திருமணம் வேண்டாதது! பெரியார்
உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களைவிடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது.
மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்திவிட்டன. குறிப்பாகப் பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்ச்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப்போலத்தான் மக்களில் சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிபோடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் – நல்ல துணிமணி வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.
பிராமணன்-சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன்-பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம்.
இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால், ‘கலியாணம்’ என்பதையே சட்ட விரோதமாக ஆக்கவேண்டும். இந்தக் ‘கலியாணம்’ என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன்-மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகிவிட்டால் அதோடு சரி – அவள் ஒரு சரியான அடிமை! அதுமட்டுமல்ல – இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் – அவற்றுக்குச் சொத்துக்கள் சம்பாதிப்பது – அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக்கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன.
மந்திரி ஆகிறவன்கூட, கலெக்டர் ஆகிறவன்கூடப் பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றத்தானே இருக்கிறான். இந்த வகையில் அமைப்பு முறை என்றால், உலகத்தைப் பற்றியோ சமுதாயத்தைப் பற்றியோ எவன் கவலைப்படுவான்? பொது உணர்ச்சி எப்படி ஏற்படும்? அவனவடன் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைக்கே ஈடு கொடுத்துக் கொண்டு இருப்பதென்றால், சமுதாய உணர்ச்சி எப்படி ஏற்பட முடியும்?
இந்தக் கலியாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாத்திரங்களில் சூத்திரனுக்குக் கலியாண முறையே இல்லையே!
தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் – அய்யர் யாத்தனர் கரணம் – என்ப” என்று இருக்கிறதே! “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே” என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்தெல்லாம் சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.
பெரும்பகுதி மக்களைச் சூத்திரனாக்க – உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப்போலத்தான் – பெண்களை அடிமையாக்கக் ‘கலியாணம்’ என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.
தவம், சூத்திரச் சம்பூகன் எப்படிச் செய்யக்கூடாது என்று இராமாயணத் தத்துவம் கூறுகிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான், வள்ளுவனும் பெண்கள் கடவுளைத் தொழாமல் கணவனையே தொழ வேண்டும் என்று எழுதி வைத்து இருக்கிறான்.
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
– என்ற குறள் அதுதான்.
இந்நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள்.
இதைத்தான் நமது இதிகாசங்களும் புராணங்களும் சாத்திரங்களும் வலியுறுத்துகின்றன.
வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதி இருக்கிறானே தவிர ஆண்களோடு சரி சமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே!
ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்தரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?
முசுலிமை எடுத்துக்கொண்டால் பெண்களை, உலகத்தைக்கூடப் பார்க்கவிடமாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதைவிடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?
நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்துவிடுவானே! சாந்தி முகூர்த்தம் நடந்த மறுநாளே அந்தப் பெண் ஆ°பத்திரிக்குப் போய் விடுவாள் – இவ்வளவு காட்டு மிராண்டித்தனங்களும் பெண்கள்மீது சுமத்தப்பட்டு இருந்தனவே! பெண்களுக்காவது உணர்ச்சி வரவேண்டாமா? சிங்காரிப்பது – ஜோடித்துக் கொள்வது – சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வரவேண்டாமா?
உலகிலே மற்ற நாட்டுக்காரன் எல்லாம் எப்படி எப்படி முன்னேறி வருகிறான்? வெள்ளைக் காரன் என்ன நம்மைவிடப் புத்தியுள்ளவனா? இயற்கையிலே நம்மைவிட அவன் அறிவில் குறைந்தவன்தானே – அவனோ குளிர்தேசத்துக்காரன்; நாமோ உஷ்ண தேசத்துக்காரன். பாம்புக்குக்கூட உஷ்ண தேசத்துப் பாம்புக்குத்தான் விஷம் அதிகம். பூவில்கூட உஷ்ணதேசத்துப் பூவுக்குத்தான் மணமும் மதிப்பும் அதிகம். அந்த இயற்கை அமைப்புப்படி, நாம் இயற்கையிலேயே அவர்களைவிட அறிவாளிகள்தான். இருந்தாலும் அவர்களின் முன்னேற்றம் எங்கே? நம் நிலை எங்கே? காரணம் – அவன் அறிவைப் பயன்படுத்தினான் – நாமோ பயன்படுத்தத் தவறி விட்டோம். அறிவைப் பயன்படுத்தினால் நாமும் அவனைவிட வேகமாக முன்னேற்ற மடையலாம்.
நான் 1932 இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, “Proposed husband and wife” என்றார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். “நாங்கள் உண்மையான கணவன்-மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர், நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்” என்றார்கள். “எவ்வளவு காலமாக?” என்று கேட்டேன். “எட்டு மாதமாக” என்றார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? ‘பதிவிரதம்’ பேசி, பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?
‘விடுதலை’ 28.6.1973
பெரியார் முழக்கம் இதழ் 05122013