நமது அரசியல் நிலை II
இரு கரையும் புரண்டோடும் வெள்ளப்பெருக்கு இடைமறித்துப் பலமாகத் தடுக்கப்படின், பின்னால் எதிர்த்துத் தாக்கி இருமருங்கிலும் உடைப் பெடுத்து நாலா பக்கங்களிலும் ஓடிச்சென்று சிதறுண்டு போதல் இயற்கை. அதுபோன்று இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து நின்ற மாபெரும் இயக்கமாகிய ஒத்துழையாமை இயக்கம் இடையில் ஒடுக்கப்பட்டவுடன், தேச விடுதலை யொன்றிலேயே குறிக்கொண்டு நின்ற மக்கள் மனம் வேற்றுமை யுற்று மிகச் சிறுசிறு விஷயங்களில் தம் மனத்தைச் செலுத்துவராயினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் துரும்பென மதித்து உதறித் தள்ளியெறிந்த பட்டங்களிலும், பதவிகளிலும், அதிகாரங்களிலும் மீண்டும் மக்கள் மனம் வைப்பாராயினர். பொதுநல எண்ணம் குறைந்தது; தன்நலம் தலைதூக்கி நிற்க ஆரம்பித்துவிட்டது. சாதிப்பற்று என்ற மாயையில் மக்கள் அழுந்துவா ராயினர். ‘எனது கடமை’, ‘எனது கடமை’ என்றதற்குப் பதிலாக ‘எனது உரிமை’, ‘எனது உரிமை’ என்ற முழக்கம் எங்கும் கேட்கிறது. ஒவ்வொரு சாதியினரும் தமது சாதியின் உரிமைகளுக்காகப் போராட முனைந்து நிற்கின்றனர். ஒவ்வொரு சாதியினரும் தமது முன்னேற்றத்திற்காக முற்பட்டு உழைத்தல் சாலவும் சிறந்ததே. தமது உழைப்பால் பிற சாதியினர்களின் உரிமைகள் எவ்வாற்றானும் பாதிக்கப்படாதிருத்தல் வேண்டும் என்ற எண்ண மின்றி எவர் எக்கேடு கெடினும் தாம் மட்டும் பல உரிமைகளைப் பெற வேண்டுமென்ற குறுகிய நோக்கம் இதுகாலை நாட்டில் தலைவிரித்தாடுகிறது. சிறந்த அறிவாளிகளும், உயர்ந்த தேசாபிமானிகளும் இக்குறுகிய நோக் கத்தை அடிப்படையாகக் கொண்ட சாதிப்பற்று என்னும் மாயவலையில் சிக்கி உழலுகின்றார்கள். “நீ யாவன்?” என என்னை ஒருவன் கேட்பானாயின் “இந்தியன், இந்தியன், இந்தியனே” என்று முக்காலும் மொழிவேன் எனக் கூறிய திரு மகம்மதலி ஜின்னாவுங்கூட சாதிப்பற்று என்ற மாயையில் பாவம்! அழுந்திவிட்டார். ஹிந்துக்களும், மு°லீம்களும் அரசினர் சட்டசபையில் பெறும் பிரதிநிதித்துவ தொகையை வரம்பறுத்து, சென்ற 1916-ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதற்குத்தான் “லக்ஷ்மணபுரி ஒப்பந் தம்” என்று பெயர். அவ்வொப்பந்தத்தை தமது சாதிக்கு சாதகமாக மாற்ற வேண்டுமென்று மு°லீம்கள் ஒரு பெரும் கிளர்ச்சி செய்து நிற்கின்றனர். சாதிமத பேதங்கடந்து சிறந்த தேசீயவாதியாக இருந்து வந்த, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நாட்டின் நலனைக் கெடுப்பதாகும் என்ற கொள்கையைக் கைக்கொண்டிருந்த திரு ஜின்னா நாட்டின் தற்கால நிலையில் தமது கொள்கைகளைச் சிறிது மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது என்று கூறி மு°லீம்களின் கிளர்ச்சிக்குத் துணை செய்து வருகின் றார். சாதிப்பற்றின் வலிமையே வலிமை ! இப்பெருஞ் சமூகத்தினரும் ஒருங்கு கூடிச் செய்து கொண்ட ஒப்பந்தத்தைத் தக்க காரணமின்றி மாற்றுதல் கூடா தென்றும் அவ்விதம் மாற்றுதல் அவசியமாயின் தமது ஜாதியினரின் உரிமைகள் எவ்வாற்றானும் பாதிக்கப்படக் கூடாதென்றும் இந்துக்கள் எதிர் வாதம் புரிந்து வருகின்றனர். இவ்விரு வாதங்களையும் முறையே ஆராய்ந்து முடிவுசெய்யக் கூடின கூட்டமும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக் கூட்டம் போல் ஒன்றும் செய்யாமல் பயனில்வாதம் நிகழ்த்திக் கலைந்து விட்டது.
