தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

திமிறிக் கொண்டு ஓடும் காளைகளை மடக்கிப் பிடித்து, அதன் கொம்புகளால் ‘தமிழர்கள்’ உடல் கிழிக்கப்பட்டு சிந்தும் இரத்தத்தைப் பார்க்க தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருக்கின்றன. மாட்டை அடக்கும் முயற்சியில் மனிதர்கள் செத்துப் பிணமாவது கூட இவர்கள் பார்வையில் தமிழர் வீரமாக போற்றப்படுகிறது.
ஜாதி இல்லாமல் வாழ்ந்தது தான் தமிழர் பண்பாடு. இப்போது ஜாதி வெறியையும் தீண்டாமை ஒடுக்குமுறைகளை யும் அப்பட்டமாக வெளிப்படுத்தும்போது ‘இதுதான் தமிழ்ப் பண்பாடா’ என்று மாட்டுக்காக மல்லுக்கட்டுகிறவர்கள் ஏன் கேட்கவில்லை? எங்கே போனது தமிழ்ப் பண்பாடு? இதைக் கேட்டால், காதை திருப்பிக் கொள்கிறார்கள். “மாடுகளை வண்டிகளில் பூட்டி, சித்திரவதை செய்யப்படுவதை எவரும் எதிர்ப்பது இல்லை. ஆனால், மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டை மட்டும் மிருக சித்திரவதை என்பது என்ன நியாயம்?” என்று தொலைக்காட்சிகளில் வாதிடுகிறார்கள். மிருகவதையைவிட இதில் மேலோங்கி நிற்பது மனித வதைதான் என்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள்.
1999இல் ஜல்லிக்கட்டு நடந்தபோது தலித் மக்களை ஜாதியைச் சொல்லி திட்டியதால் கலவரம் வெடித்து ஒரு தலித் படுகொலை செய்யப்பட்டார். வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆறுமுகம் சேர்வை, உச்சநீதிமன்றம் வரை போனார். அப்போதுதான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜு, அளித்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் கிராமங்களில் பின்பற்றப்படும் தீண்டாமைக் கொடுமைகளை சுட்டிக்காட்டினார். அதுமட்டுமல்ல, தீண்டாமைக் குற்றங்களைத் தடுத்து நிறுத்தாத மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தார். தீர்ப்பின் நகலை உச்சநீதிமன்றமே நேரடியாக தமிழக அரசுக்கும், மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தது.
ஜல்லிக்கட்டு ஜாதியமைப்போடு பிணைந்து நிற்கிறது. ஜாதியின் ஓட்டுகளைக் குறி வைக்கும் அரசியல் கட்சிகள், அதனாலேயே இதில் அதீத ஆர்வம் காட்டிக் கொண்டிருக் கின்றன. ஜல்லிக்கட்டு, தமிழர் அடையாளம் என்றால், அது ஏன் தமிழகம் முழுதும் நடத்தப்படவில்லை? காயத்துக்கும் மரணத்துக்கும் உள்ளாகும் தமிழர்களின் குடும்பத்துப் பெண்கள் சந்திக்கும் அவலங்களைப் பற்றி ஏன் சிந்திப்பதில்லை? தமிழர் பண்பாட்டின் வீரம், ஆண் ஆதிக்கப் பார்வையோடுதான் அணுகப்படுகிறது என்பது தானே இதில் அடங்கிக் கிடக்கும் உண்மை?
கிராமத்தில், மரத்தடியில் புதைப்பட்டுக் கிடக்கும் ‘பாறாங்கல்லை’ தூக்கிக் காட்டும் ‘வீரர்’களுக்கே பெண்களை மணம் முடித்துத் தருவது தமிழர் பண்பாடு என்கிறார்கள். “புலியை வீழ்த்தி, புலிப் பல்லை பிடுங்கி கழுத்தில் தாயத்தாகக் கட்டி வரும் மாவீரனுக்கே பெண்ணை திருமணத்துக்கு தருவேன்” என்பதுதான் தமிழ்ப் பண்பின் வீரம் என்று பெருமை பேசுவார்கள். தமிழ்ப் பண்பாட்டுக்காக இப்போது புலியை வேட்டையாடினால் சிறைக்குத்தான் போக வேண்டும். மூச்சைப் பிடித்து பாறாங்கல்லைத் தூக்கி நிறுத்த எந்தத் ‘தமிழ் வீரனும்’ முன்வர மாட்டான்.
ஜல்லிக்கட்டுதான் பழந்தமிழர் பண்பாடா என்றால் அதுவும் இல்லை. “பழந்தமிழன் கலாச்சாரம், ‘ஏறு தழுவுதல்’தான். அதாவது ஓடும் மாட்டை கட்டித் தழுவுவது; இப்போது நடப்பது போல் திமிறி ஓடும் காளையை மூர்க்கமாக அடக்குவது அல்ல” என்று 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டி யிருக்கிறது. (“Yeru Thazhuvu’ in Tamil tradition is to embrace bulls and not overpowering the bull to show human bravery.”)
‘ஸ்பெயின் நாட்டில் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துகிறார்கள்; அந்த நாட்டைப் பாருங்கள்’ என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் விவாதம் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு உண்மையை சுட்டிக்காட்ட வேண்டும். அங்கும் இந்த மாடுகளை அடக்கும் கலாச்சாரத்துக்கு எதிர்ப்புகள் வந்தன. உரிமையா? கலாச்சாரமா? என்று சட்ட விவாதங்கள் நடந்தன. நீண்டகாலம் நடந்த இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி 2012ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. உரிமைக் குரலே வென்றது. காளை அடக்கும் போட்டி நடக்கும் ‘கேட்ட லோனியா’ (Catalonia) மாநிலம், ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டு நிறுத்திவிட்டது. அதற்கு முன்பே 2002ஆம் ஆண்டு ஜெர்மனி, மிருகங்களுக்கும் அரசியல் சட்டப் பாதுகாப்பு வழங்கி, இந்த ‘மாட்டை அடக்கும்’ போட்டிகளை நிறுத்திவிட்டது.
ஜாதி மாறி காதலித்த குற்றத்துக்காக பெற்ற மகளையே உயிருடன் துடிதுடிக்க கொலை செய்து ஜாதி பெருமிதத்தைக் காப்பாற்றும் ‘வீரர்கள்’ தமிழர் சமூகத்தில் வந்து கொண்டிருக் கிறார்கள். வெறியாக மாறி வரும் இந்த வீரத்திற்குள் பதுங்கிக் கிடக்கும் ஜாதித் திமிரை அடக்கி, ஒடுக்குவதுதான் இப்போது தமிழர்களுக்கு தேவைப்படும் வீரமே தவிர, காளையோடு கட்டிப்பிடித்து உருண்டு, செத்து மடிவது அல்ல.
தமிழனின் வீரம், அவன் உடல் வலிமைக்குள் இல்லை. அவன் பேணிக் காப்பாற்றும் சுயமரியாதைப் பண்பாட்டிலும் சமத்துவத்துக்கான நாகரிகத்திலும்தான் அடங்கியிருக்கிறது.
பாவம்! ஜாதி-மத அடையாளங்களே இல்லாதவை இந்த மாடுகள். அந்த அடையாளங்களைக் கைவிடாத இந்த மனிதர்கள், இந்த பிராணிகளை அடக்குவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? என்று கேட்கத் தோன்றுகிறது.

பெரியார் முழக்கம் 07012016 இதழ்

You may also like...