குடி அரசு : தோற்றத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்
பெரும்புரட்சிக்கு வித்திட்ட பெரியாரின் ‘குடி அரசு’ தொடக்க காலங் களில் பச்சை நிற அட்டையுடனே வெளிவந்தது. எனவே பச்சை அட்டைக் ‘குடி அரசு’ என்ற செல்லப் பெயரையும் வாசகர்கள் சூட்டினர். ‘குடி அரசு’ ‘கொங்கு நாடு’ எனும் பெயர்களில் பெரியார் 19.01.1923 லேயே பத்திரிக் கைக்கான பதிவை செய்துள்ளார் என்றாலும் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து 02.05.1925 அன்றுதான் முதல் இதழ் வெளிவந்தது. ( 2-5-25 சனிக்கிழமை. இனி ஞாயிறுதோறும் வெளிவரும் -அட்டை ) தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதழ் வெளிவருகிறது.
ஆண்டின் முதல் இதழ், ஆசிரியர் பெயர் மாற்றம் பெற்றவை, மாற்றம் பெற்ற முகப்பு அட்டைகள் அந்தந்தத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ‘மாலை’ என்றும், இதழுக்கு ‘மலர்’ என்றும் பெயர் சூட்டப் பட்டிருக்கிறது.
முதல் பக்க அட்டையில் பாரதியார் பாடல் வரியுடன் தான் இதழ் தொடங்கியது.
“எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்”
“சாதிகள் இல்லையடி பாப்பா”
என்ற பாடல்கள் அட்டையில் இடம் பெற்றுள்ளன. 08.11.1925 இதழ் அட்டை யில் பாரதி பாடல் வரிகள் நீக்கப்பட்டு,
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும்.
என்ற குறள்கள் இடம்பெறுகின்றன. 18.04.1926 இதழில் குறள்கள் நீக்கப்பட்டு ‘மகாத்மா காந்தி வாழ்க! ’ என்ற முழக்கம் இடம்பெறுகிறது. அதே இதழில் அட்டையில் மாலை, மலருக்கு குறிக்கப்பட்ட தமிழ் எண்கள் நீக்கப்பட்டு நடைமுறையில் உள்ள எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. பக்கத்தின் எண்கள் மட்டும் தமிழ் எண்களால் குறிக்கப்பட்டுள்ளன. 20.11.1927 இதழில் ‘மகாத்மா காந்தி வாழ்க! ’ முழக்கம் போய் ‘கதர் வாழ்க! ’ முழக்கம் வருகிறது. 25.12.1927 இதழ் அட்டையில் எந்தப் படமும் இல்லாமல் வெளிவருகிறது. 25.12.1938 இதழ்வரை இந்நிலையே தொடர்கிறது. ‘ குடி அரசு’ எழுத்து வடிவம் மட்டும் மாறி மாறி வருகிறது. ஈரோட்டில் தொடங்கப்பட்டு வெளிவந்த குடி அரசு 16.06.1929 நாளிட்ட இதழிலிருந்து 29.12.1929 இதழ்வரை சென்னையிலிருந்து வெளி வருகிறது. 16.06.1929 இதழிலிருந்து பக்கத்தின் எண்களும் நடைமுறை எண்களாக குறிக்கப்படுகின்றன. 19.01.1930 முதல் மீண்டும் ஈரோட்டில் இருந்து வெளிவரத் தொடங்குகிறது. 19.11.1933 இதழோடு ‘குடி அரசு’ நிறுத்தப் படுகிறது. மீண்டும் 13.01.1935 இல் இருந்து ‘குடி அரசு’ வெளிவருகிறது. 13.01.1935 குடி அரசின் அட்டையில்,
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் – அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் – அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு
என்ற குறள்கள் இடம்பெற்றுள்ளன. 25.12.1938 இதழ்வரை மேற்சுட்டிய குறள்கள் இடம் பெற்றுள்ளன.