தமிழ்நாட்டிலோ அரசியல் உலகத்தை சாதிச் சண்டை என்ற படாம் மூடிக் கொண்டிருக்கிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர்த் தோன்றி மக்களுக்குள் ஒற்றுமையைக் குலைத்து, வேற்றுமையை நாட்டி, தேச விடுத லைக்குப் பெருந்தடையாக நின்று நாளடைவில் ஒருவாறு ஒடுக்கமுற்று வந்த சாதிச்சண்டை மீண்டும் உயிர்த்தெழுந்து உறுமி நிற்கிறது. பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார், ஆரியர் – தமிழர் என்ற பிரிவுச் சொற்களே எங்கும் முழங்குகின்றன. சுதந்திர வீரர்கள் சுயராஜ்ய வீரர்களாக இலங்கிய நம்மவர் இதுகாலை சாதி வீரர்களாகக் கோலங்கொண்டு நிற்கிறார்கள். தலைவர்களின் சொற்பொழிவுகளிலும், தமிழ்ப் பத்திரிகைகளிலும் காங்கிர° என்ற பேச்சைக் காணோம்! கதர் என்ற பேச்சைக் காணோம்! எல்லாம் சாதி மயமாகவே விளங்குகின்றன. “எல்லாருமோர் குலம், எல்லாரும் இந்திய மக்கள்” என்ற உயரிய கொள்கை, சிறந்த எண்ணம் மக்களை விட்டு அகன்றோடிப் போய் விட்டது. பிறப்பால் உயர்வு, தாழ்வு என்ற கீழ் எண்ணம் நாட்டில் பரவி விட்டது. எல்லாரும் ஒன்றென்று எண்ணி நாட்டின் நலத்திற்காக ஒன்றிய மனத்தினராய்த் தமிழ் மக்கள் உழைக்கும் நாள் எந்நாளோ?
இதுகாறும் நாட்டின் அரசியல் நிலையைப் பற்றிப் பொதுநோக்காக ஆராய்ச்சி செய்தோம். இனி நாட்டின்கணுள்ள பற்பல அரசியல் கட்சியினர் களைப் பற்றிச் சுருக்கமாக ஆராய்தல் செய்வோம்.
நமது நாட்டில் நடைபெற்றுவரும் ஆட்சிமுறையில் எவ்வித தொடர்பும் இன்றி, புறத்தே நின்று ஒத்துழையாமை செய்வதில் எவ்வித பயனுமில்லையெனக் கூறி, அரசினர் சட்டசபைகளில் நுழைந்து ஆங்கு ஒத்துழையாமையை நிகழ்த்தி ஆட்சிமுறை நடைபெறாவண்ணம் இடைய றாது முட்டுக்கட்டை போட்டு, ஆட்சிமுறையை உடைத்தெறிதலே சாலவும் சிறந்ததெனக் கொண்டு காங்கிர°வாதிகளில் ஒரு கூட்டத்தினர் “சுயராஜ்யக் கட்சி ” என்ற ஒரு கட்சியைத் தோற்றுவித்தனர். மத்திய மாகாணம், வங்காளம் என்னும் இரண்டு இடங்கள் தவிர மற்றைய இடங்களில் சுயராஜ்யக் கட்சி யினர் போதிய ஆதரவு பெறவில்லை. இடத்திற்கும், காலத்திற்கும் தமது கட்சி யின் பலத்திற்கும் தக்கவாறு தமது கொள்கைகளையும் முறைகளையும் மாற்றிக்கொண்டே வரலாயினர். சட்டசபைகளில் முழு ஒத்துழையாமை, இடையறாமல் முட்டுக்கட்டை என்று கூறியது பேச்சளவிலே நின்றுவிட்டது.
