வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும்
காஞ்சீபுரம் மகாநாட்டிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், எஸ். ராமநாதன், தண்டபாணி பிள்ளை, ஆரியா முதலியவர்கள் வெளியேறின காரணம் இன்னதென்பதும் அது முதல் வேறு தனிப்பிரசாரம் செய்து வருவதின் நோக்கம் இன்னதென்பதும் நமது நேயர்கள் அனேகருக்குத் தெரியும்.
அதாவது மகாநாட்டிற்கு நாயக்கரும் ராமனாதனும் அனுப்பிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவர் மகாநாட்டில் பிரேரேபிக்கக் கூட அனுமதிக்காமல் சட்டத்தின் பெயரைச் சொல்லி தள்ளிவிட்டதினாலேயே மேற்கூறியவர்கள் வெளியேறினார்கள் என்பது ³ மகாநாட்டிற்குப்பிறகும், ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு ஆகியவர்கள் அவ்வகுப்புவாரி உரிமைக்கு விரோதமாய் பிரசாரம் செய்ததும் சில இடங்களில் ஆதரித்ததும் ஆகிய காரியங்களும் நேயர்களுக்குத் தெரியும். கடைசியாக கோவை மகாநாட்டில் வகுப்புவாரி உரிமையை அடிப்படையாகக் கொண்ட காங்கிரசுக்கு நம்மை அழைத்ததும் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தை ஏற்றுக்கொண்டதும் வாசகர்களுக்குத் தெரிந்ததே.
இப்போது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு ஒரு புது ஆதரவு. அதாவது நமது நாட்டிற்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டால் எந்த வகுப்பார் தங்களுக்கு ஆபத்து என்பதாகக் கருதி இவ்வளவு திருவிளை யாடல்களைச் செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ, அந்த வகுப்பில் முக்கியமானவரும், ஒரு ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவரா னவரும், சுயராஜ்யக்கட்சி உபதலைவரும், ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி அய்யங்கார் சம்மந்தியுமான ஸ்ரீமான் கோவை சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் அந்த கொள்கையை ஒப்புக்கொண்டு “வகுப்பு வாதத்தை ஒழிப்பதற்கு யோசனை” என்கிற தலைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ திட்டம் கூட ஏற்பாடு செய்துவிட்டார். அதாவது ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் 16-7-27 தேதி “சுதேசமித்திரன்” பத்திரிகையில் ஒரு நிருபருக்கு பேட்டி கொடுத்தார் என்கிற முறையில் இந்த ஜில்லா வாசிகளுடைய அபிப்பிராயங் களையும், அபிலாஷைகளையும் நான் அறிவேன். அவர்கள் அபிப்பிராயங் களை நான் தெரிந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அதை ஒருவாறு சுறுக்கிகூறுகிறார்.
