தோழர்களின் தொய்வில்லா களப்பணிகளோடு 2016இல் கழகம் பதித்த சுவடுகள்

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்; பெரியார் பயிலரங்கங்கள்; மூட நம்பிக்கை களுக்கு எதிரான பரப்புரைப் பயணம்; ஜாதி ஆணவக் கொலை எதிர்ப்பு; கண்டன ஆர்ப் பாட்டங்கள்; கைதுகள் என்று 2016ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகம் தொய்வின்றி களப்பணியாற்றியது. சுயநலம், சந்தர்ப்பவாத அரசியல் மேலோங்கி நிற்கும் சமூக சூழலில், பெரியார் இலட்சியங்களை ஏற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் – சமுதாயக் கவலையோடு உழைப்பு, நேரம், சொந்தப் பொருளை செலவிட்டு, பெரியார் கொள்கைப் பணிகளுக்காக தங்களை அர்ப் பணித்திருக்கிறார்கள். இத்தகைய தோழர் களின் கொள்கை உணர்வும் களப் பணிகளுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் உண்மை யான வலிமை என்று பெருமையோடு,  கடந்த ஆண்டில் கழகத்தின் களப்பணிகள் குறித்த ஒரு சுருக்கமான தொகுப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.

ஜனவரி 24 அன்று திருச்சியில் கழக செயலவை கூடியது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு தோழர்கள் திரட்டிய சந்தாக்களை வழங்கினர். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி படித்த ‘ரோகித் வெமுலா’ என்ற தலித் மாணவர், பல்கலைக் கழகத்தின் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அம்பேத்கர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி, மதவெறி எதிர்ப்பு – மனித உரிமை மற்றும் சமூக நீதிக் கருத்துகளை மாணவர் களிடம் பரப்பியதற்காக மத்திய  அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனம், மத்திய அமைச்சர்களின் தலையீடு காரணமாக ரோகித் வெமுலா உள்ளிட்ட 5 தலித் மாணவர்களை விடுதியிலிருந்து நீக்கியது. அவமதிப்புகளை சகிக்க முடியாத ரோகித், “எனது பிறப்பு ஒரு மோசமான விபத்து” என்று உள்ளத்தை உருகச் செய்யும் கவித்துவமான ஒரு கடிதத்தை எழுதி வைத்து, கல்லூரி வளாகத்துக்குள்ளேயே உயிரை மாய்த்துக் கொண்டார்.

இவரது மரணத்துக்கு நீதி கேட்டு – “துரோணாச் சாரி வாரிசுகளா உயர்கல்வி நிறுவனங்கள்?” என்ற கேள்வியோடு பிப்ரவரி முதல் தேதி கண்டன ஆர்ப் பாட்டங்களை நடத்த கழக செயலவை முடிவு செய்தது. சென்னை, மேட்டூர், திருப்பூர், கிருட்டிணகிரி, பள்ளிப் பாளையம், மன்னை, தூத்துக்குடி, பழனி, வேலூர், சேலம், ஈரோடு, பேராவூரணி ஆகிய ஊர்களில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்

காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30ஆம் நாள் சங்கராபுரத்தில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை விழுப்புரம் மாவட்டக் கழகத் தோழர்கள் பேரணியுடன் எழுச்சியோடு நடத்தினர்.

தொடர்ந்து எதிர்ப்பு மாநாடுகள் பிப்ரவரி மாதம் முழுதும் கழக சார்பில் நடத்தப்பட்டன. பிப்.27 அன்று மதுரையிலும், 28 கோபியிலும் மாநாடுகள் எழுச்சி யுடன் நடந்தன. காவல்துறை மாநாடுகளுக்கு அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்ற அனுமதி பெற்று மாநாடுகள் திட்டமிட்டபடி நடந்தன.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து பெரியார் சிலைகளை மூடக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் கழக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பெரியார் சிலைகளை மூட மாடடோம்; சிலைக்கு அடியில் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களையும் மூட மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் அறிவித்தது.