இந்திய சட்டசபையில் தமது கட்சிக்குப் பலமின்மை கருதி சுயேச்சை வாதிகள் சிலரோடு ஒருவகை ஒப்பந்தம் செய்துகொண்டு முட்டுக்கட்டை முறையை ஓராண்டு கையாண்டு வந்தனர். அதுவும் ஒருசில காரியங்களில் மட்டுமே. ஓராண்டுக்குப் பின்னர் சுயேச்சை வாதிகள் சுயராஜ்யக் கட்சியி னரைக் கைவிட்டு விட்டனர். பாவம்! தன்னந் தனியராய் எடுத்த காரியம் யாவினும் தோல்வி மேல் தோல்வியே பெற்று வந்தனர். இவர்கள் அரும் பாடுபட்டு அரிதிற் பெற்ற சில வெற்றிகளும் அரசப் பிரதிநிதியின் தனி அதிகாரம் எனும் வாளுக்கு இரையாயின. சட்டசபைகள் ஏற்படுத்தும் சிறு கமிட்டிகளில் பதவி பெறலாகாதென்று கொண்டிருந்த நோக்கம் வெறும் எழுத்தளவிலேயே நின்றுவிட்டது. மத்திய மாகாணத்திலும் வங்காளத்திலும் சுயராஜ்யக் கட்சியினரின் முட்டுக்கட்டை ஒருவாறு நிறை வேறிற்றென்றே கூறுதல் வேண்டும். இருந்தாலும், என்? மத்திய மாகாணத்தின் சட்டசபைத் தலைமையைப் பெற சுயராஜ்யக் கட்சியினர் முற்பட்டு, அதனையும் பெற்று விட்டனர். பதவிபெறுதல் கூடாது என்ற அவர்தம் கொள்கைக்கு வியாக்கி யானம் போலும்! சென்னை மாகாணத்தைப் பற்றிய மட்டிலும் சுயராஜ்யக் கட்சியினரை பத்திரிகைகளிலும், பிரசங்க மேடைகளிலும் கண்டோமே யல்லாது சட்டசபையில் காணவே இல்லை. சென்னை சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியினரும் பிற கட்சியினரும் கையாண்டு வந்த முறைகளில் எவ்வித பேதமும் எள்ளளவும் எமக்குப் புலனாகவில்லை. இது போன்றே மற்றை மாகாண சட்டசபைகளிலும் சுயராஜ்யக் கட்சியினர் இருந்து வருகின் றனர் எனக் கூறுதல் மிகையாகாது.
“சட்டசபைகளில் ஒத்துழையாமை நிகழ்த்துவோம்; முட்டுக்கட்டை போடுவோம்; ஆட்சிமுறையை அழிப்போம்” என்று சுயராஜ்யக் கட்சியினர் வீராவேசம் கொண்டு கூறிய முழக்கச் சொற்கள் பயனிலவாயின; பேச்சில் ஒத்துழையா வீரர்களாகவும், செய்கையில் ஒத்துழைப்பு வீரர்களாகவும் விளங்கி வருகின்றார்கள். அதுமட்டுமோ? பேச்சிலுங்கூட அவ்வீரத்தன்மை ஒழிந்து வருகின்றது. காந்தியடிகளுக்கும், சுயராஜ்யக் கட்சியினருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஒழித்துவிட சுயராஜ்யக் கட்சியினர் முற்பட்டு விட்டனர். அக் கட்சியினர்களுக்குள்ளேயே பற்பல மாறுபட்ட அபிப் பிராயங்கள் தோன்றிவிட்டன. தாஸர் ஒன்று கூறுகிறார்! மகாராஷ்டிர சுய ராஜ்யக் கட்சியினர் ஒன்று கூறுகின்றனர். நிர்மாண திட்டத்தை நிறைவேற்றி வைத்தல் வேண்டுமென திரு தாஸர் கூறுகிறார். நூல் சந்தா தீர்மானத்தை எடுத்துவிட வேண்டுமென்றும், காந்தியடிகளை காங்கிரஸை விட்டு ஓட்டிவிட வேண்டுமென்றும் மகாராஷ்டிரத்தார் கூறுகின்றார்கள். இன்னும் சில நாட் களுக்குள் சுயராஜ்யக் கட்சியினர்களுக்குள்ளேயே பிளவு ஏற்படும் அறிகுறி கள் காணப்படுகின்றன. திரு தாஸர் இந்தியாவிலிருந்து கண் சிமிட்டுகிறார்; திரு பர்க்கன் ஹெட்டு பிரபு இங்கிலாந்திலிருந்து கண் சிமிட்டுகிறார். யாரை யார் மயக்கப் போகிறார்களோ காலந்தான் காட்டும். தன்னைக் கண்டாரை மயக்கமுறச் செய்து கீழே வீழ்த்தும் கொல்லிப்பாவையென விளங்கும் அரசி னர் சட்டசபைகளில் அடி வைத்தவர்களின் வழி இந்நிலையுறாது பின் எந் நிலையுறும்? சுருங்கக்கூறின் சுயராஜ்யக் கட்சியினர் தமது பண்டைக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டனர்; ஒத்துழைப்பாளர்களாயினார்கள். நிர்மாணத் திட்டத்திலும், காந்தியடிகளிடத்திலும் நம்பிக்கையிழந்தனர்; அவர்களுக்குள்ளும் அபிப்பிராய பேதங்கள் தோன்றலாயின; பிளவு அதி விரைவில் ஏற்படுதலுங்கூடும். சுயராஜ்யக் கட்சியினரின் தற்கால நிலை இதுவேயாகும்.
