‘கணித மேதை’யின் கதை

‘கணித மேதை’ என்று அழைக்கப்படும் ராமானுஜம் (அய்யங்கார்) வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார், பெரியார் படத்தை இயக்கிய ஞான. ராஜசேகரன். இந்திய சமூகம், சிறந்த அறிவாளிகளை அங்கீகரிப்பது  இல்லை என்பதே இந்தப் படத்தின் மய்யமான கருத்து என்றும், வேதகாலத்திலிருந்தே இதுதான் நிலை என்றும்  அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிற்காலத்தில் கணிதத்தில் மேதையாக விளங்கிய இராமானுஜம், ‘இன்டர்மீடியட்’ படிப்பில் தோல்வி அடைந்தவர் என்பது, ஒரு முக்கிய செய்தி. மதிப்பெண் – ஒருவருடைய அறிவாற்றலுக்கான மதிப்பீடு இல்லை என்பதற்கு இவரே ஒரு உதாரணம் தான்! குடும்பத்துக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடி விட்டார். அவரது தந்தை 1905 ஆம் ஆண்டு மகனைக் காணவில்லை என்று ‘இந்து’ ஏட்டில் படத்துடன் விளம்பரம் செய்து மகனைக் கண்டுபிடித்தார். ஜி.எச்.ஹார்டி என்ற வெளிநாட்டுக்காரர்தான் – இராமானுஜத்தின் அறிவைக் கண்டறிந்து, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார். சென்னை திரும்பிய இராமானுஜர், இறுதி காலத்தில் அவரது பார்ப்பன உறவினர்களாலே ஒதுக்கி வைக்கப்பட்டார். “பிராமணன் கடல் தாண்டிப் போகக் கூடாது” என்ற சம்பிரதாயத்தை இராமானுஜம் மீறிவிட்டார் என்பதே அதற்குக் காரணம். இராமானுஜம் மரணத்தின் போதுகூட பார்ப்பனர்கள் எவரும் வரவில்லை. ‘இந்து’ நாளேட்டின் உரிமையாளரான கஸ் தூரி ரங்க அய்யங்கார்தான் அவரது உடல் அடக்கத்துக்கு ஏற்பாடுகளை செய்தார் என்ற தகவல்களை இயக்குநர் இராஜசேகரன் கூறினார்.

இதே பார்ப்பனர்கள்தான் ‘கடல் தாண்டுவது பாவம்’ என்ற கொள்கையை உதறித் தள்ளிவிட்டு வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, ‘பிராமண தர்மம்’ பேசிக் கொண்டிருக் கிறார்கள். தன்னை வளர்த்துக் கொள்ள பார்ப்பனியம் எந்த மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ள தயங்காது, சமூகம் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும்போதுதான் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

பெரியார் முழக்கம் 23102013 இதழ்

You may also like...