உடுமலைப்பேட்டையில் சங்கர் என்ற தலித் பொறியியல் மாணவரும், கவுசல்யா என்ற ஆதிக்க ஜாதியைச் சார்ந்த அதே கல்லூரியில் படித்த மாணவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் காரணமாக சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து – சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களிலேயே (மார்ச் 16) சென்னை – திருப்பூரில் கழக சார்பில் காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி, கழகத் தோழர்கள் கைதானார்கள். நெமிலியில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கழகத்தின் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு மவுனத்தைக் கலைத்தது. ஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்பாக பல வழக்குகள் பதிவாகாமலேயே மறைக்கப்பட்டுவிட்டன என்ற உண்மையை உயர் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ஆங்கில நாளேடு (னவ சூநஒவ) இந்த செய்தியை வெளியிட்டது.

புதுக்கோட்டை ஆலங்குடிப் பகுதியைச் சார்ந்த வினோத் எனும் தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா என்ற இடைநிலை ஜாதியைச் சார்ந்த பெண்ணை அவரது பெற்றோரே தனி அறையில் பூட்டி, சித்திரவதை செய்ததை அறிந்த கழகத் தோழர்கள் முகநூலில் பதிவிட்டு அம்பலப்படுத்தினர். அதற்குப் பிறகுதான் காவல்துறை செயல்படத் தொடங்கியது. அந்தப் பெண்ணை காவல்துறை மீட்டு திருச்சியில் பெண்கள் விடுதி ஒன்றில்  சேர்த்தது.

பொறியியல் கல்லூரியில் படித்த கவுன்டர் ஜாதியைச் சேர்ந்த நவீனா, பெரியண்ணன் என்ற நாடார் சமூக இளைஞரை காதலித்து, மேட்டூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் திருமணத்தையும் பதிவு செய்தனர். திருமணத்துக்குப் பிறகு தொட்டில் பாளையத்திலுள்ள கணவரின் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கொங்கு வேளாளர் ஜாதிப் பெண்கள் வேறு ஜாதியினரை திருமணம் செய்யவிடாமல் தடுப்பதற்காக செயல்படும் ‘ஜாதி வெறி கண்காணிப்பு’ கும்பல் பெண்ணை கடத்தி, இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணின் கருவையும் கட்டாயப்படுத்தி கலைத்து தனி இடத்தில் அடைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். இப்படி சித்திரவதை செய்வதற்காகவே இந்த ஜாதி வெறியர்கள் முகாம் ஒன்றையும் நடத்துவதாகவும், பல பெண்கள் இந்த முகாமில் சித்திரவதைக்குள்ளாகி, பிற ஜாதி காதலர்கள், கணவர்களிடமிருந்து பிரிக்கப்படு கிறார்கள் என்றும் தகவல்கள் வந்தன.  கழகம் தலையிட்டு உயர்நீதிமன்றத்தில் நவீனாவுக்காக ஆட்கொணர்வு மனு தாக்கல்செய்தது. அப்போது இந்த சித்திரவதைக்கு துணையாக காவல்துறை பொய் சாட்சி சொன்னதும், மருத்துவர்கள் பொய்யான மருத்துவ அறிக்கை தந்ததும் அம்பலமானது. சித்திரவதைக்குள்ளான நவீனாவும், வேறு நான்கு கவுண்டர் ஜாதி பெண்களும் சித்திரவதை முகாமிலிருந்து தப்பி வெளி வந்தனர்.

கொளத்தூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம், நவீனா-பெரியண்ணன் ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்ததோடு பெண்களை கடத்தி சித்திரவதை செய்த கும்பல் மீதும் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக மேற்கொண்டு, இணையரை காப்பாற்றியது. கழகத்தின் தலைவர் பத்திரிகையாளர்களிடம் இந்த சித்திரவதைக்கு துணை நின்ற, காவல்துறை மருத்துவர் பெயர்களை வெளியிட்டு அம்பலப்படுத்தினார்.