ஸ்ரீமதி அன்னி பெஸண்டும், அவரது கூட்டத்தினரும் இந்திய அரசியல் உலகில் இதுகாலை மிக்க பாடுபட்டு வருகிறார்கள். “அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் ” என்ற கொள்கையுடையவர்கள். இந்தியாவில் மட்டும் கிளர்ச்சி செய்தல் பயன் தராது என்றும் இந்திய அரசியல் கிளர்ச் சியை இங்கிலாந்திலும் நடத்துதல் வேண்டும் என்ற நோக்கமுடையவர்கள். இந்திய மக்கள் உண்மையாகவே சுதந்திரதாகங் கொண்டுள்ளார்கள் என்று ஆங்கிலர்கள் அறிவார்களாயின் இந்தியாவின் ஆட்சி முறையில் இந்தியர் களுக்குப் பெரும் பங்கு கொடுக்க ஆங்கிலர்களே முன் வருவார்களென்றும், இந்திய அரசியல் நிலையின் உண்மையையும், இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையையும் ஆங்கிலர் அறியாத குறையே அவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதற்குக் காரணமென்றும், ஆங்கிலர்களை வற்புறுத்தினால் அல்லாது அவர்கள் இணங்கமாட்டார்களென்றும், ஆகையினால் உருப்படியான அரசியல் திட்டமொன்றைத் தயாரித்து ஆங்கில நாட்டுப் பாராளுமன்றத் தாரிடம் சமர்ப்பித்தல் வேண்டுமென்றும் இக்கூட்டத்தினர் கூறுகின்றனர். “இந்திய சுயஆட்சி மசோதா” ஒன்றினைத் தயாரித்து அதற்கு இந்திய மக்களின் ஆதரவைப் பெற இந்நாடு முழுவதும் ஸ்ரீமதி அன்னி பெஸண்டு சுற்றுப்பிரயாணம் செய்து வருகின்றனர். ஸ்ரீமான் வி.எ°. ஸ்ரீனிவாச சா°திரி போன்ற பெரியார்களினுடையவும், மகாராஷ்டிர மாகாண மகாநாடு போன்ற வைகளினுடையவும் ஆதரவைத் தமது மசோதாவிற்குப் பெற்றிருக்கின்றார். இதுகாறும் வெளிவந்துள்ள இந்திய அரசியல் திட்டங்களைக் காட்டிலும் இவர் தயாரித்த மசோதா பெரிதும் முற்போக்குடையதாகவும், இந்திய மக்களுக்கு ஆட்சி முறையில் அதிக அதிகாரமும் பொறுப்பும் தரத் தக்கதாகவும் இருக் கிறதென்றே கூற வேண்டும். எனினும் இந்திய நாகரிகத்திற்கும் அரசியல் கொள்கைகளுக்கும் பெரிதும் மாறுபட்ட அம்சங்களைத் தன்னகத்துத் தாங்கி நிற்கிறது. ஆங்கிலர்களை எந்நாளும் சார்ந்து இந்திய மக்கள் பிழைக்க வேண்டுமென்ற கொள்கையை இம்மசோதா ஒப்புக் கொண்டு நிற்கிறது. இந்தியாவிற்கு ஆங்கில நாட்டுத் தொடர்பு இன்றியமை யாததென்று வலியுறுத்திக் கூறுகிறது. இந்தியாவின் காவலன் ( ஞசடிவநஉவடிச ) ஆக ஆங்கில மன்னன் இருந்தேயாக வேண்டுமாம். இந்தியாவின் மீது ஆணை செலுத்திவரும் ஆங்கில நாட்டுப் “பிரிவி கவுன்ஸி”லின் ஆதிக்கம் இம் மசோதாவினால் ஒழிந்தபாடில்லை. பிறநாட்டாரின் வியாபாரப் பெருக்கால் இந்தியக் கைத்தொழில்கள் நாசமாக்கப்படாமல் நமது