“சட்டசபை போன்ற பொது ஸ்தாபனங்கள் விஷயத்திலும் உத்தியோக விஷயத்திலும்தான் சங்கடம் இருந்து வருகிறது” என்று சொல்லிவிட்டு அதற்கு மார்க்கம் சொல்லுகிறார். அதாவது சட்டசபை முதலிய சம்பளம் இல்லாத கௌரவ ஸ்தானங்களில் 100க்கு 16 1/2ஸ்தானங்கள் பார்ப்பனர் களுக்கும் மீதி 83 1/2யில் கிறிஸ்தவர்களுக்கு16 1/2யும் மகமதியர்களுக்கு16 1/2 யும் தாழ்ந்த வகுப்பு பிரதிநிதிகளுக்கு 16 1/2 யும் பார்ப்பனரல்லாதவர்களுக்கு 33ம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உத்தியோக விஷயத்தில் புதிதாக செய்யப்படும் உத்தியோக நியமனங்களில் 100க்கு 40 பார்ப்பனரல்லாத இந்து மக்களுக்கு என்றும் 100க்கு 20 பார்ப்பனர்களுக்கு என்றும், 100க்கு 20 முகம்மதியர்களுக்கும், 100க்கு 10 கிருஸ்தவர்களுக்கும், 100க்கு 10 ஆதிதிராவிடர்களுக்கு என்றும் எழுதி இருக்கிறார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டுமென்று சொன்னவர் களுக்கு இதன் பரிமாற்றத்தில் திட்டத்தில் ஏதாவது வித்தியாசமிருந்தாலும் முக்கிய கொள்கையில் யாதொரு மாறுபாட்டையும் காணோம் எனவே பார்ப்பனர்களும் ஒருவாறு வகுப்பு வாரி திட்டம் ஏற்படுத்த ஒப்புக்கொண்டு வருகிறார்கள் என்பது இப்போது வெளிப்படை இன்னமும் எத்தனையோ பார்ப்பனர்களும் பார்ப்பன வாலிபர்களும் நம்முடன் நேரிலேயே சொல்லி இருக்கிறார்கள். அதாவது “பார்ப்பனர் பிறவிகாரணமாய் ஜாதியில் மற்ற எவரையும்விட உயர்ந்தவனல்ல என்பதையும், இந்திய மக்களின் ஒற்றுமைக் கும் கதி மோக்ஷத்திற்கும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவமே சிறந்த சாதனம் என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறோம். எங்களையும் தங்கள் சுயமரியாதை சங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள். நமக்கு இன்னமும் அவர்களிடம் நம்பிக்கை வராததால் நாம் நமது காலிலேயே நின்று நமது தேவையை அடைய வேண்டும் என்கிற ஆசையாலும், இதற்கு முன் பல தடவைகளில் கிளம்பிய இது போன்ற பிரயத்தனங்களை இதே பார்ப்பனக் கூட்டத்தார் கூட இருந்தே கெடுத்திருக்கிறதை பார்த்து இருப்பதினாலேயும், நமக்கு அவர்களிடம் நம்பிக்கை உண்டாவது கஷ்டமாயிருக்கிறதே ஒழிய வேறில்லை, எப்படியும் இதிலிருந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கை யுடைய பார்ப்பன எதிரிகள் குறைந்து வருகிறார்கள் என்கிற விஷயத்தில் நமக்கு சந்தோஷம். ஆனால் பார்ப்பனர்கள் யோக்கியர்கள் என்பதை காட்டிக் கொள்ள இப்படிச் சொல்லிவிட்டு பார்ப்பனரல்லாதாரில் மறுபடியும் சிலரை சிருஷ்டித்து கலகம் செய்யச் செய்வார்கள் என்கிற பயமும் நமக்கு உண்டு. ஆனாலும் அதையும் ஒரு கைபார்க்க எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வலிமை அளிப்பாராக. கடைசியாய் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப்பற்றி பச்சைப்பார்ப்பனப் பத்திரிகையாகிய “இந்துப்” பத்திரிகை சொல்லியிருப்ப தையும் குறிப் பிட்டுவிட்டு இதை முடித்துவிடுகிறோம்.
“இந்து” பத்திரிகை எழுதியதாவது:-
“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஜனங்களிடை சுயமதிப்பை உண்டுபண்ணியிருக்கிறதென்பதையும், சமுதாய முன்னேற்றத்துக்குக் காரண மாயிருக்கின்ற தென்பதையும், ராஜீயவாழ்வில் அலட்சியமாயிருந்த வகுப்பி னருக்கு ராஜீய அறிவு புகட்டுவதற்கான வசதிகளை அது உண்டுபண்ணி யிருக்கிற தென்பதையும் யாவரும் மறுக்கமுடியாது” என்று எழுதியிருக்கிறது. இதைப்பார்த்த பின்பாவது பார்ப்பனரல்லாதாருக்குள் வகுப்புவாரி பிரதிநிதித் துவத்திற்கு கண்ணியமான எதிரிகள் இருக்கமாட்டார்களென்று நினைக் கிறோம்.
குடி அரசு – கட்டுரை – 31.07.1927