பயிலரங்கங்கள்

ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக இயக்கங்களை நடத்திய கழகம், மார்ச் மாதத்திலிருந்து பெரியாரியல் பயிலரங்குகளை நடத்தத் தொடங்கியது. மார்ச் 3ஆம் தேதி திருப்பூரில் கோவை, திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்களுக்காக ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது. ஏப்.17, 18இல் பவானி கூடு துறையில் இரண்டு நாள் பயிலரங்கம் நடந்தது. ஏப்.30 சென்னையில் ஒருநாள், மே 17, 18இல் கொளத்தூர் பாலமலையில் இரண்டு நாள் பயிலரங்கமும், மே 26, 27 தேதிகளில் குடியாத்தம் இராமலையில் இரண்டு நாள் பயிலரங்கங்களும் சிறப்புடன் நடந்தன.  அக் 23ஆம் தேதி மேட்டூரில் சேலம் (மேற்கு) மாவட்டக் கழக சார்பில் ஒரு நாள் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது.

நடைபாதை கோயில்களுக்கு எதிராக…

உச்சநீதிமன்றம் நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தது. நடைபாதை கோயில்களை அகற்றும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் உச்சநீதிமன்றத் துக்கு அறிவிக்கவேண்டும் என்று கடும் எச்சரிக்கை  19.4.2016இல் விடுத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்த வற்புறுத்தி, ஏப்.28 அன்று திருப்பூர், மேட்டூர், பொள்ளாச்சி, கோவையில் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை யில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் நிலைப்பாடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க ஏப்.19 அன்று திருப்பூரில் கழக தலைமைக் குழு கூடியது. தி.மு.க., அ.தி.மு.க. மக்கள் நலக் கூட்டணி என்று மூன்று அணிகள் களத்தில் நின்றன. தேர்தல் களம் குழப்பத்தின் உச்சியில் இருந்தது. எந்த ஒரு அணிக்கும் அப்படியே ஆதரவு வழங்கத் தேவை யில்லை என்ற தெளிவான முடிவுக்கு கழகம் வந்தது. ஆழமான விவாதங்கள் நடந்தன. பெரியாரியல் கண்ணோட்டத் தில் விருப்பு வெறுப்புகளின்றி தேர்தல் களத்தை கழகம் பரிசீலித்தது.

ஜாதிய ஒடுக்குமுறை இந்துத்துவா எதிர்ப்பு என்று மக்கள் மன்றத்தில் நடத்தப்பட வேண்டிய போராட்டங் களுக்கு துணையாக நிற்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்ற பார்வையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்ற பார்வையில் அக்கட்சியை வீழ்த்தும் சக்தியாக இருந்த  தி.மு.க. வேட்பாளர்களை ஏனைய தொகுதி களிலும் ஆதரிக்க கழகம் முடிவு செய்தது. அதே நேரத்தில் குற்றப் பின்னணி கொண்ட ‘தளி’ தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்றும் கழகம் முடிவு செய்தது. சரியான அணுகுமுறையில் கழகம் மேற்கொண்ட முடிவை இணைய தளங்களில் பலரும் வரவேற்று எழுதினர். தளி தொகுதியில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிராக தி.மு.க வேட்பாளரை ஆதரித்து கழகம் பிரச்சாரம் செய்தது.

