் கேட்கிறேன். ஜாதி வேறுபாடென்னும் அக்கிரமத்தைக் கையாண்டு தீண்டாமை, நெருங்காமை – என்னும் அநீதிகளை ரக்ஷித்து வரும் ஒரு சமூகத்தார் தாங்களிழைக்கும் குற்றங்களைத் திருத்தாமல் தாங்கள்தான் தேசீய நோக்கமுடையவர்களென்று பெருமை பேசி மற்றவர்களை குறுகிய நோக்க முடையவர்களென்று இழிவுபடுத்துவது சகஜம். நான் இவ்வுண்மையை பல தடவை யெடுத்துச் சொல்லியும் என்னையும் முஸ்லீம்களையும் எதிர்க்கிறவர் கள், ஜாதி அபிமானமுள்ளவர்களின் குறுகிய நோக்கத்தைக் காண்கின்றார் களில்லை.
குடி அரசு – கட்டுரை – 31.01.1926