சுவாமி சிரத்தானந்தர்
சுவாமி சிரத்தானந்தர் என்னும் பெரியாரை உலகம் முழுதும் தெரியும். இவர் தேசத்திற்காகவும், சமூகத்திற்காகவும் ஒதுக்கப்பட்டவர்களின் உயர் முன்னேற்றத்திற்காகவும் தனது தொழில், செல்வம், குடும்பம் முதலிய வற்றைத் தியாகம் செய்து தனது ஜீவிதத்தின் பெரும்பான்மையான பாகத் தையும் சந்நியாசியாகவிருந்தே தான் எடுத்துக்கொண்ட காரியத்திற்காக அஞ்சாநெஞ்சத்தோடும், இளையா ஊக்கத்தோடும் தொண்டாற்றினார். இவர் ஒரு முஸ்லீமால் படுகொலையுண்டிறந்தது ஒவ்வொரு மனிதனுடைய மனதையும் பெரும் துன்பத்திற்குள்ளாகுமென்பதற்கு சிறிதேனும் ஐய மில்லை. சுவாமிகளது மரணத்தால் இந்தியா தனது உண்மை புத்திரர்களில் ஒருவரை இழந்ததென்று சொல்வது மிகையாகாது. ஆயினும் இதை ஆராயு மிடத்து இதுவும் ஒரு நன்மைக்கென்றே கொள்ள நேரும். ஏனெனில் பிறப் பெய்திய ஒவ்வொரு மனிதனும் இறக்க வேண்டியதவசியமே. அங்ஙனம் சுவாமிகள் சாதாரணமாக ஏதோ ஒரு நோயின் பேரால் இறந்திருப்பாரே யாயின் இன்றிருக்கும் உணர்ச்சிக்கும் அவரது தொண்டில் மக்களுக்கிருக்கும் ஊக்கத்திற்கு இத்தனை ஏதுவில்லாமலிருக்கும். இப்படுகொலையினால் அனாவசியமாய் ஒரு கூட்டத்திற்கு பழியேற்பட நேரிட்டதேயன்றி சுவாமி களுக்கேனும் அவர் கொண்ட தொண்டிற்கேனும் யாதொரு குறையும் வந்த தாக எண்ண இடமில்லை. அவர் தான் கொண்ட காரியத்திற்காக இரத்தம் சிந்தி, உயிர் துறந்து, தானும் தானெடுத்த காரியமும் உலகினின்று மறையா வண்ணம் செய்திருக்கிறார். ஏசுநாதர் சிலுவையிலறையப் படாதிருந்தால் இன்று அவருக்கித்தனை பக்தர்கள் இருக்க மாட்டார்கள். அது போலவே சுவாமிகளும் அழியாப் புகழ் பெற்று விட்டார். ஆதலால் அவரது உண்மை பக்தர்களுக்கிடையில் இக்கொலைக்காகப் பரபரப்பும் கிளர்ச்சியும் ஒரு சிறிதும் வேண்டியதில்லை. அவர்களுக்கு முன்னிருந்ததைவிட பன்மடங்கு சுவாமிகள் காரியத்தில் அபிமானம் கொள்ள அவகாசம் கிடைத்திருக்கிறது. இத்தருணத்தை வீண் போக்காது அப்பெரியார் விட்டுப்போன காரியத்தை சிரமேற்கொண்டு வினையாற்ற வேண்டியதே கடனாகும். தான் கொண்ட கொள்கைக்காக கடைசி வரை கொஞ்சமும் தளராமல் உழைத்து வந்து அதற் காகவே தனது உயிரையும் துறந்த சுவாமிகளது ஆத்மா சாந்தி அடைவதாக.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 02.01.1927