பரப்புரை இயக்கம்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜூன் 25ஆம் தேதி மேட்டூரில் கழக செயலவை கூடியது. மத்திய அரசின் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்தும், அரசியல் சட்டத் தின் எட்டாவது அட்டவணையில் சமஸ்கிருதத்தை நீக்கக் கோரியும், ஜூலை 8ஆம் தேதி ஆர்ப்பாட் டங்களை நடத்த செயலவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சென்னை, வேலூர், மயிலாடுதுறை, திருச்சி, நாமக்கல், திருப்பூர், மேட்டுப் பாளையம், சேலம், தூத்துக்குடி, சங்கராபுரம், மன்னார்குடி, நாகர்கோயில் ஆகிய ஊர்களில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. தமிழகம் தழுவிய அறிவியல் பரப்புரைக்கும் மேட்டூரில் கூடிய கழக செயலவை திட்டமிட்டது; இதை மிகவும் முக்கிய செயல் திட்டமாக கழகம் கருதியது. “நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்து நான்கு பரப்புரை அணிகள் புறப்பட திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. சத்தியமங்கலம், சென்னை, மயிலாடுதுறை, திருப்பூர் என்று நான்கு ஊர்களிலிருந்து பரப்புரை குழுக்கள், ஆகஸ்ட் 7ஆம் தேதி புறப்பட்டு, 12ஆம் தேதி வரை பல நூறு நகரங்கள், கிராமங்களில் காலை முதல் இரவு வரை பரப்புரை கூட்டங்கள் நடந்தன. பல்லாயிரக்கணக்கில் துண்டறிக்கைகள் மக்களிடம் சேர்க்கப்பட்டன. கழகத்தின் துண்டறிக்கையும் பரப்புரையும் மக்களின் பேராதரவைப் பெற்றது. நான்கு அணிகளிலும் கழகத் தோழர்கள் பங்கேற்று முழு வீச்சில் செயல்பட்டனர். பரப்புரைப் பயணத்தை விளக்கும் சுவரெழுத்துகளை கழகத் தோழர்கள் எழுதினார்கள்.  பரப்புரைக்காக கழகத்தின் சார்பில் புதிய வெளியீடுகள் கொண்டு வரப்பட்டன. கடந்த ஆண்டில் கழகத்தின் குறிப்பிடத் தக்க செயல்களமாக இது அமைந்தது. மக்களின் பேரா தரவு தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.

சென்னை அணியினரின் பரப்புரைத் தாக்கத்தால் மதவெறி சக்திகள் கலக்கமடைந்து, முதல் இரண்டு நாள்களிலேயே கலவரங்களை உருவாக்கினர். தொடர்ந்து காவல்துறை சென்னை அணியின் பரப்புரைக்கு தடை போட்டது. சென்னை அணி தோழர்கள், சத்தியமங்கலம் அணியில் இணைந்து பரப்புரை இயக்கத்தைத் தொடர்ந்தனர். (இப்போது நீதிமன்றத்தில் கழக சார்பில் வழக்கு தொடர்ந்து தடை செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் பரப்புரை நடத்தும் அனுமதியை கழகம் பெற்றிருக்கிறது) ஆகஸ்ட் 12ஆம் தேதி சேலம் ஆத்தூரில் நான்கு பரப்புரைக் குழுவினரும் இணைந்து நடத்திய நிறைவு விழா, மாநாடுபோல் பேரெழுச்சியுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகம் ஆக.12, 2012இல் தொடங்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாளவட்ட கழக சார்பில் நவீன சம்பூகன்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை அக்.27இல் ஒரு நாள் முழுதும் நடந்தது.

இந்து மதவெறிகளுக்கு எதிராக

செப்டம்பர் மாதத்தில் பதற்றத்தை உருவாக்கும் விநாயகன் ஊர்வலத்தில் நடக்கும் சட்ட மீறல்களை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையங்களில் கழகத் தோழர்கள் புகார் மனுக்களை அளித்தனர். இதனால் விநாயகன் ஊர்வலத்தில் நடக்கும் அத்துமீறல்கள், ஒலி பெருக்கி அலறல்கள் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், விநாயகன் ஊர்வலம் நடந்த செப்.11ஆம் தேதி அதை எதிர்த்து, ‘பெரியார் கைத்தடி’ ஊர்வலம் நடத்தியது. தோழர்கள் கைதானார்கள். பொள்ளாச்சியில் இதேபோல் பெரியார் கைத்தடி ஊர் வலத்தை அம்பேத்கர் இயக்கங்களுடன் இணைந்து கழகத் தோழர்கள் நடத்தி கைதானார்கள்.