தொழில்களைக் காப்பாற்றிக் கொள்ள காப்புவரி முதலானவை விதிக்கும் உரிமைகள் இம்மசோதாவில் காணப்படவில்லை. இதுகாலை நடைபெற்று வரும் இந்திய அரசாங்கத்தார் கண்மூடித் தனமாகவும், தந்நலத்தைப் பேணியும் பெருக்கி வைத்திருக்கும் கடன்களையும் வேறுசில பொறுப்புகளையும் ஆராய்ந்து உண்மையறிந்து ஏற்றுக் கொள்ளுவனவற்றை ஏற்றுக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ள முடியாதனவற்றைத் தள்ளவும் இம்மசோதா இந்திய மக்களுக்கு உரிமை அளிக்கக் காணோம். இதுபோன்ற குறைகள் பலவும் இந்திய நாகரிக, அறிவு வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள குறைகள் பலவும் இம் மசோதாவில் மல்கிக் கிடக்கின்றன. ஆங்கில நாட்டுத் தொடர்பை எக்காலத்தும் இந்தியா விடக்கூடாதென்று அம்மையார் கூறுதல் இயல்பே; அவரும் ஒரு ஆங்கிலராதலின். செருப்புக்கடியின் துன்பத்தை செருப்பணிந்தவனன்றோ அறிவான் ? ஆங்கில நாட்டுத் தொடர்பை அறுத்தெறிய வேண்டுமென்பது இந்தியர்களின் எண்ணமுமன்று. அத்தொடர்பு இரு நாட்டிற்கும் நன்மை பயப்பதாயின் யாவரே வேண்டாமெனக் கூறுவர்? அத்தொடர்பால் நமது நாட்டின் நலத்திற்குக் கேடு விளைவதாயின் நாம் தனித்து நிற்கும் உரிமை நமக்கில்லையா? என்பதே கேள்வி. இக்கேள்விகளுக்குத் தக்க விடை இம்மசோதாவில் காணோம்.
நாட்டில் இன்னும் வேறு பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அவைகள் தொகையில் சுருங்கினவாகவும் செல்வாக்கில் குறைந்தன வாகவும் வெறும் பெயரளவிலேயே நின்று வருகின்றன. “கடப்பார் எவரே கடு வினையை” என்ற கொள்கையையுடைவர்கள். அதிகம் கேட்போம்; கொடுத் தால் அநுபவிப்போம்; சிறிது கொடுப்பினும் வந்தனம் கூறுவோம்; மேலும் மேலும் கேட்டுக் கொண்டேயிருத்தல் வேண்டும்; அதுதான் நமது கடமை யென்ற சித்தாந்தமுடையவர்கள். இவர்கள்தான் நிஷ்காமியகர்ம யோகிகள் போலும்.
இதுதான் இந்தியாவின் அரசியல் உலகம்! இதுதான் நமது நாட்டின் அரசியல் நிலை!! இத்தகைய காட்சியை வேறெந்நாட்டு அரசியல் உலகினும் காண்பதரிது. இங்ஙனம் பலதிறப்பட்ட அரசியல் கொள்கைகளையுடைய கட்சிகளைக் கண்டு மக்கள் மனங்கலங்கி நிற்பதில் எவ்வித ஆச்சரிய முமில்லை. அடுத்த கட்டுரையில் காந்தியுலகைப் பற்றியும் மக்கள் கடைப் பிடித்தொழுக வேண்டிய அரசியல் நெறியைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வோம்.
குடி அரசு – தலையங்கம் – 24.05.1925