குடி அரசு தோற்றம் கொண்ட காலம்
1925 மே மாதம் டிசம்பர் வரை எட்டு மாதங்கள் அந்த இதழ் பதிவு செய்துள்ள பெரியாரின் எழுத்தும் பேச்சும் அடங்கிய தொகுப்புதான் உங்கள் கரங்களில் தவழ்கிறது. இதே போன்று ஒரு தொகுதியை 2003 ஆம் ஆண்டிலேயே பெரியார் திராவிடர் கழகம் சேலத்தில் நடத்திய தமிழர் வழி பாட்டுரிமை மாநாட்டில் வெளியிட்டதைக் குறிப்பிட விரும்புகிறோம். பெரியாரின் எழுத்து பேச்சுக்களை காலவரிசைப்படி தொகுத்து வெளிச் சத்துக்குக் கொண்டுவந்து விட வேண்டும் என்ற எமது பெரும் வேட்கையில் எழுந்த முதல் முயற்சி என்றே கூறலாம். தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் 1926 ஆம் ஆண்டு குடி அரசு பதிவுசெய்த பெரியாரின் எழுத்து, பேச்சுகளை இரண்டு தொகுதிகளாக வெளிக்கொண்டு வந்தோம். அதன் பிறகே மற்றொரு புதிய சிந்தனைக்கு வந்தோம். ஒவ்வொரு ஆண்டாக அவ்வப்போது தொகுதி களை வெளியிடுவதை விட ஒரு காலகட்டத்தை நிர்ணயித்து பெரியாரின் எழுத்துப் பேச்சுகளைத் தொகுத்து காலவரிசைப்படி ஒரே நேரத்தில் வெளி யிடலாம் என்பது தான் அந்த சிந்தனை. அதன்படி சுயமரியாதைக் கொள்கை களைப் பரப்புவதில் பெரியார் முழுவீச்சில் களமிறங்கிய 1925 முதல் 1938 வரையிலான காலத்தைத் தேர்வு செய்தோம்.
இந்தப்பணியின் சுமை எங்களுக்குத் தெரிந்தே இருந்தது. ஆயினும் கடமையில் இறங்கினோம். வரலாற்றின் போக்கினைத் திருப்பிய ஒரு தலைவருக்கு முறையான வரலாற்றுப் பதிவுகளே இல்லாத அவல – சோகச் சூழலில் எங்களின் தேடுதல் முயற்சிகள் தொடங்கின. எங்கெங்கே எவரிட மெல்லாம் இந்த வரலாற்றுப் புதையல் புதைந்திருக்கிறதென்பதைக் கண்டறிய முயற்சித்த போது நம்பிக்கை ஒளி பளிச்சிட்டது. உண்மைப் பெரியாரியலா ளர்கள் பலரும் காலம் காலமாகப் பாதுகாத்து வைத்திருந்த அந்த அறிவுச் சொத்துக்களை ஆர்வமுடன் கையளித்து எங்கள் பணிக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சேலத்தில் 2003 இல் நாங்கள் வெளியிட்ட குடி அரசு முதல் தொகுப் பில் இடம் பெற்றிராத பல கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இணைக்கப்பட்டி ருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எங்கள் முதல் முயற்சியில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும் 1980 களில், பெரியாரியல் சிந்தனை யாளர்கள் பலரின் கூட்டுழைப்பால் அவர்களுக்கு அப்போது கிடைத்த குடி அரசு இதழ்களிலிருந்து மட்டும் தொகுத்தவைதான். அதன்பிறகு தேடி சேகரிக்கப்பட்ட பல குடி அரசு இதழ்களிலிருந்து கிடைத்த கட்டுரைகளை இந்தத் தொகுதியில் இணைத்திருப்பதால் இதன் பக்கங்களும் கட்டுரைகளும் அதிகரித்துள்ளன. 2003 இல் வெளியிட்ட முதற் பதிப்பின் பக்கங்கள் 248 இப்போது உங்கள் கரங்களில் தவழும் இந்தத் தொகுப்பின் பக்கங்கள் 488 விடுபடுதல் இருந்துவிடக்கூடாது என்ற துடிப்போடு எம்மால் இயன்றவரை திரட்டிய கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன.
தமிழின உணர்வாளர்களும், சிந்தனையாளர்களும், ஆய்வாளர்களும் காலவரிசையில் வெளிவரும் இக்காலப்பெட்டகத்தைக் கால வரலாற்றுச் சூழலோடு இணைத்துப் பரிசீலிக்கப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.
– பதிப்பாளர்