கோவையில் இந்து முன்னணியைச் சார்ந்த ஒருவர் கொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து இந்துத்துவ வன்முறை சக்திகள் கோவையில் இஸ்லாமிய வணிக நிறுவனங்களை சூறையாடி பெரும் கொள்ளைகளையும் வன்முறைகளையும் அரங்கேற்றினர். இதைக் கண்டித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் 32 இயக்கங்களை ஒருங் கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தது. காவல்துறை தடை விதித் தது; தடையை மீறி 2500 தோழர்கள் கைதானார்கள். ஏராளமான இஸ்லாமி யர்களும் கைதானார்கள். கைதான தோழர்கள் 3 திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டனர். உரிய நேரத்தில் கள மிறங்கிய கழக முயற்சியை இஸ்லாமிய அமைப்புகள் மனம் திறந்து பாராட்டின.

காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதித்து மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த பா.ஜ.க.வைக் கண்டித்து அதன் சென்னை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அக்டோபர் 27ஆம் நாள் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் நடத்தி கைதானார்கள். தொடர்ச்சி யான களப்பணிகளோடு தோழர்கள், கழக ஏட்டுக்கு சந்தா  சேர்க்கும் இயக்கம், சமூகக் கட்டமைப்பு நிதி திரட்டுதலிலும் இறங்கினர். இதற் கிடையே தொடர்ந்து டிசம்பர் 24இல் சேலம் மாநாடு அறிவிக்கப்பட்டது.

வேத மரபு மறுப்பு மாநாடு

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று வேத மரபு மறுப்பு மாநாட்டை சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. காலை முதல் இரவு வரை கருத்தரங் கங்கள் மாலை திறந்தவெளி மாநாடாக சிறப்புடன் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர்மணியின் பரப்புரைப் பயணத்துக்காக மகிழுந்து கழக சார்பில் வழங்கப்பட்டது. தலைமைக் கழகத்தின் பயன் பாட்டுக்காக ஆட்டோ வாங்குவதற்கான தொகையையும், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு தோழர்கள் திரட்டிய சந்தாக்கள், அதற்கான நிதியும் மாநாட்டில் வழங்கப்பட்டன.

இயக்கப் பணிகளையே தங்கள் வாழ்க்கையாக்கிக் கொண்டு முழு நேரமாக செயல்பட்டு வரும் கழகத் தோழர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களின் தொய்வில்லாத நம்பிக்கை, உழைப்பு இவைகளே இத்தகைய தொடர் பணிகளை சாத்தியப்படுத்தின என்றால் அது மிகையாகாது. இந்தப் பயணம்  தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அறிவியல் மன்றத்தின் சிறப்பான செயல்பாடுகள்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் கடந்த ஆண்டு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டது. மே 20 தொடங்கி, 24ஆம் தேதி வரை திண்டுக்கல்லில் நடத்திய குழந்தைகள் மகிழ்வு பழகு முகாம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

45 குழந்தைகள் பங்கேற்றனர். முகாம் நிறைவு நாளில் பிரிய மனமின்றி குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுததே முகாம் ஊட்டிய உணர்வு களுக்கு சான்றாக இருந்தது.

அறிவியல் மன்றம் மகளிர் சந்திப்புகளையும், திருப்பூர், திருச்செங்கோடு, கோபி, மேட்டூரில் நடத்தியது. பெண்கள் பங்கேற்று கூட்டு விவாதங்களை நடத்தினர். பெரியாரியப் பெண்ணுரிமை சிந்தனைகள், சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களை எதிர்கொள்வது குறித்து ஆழமான விவாதங்கள் நடந்தன.

கூட்டமைப்பு வழியாக கழக செயல்பாடுகள்

கடந்த ஆண்டில் திராவிடர் விடுதலைக் கழகம் தனது களப்பணிகள் மட்டுமின்றி, பல கூட்டமைப்புகளிலும் இடம் பெற்று செயல்பட்டது. நீண்ட நாள் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கான விடுதலை, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கூட்டியக்க செயல்பாடுகள், ஆணவக் கொலை எதிர்ப்பு கூட்டியக்கம், ஏதிலிகள் உரிமைகளுக்கான கூட்டமைப்பு, 7 தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு, காவி எதிர்ப்பு கூட்டமைப்பு, இந்துத்துவ எதிர்ப்பு கூட்டமைப்பு, அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு போன்ற கூட்டமைப்புகளிலும் கழகம் பங்கேற்று கடமையாற்றியது.

