எங்கும் பார்ப்பன ஆதிக்கமே
கோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக் காக்களுக்கு நியமிக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. நமது ஜில்லா போர்டிலும் நமது ஜில்லாவிற்குட்பட்ட எல்லாத் தாலூகா போர்டிலும் பிராமண ரல்லாத கனவான்களே தலைவர்களாயிருந்து வருகின்றனர். நம் நாட்டிலோ எல்லா உத்தியோகங்களையும், பார்ப்பனர்களே வெகுகாலமாகக் கொள்ளை யடித்து வந்திருக்கின்றனர் என்ற கிளர்ச்சி பலமாக இருந்து வருகிறது. பார்ப்பனர்களின் உத்தியோக வேட்டையாலேயேதான் நம் நாட்டில் பார்ப் பனர் பார்ப்பனரல்லாதார் என்ற கட்சி உண்டானதென்பதில் சந்தேகமில்லை. பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற கிளர்ச்சி தோன்றியபின் பார்ப்பனருக்கு இனி அதிகம் உத்தியோகம் கொடுக்கக்கூடாது. பார்ப்பனரல்லாதார்களுக்கே கொடுத்து வரவேண்டும் என்ற அபிப்பிராயத்திற்கு சர்க்காரிலுங் கூட ஆதரவு காட்டிவந்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருக்க நமது ஜில்லா லோகல் போர்டு ஸ்தானங்களில் பார்ப்பனரல்லாதவர்களே தலைவர்களாயிருந்தும், இவ்விடம் நியமிக்க வேண்டிவந்த நான்கு டாக்டர் ஸ்தானங்களையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததானது பெரிய அநியாயமாகும். பார்ப்பனரல் லாத டாக்டர்கள் டாக்டர் வேலைக்கு லாயக்கில்லை யென்று போர்டார் நினைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. நமது ஜில்லாவில் அநேக பார்ப்பனரல்லாத டாக்டர்கள் பாஸ் செய்து விட்டு வேலையில்லாமல் காத்திருக்கும் போது, ஒரு ஸ்தானங்கூட பார்ப்பனரல்லாதாருக்குக் கொடுக் காமல் நான்கையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததற்கு பார்ப்பனரல்லாதார் மிகவும் வருந்தவேண்டியிருக்கிறது. போர்டு தலைவர்கள் இம்மாதிரி அநியாயம் செய்ய என்ன அவசியமேற்பட்டதோ தெரியவில்லை. என்ன வோ சில சிபார்சுகள் என்ற சிறிய காரணம் தவிர வேறு காரணம் சொல்ல முடியாதென்றே நினைக்கிறோம். உத்தியோக வேட்டையில் கை தேர்ந்த பார்ப்பனர்களுக்கு ஆளுக்குத் தகுந்த சிபார்சு பிடிக்க தெரியாமற்போகாது. கேவலம் சிபார்சுகளுக்காக தாலூகாபோர்டுதலைவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை பார்ப்பனர்களுக்கு ஆதரவாகக் கொடுத்திருப் பார்களென்பதை எண்ணும்போது வருத்தப்படவேண்டியிருக்கிறது. ஆனால் தற்சமயம் தலைமை வகித்துவரும் போர்டு தலைவர்கள் பார்ப்பனரல் லாதாரின் nக்ஷமத்தில் அக்கரையில்லாதவர்களல்லர்! ஆனால் பார்ப்பன டாக்டர்கள் ³ ஸ்தானத்தை அடைய செய்த சூழ்ச்சிகளுக்கு நாட்டின் அபிப்பிராயத்தையும் பார்ப்பனரல்லாதார் nக்ஷமத்தில் போர்டு தலைவர் களுக்குள்ள அக்கரையையும் பலி கொடுத்துவிட்டதானது பார்ப்பனரல்லா தாரின் துர்பாக்கிய மென்றே சொல்லவேண்டும். எப்படியோ அந்தந்த தாலூகா போர்டு தலைவர்களைச் சரிப்படுத்தித் தங்கள் தங்களுக்கு ஆதரவு காட்டும் படி செய்து நான்கு டாக்டர் ஸ்தானங்களையும் பார்ப்பனர்கள் அடித்துக் கொண்டு போனதை நினைக்கும் போது நம்மவர்களுக்கு கண்ணிருந்தும் பார்க்க முடியவில்லை,காதிருந்தும் கேட்கமுடியவில்லை, வாயிருந்தும் பேச முடியவில்லை,மனமிருந்தும் அறியமுடியவில்லை என்று சொல்வதைத்தவிர நாமொன்றும் சொல்லக் கூடவில்லை. இனிமேலாவது போர்டு தலைவர்கள் இது விஷயத்தைக் கவனித்துச் செய்வார்களென்று எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு – கட்டுரை – 23.01.1927