உடுமலை சங்கர் படுகொலை – கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தினத்தந்தி 05042016

”ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றார் கொளத்தூர் மணி” என கழக தலைவர் குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை சில தொலைக்காட்சிகளும்,அதனை ஒட்டி சில முகநூல் ஜாதிவெறி பதிவர்களும் பதிவு செய்கிறார்கள் என அறிகிறோம்.
அந்த வழக்கின் உண்மை நிலை குறித்து தோழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என இந்த சிறு விளக்கத்தை அளிக்கிறோம்.
கழகத்தின் சார்பில் சென்னைஉயர் நீதி மன்றத்தில் ஜாதி ஆணவ படுகொலைகளை ஒட்டி வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அவ்வழக்கின் விவரம் :
1)ஜாதி மறுப்பு இணையருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் (லதாசிங் (உ.பி),ஆறுமுக சேர்வை (தமிழ்நாடு))வழங்கியுள்ள தீர்ப்பில் உள்ள வழிகாட்டுதல்களை தமிழக அரசு உடனே அமுல் படுத்த வேண்டும்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட உடுமைப்பேட்டை சங்கர்-கெளசல்யா இணையர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையை அணுகி பலமுறை மனு கொடுத்திருந்தும் அவர்களுக்கு காவல்துறை தக்க பாதுகாப்பு வழங்காகாததால் சங்கர் படுகொலை செய்யப்பட்டும்,கெளசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தாக்கப்படுள்ளார். எனவே மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சங்கர் கெளசல்யா இணையருக்கு பாதுகாப்பு வழங்க தவறிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
2)ஜாதி மறுப்பு இணையருக்கு பாதுகாப்பளிக்கும் வகையிலும்,அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் ஜாதி வெறியர்களால் கொடுக்கப்படும் மிரட்டல்கள், தாக்குதல்கள் ஆகியவற்றை விசாரித்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்க்கு வசதியாக மாவட்ட வாரியாக காவல்துறையில் தனிப்பிரிவை உடனடியாக உண்டாக்கவேண்டும்.
3)ஜாதி மறுப்பு திருமணம் சம்பந்தமான உச்சநீதிமன்றத்தில் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழக அரசின் உள்துறை என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து தமிழக அரசின் விளக்கம் தேவை.
என வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் எம்.எம்.சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பில்
இவ்வழக்கை இன்னும் விரிவான ஆவணங்களுடனும்,
தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக நடைபெற்ற ஜாதி மறுப்பு இணையர்களுக்கு நேர்ந்த பதியப்பட்ட அசம்பாவிதங்கள் குறித்து அரசிடமிருந்து தக்க ஆவணங்களைப் பெற்றும், தேர்தலுக்கு பின் மீண்டும் வழக்கு தொடர அனுமதியுடன் தற்போதைய வழக்கை திரும்ப பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியதன் பேரில் இன்று இந்த வழக்கு தற்சமயம் திரும்ப பெறப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இவ்வழக்கு குறித்த விரிவான ஆவணங்களையும்,தகவல்பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களையும் பெறும் பணியில் கழக வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.தேர்தலுக்குப்பின் இந்த வழக்கு மீண்டும் கழகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும்.
ஜாதிமறுப்பு இணையர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் வரையிலும்,ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையிலும் கழகத்தின் சட்ட போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.பெரியார் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் கழகம் எந்தவித சுணக்கமும் இன்றி நீதி மன்றங்களில் சட்டப் போராட்டத்தையும்,மக்கள் மன்றத்தில் ஜனநாயக போராட்டத்தையும் வலிமையுடன் மேற்கொள்ளும்.

26809353d61a818bd62a64c703467bbf

You may also like...