2016இல் கழக வெளியீடுகள்

  • 2016ஆம் ஆண்டு கழகம் 5 நூல்களை வெளியிட்டது. பேய் பில்லி சூன்யம் பொய், சமஸ்கிருதப் படை எடுப்பு, விஞ்ஞானிகளை அழித்த மதவெறி, வளர்ந்தது விஞ்ஞானம், வீழ்ந்தன மூடநம்பிக்கைகள், வரலாற்றில் பார்ப்பன வன்முறைகள் ஆகிய 5 நூல்கள் வெளியிடப்பட்டன.
  • ‘நிமிர்வோம்’ என்ற மாத இதழை டிசம்பர் மாதம் கழகம் தொடங்கியது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏடு தவிர, இந்த மாத இதழும் இனி தொடர்ந்து வெளி வரும்.
  • 2017ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியையும் கழகம் வெளியிட்டுள்ளது. இது தவிர சமஸ்கிருத எதிர்ப்பு; மூடநம்பிக்கை எதிர்ப்பு; ஜாதி ஒழிப்பு; உயர் கல்வியில் பார்ப்பன ஆதிக்கம்; தீபாவளி கண்டனம் உள்ளிட்ட ஏராளமான துண்டறிக்கைகளையும் தயாரித்து, மக்களிடம் பரப்பியது.

பொதுக் கூட்டங்கள்; தெருமுனைக் கூட்டங்கள்

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது தவிர கழகத் தோழர்கள் அவ்வப்போது தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கூட்டமைப்போடு இணைந்து போராட் டங்களில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். அவை இட நெருக்கடி காரணமாக இத் தொகுப்பில்  இடம் பெறவில்லை.

விடை பெற்றுக் கொண்ட கொள்கையாளர்கள்

கடந்த ஆண்டில் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட கழகக் கொள்கை யாளர்கள்: பட்டுக்கோட்டை சதாசிவம், தாதம்பட்டி ராஜூ, மாணவர் நகலக உரிமை யாளர் அருணாசலம், குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின், பெரியார் நூல்களை கன்னட மொழியில் மொழி பெயர்த்த வேமன்னா, திருச்சி இளந்தாடி துரையரசன், ஏ.ஜி.கே. என்று அழைக்கப்படும் ஏ.ஜி.கஸ்தூரி ரங்கன், மக்கள் கவிஞர் இன்குலாப் ஆகியோர்  குறிப்பிடத்தக்கவர்கள்.

சமூகக் கவலையோடு வெளிவந்த திரைப்படங்கள்

கடந்த ஆண்டில் சமூகக் கவலையோடு பல திரைப்படங்கள் வெளிவந்தன. பல இளம் இயக்குனர்களின் திரைப்படம் சமூகத்தில் நல்ல தாக்கத்தை உருவாக்கியது. சுசீந்திரனின் ‘மாவீரன் கிட்டு’ துணிச்சலாக ஜாதிய ஒடுக்குமுறையையும், ராஜு முருகனின் ‘ஜோக்கர்’ – அதிகார அமைப்பு, மக்கள் மீது நடத்தும் சுரண்டல்களையும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ – பெரியாரின் பெண் விடுதலை சிந்தனையையும் துணிவோடு பேசியது, தமிழக திரைப்பட உலகில் பல இளைஞர்கள் சமூகப் பார்வையோடு களம் இறங்கியிருப்பது நல்ல நம்பிக்கை தருகிறது. ‘மெட்ராஸ்’ திரைப்படத்தை இயக்கிய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இயக்குனர் ரஞ்சித், ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கும் நிலைக்கு உயர்ந்ததோடு, ஜாதி எதிர்ப்பாளராக மேடைகளில் தன்னை துணிவோடு அடையாளம் காட்டி வருகிறார்.

தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

பெரியார் முழக்கம் 05012017 இதழ்

You may also like...